Published:Updated:

அஜித்திடம் ‘அய்யப்பனும் கோஷியும்’ சச்சி சொல்லாத கதை!

இயக்குநர் சச்சி
பிரீமியம் ஸ்டோரி
இயக்குநர் சச்சி

தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதை வாங்க சச்சி இல்லாதது மிகுந்த வருத்தமாகவும் இருக்கிறது. ‘அய்யப்பனும் கோஷியும்' படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என சச்சி சொல்லவில்லை.

அஜித்திடம் ‘அய்யப்பனும் கோஷியும்’ சச்சி சொல்லாத கதை!

தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதை வாங்க சச்சி இல்லாதது மிகுந்த வருத்தமாகவும் இருக்கிறது. ‘அய்யப்பனும் கோஷியும்' படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என சச்சி சொல்லவில்லை.

Published:Updated:
இயக்குநர் சச்சி
பிரீமியம் ஸ்டோரி
இயக்குநர் சச்சி

`அய்யப்பனும் கோஷியும்' படம் இந்திய அளவில் கவனம் பெற்று, அதன் இயக்குநர் சச்சி என்ற சச்சிதானந்தனுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்படுள்ளது. ஆனால் விருது வாங்க அவர் இல்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதமே மறைந்துவிட்டார். சச்சியால் அறிமுகம் செய்யப்பட்ட `களக்காத்த சந்தனமேரம்' பாடல் புகழ் நஞ்சியம்மாவுக்கும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. தேசிய திரைப்பட விருதுகளுக்குத் தேர்வானவர்களும், ரசிகர்களும் இயக்குநர் சச்சிக்கு அஞ்சலியும் புகழ்மாலையும் சூட்டிவருகின்றனர். சச்சியின் மனைவி சிஜி சச்சியிடம் பேசினேன்.

‘‘தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதை வாங்க சச்சி இல்லாதது மிகுந்த வருத்தமாகவும் இருக்கிறது. ‘அய்யப்பனும் கோஷியும்' படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என சச்சி சொல்லவில்லை. ஆனால், ‘ஒருமுறை நாம் இருவரும் சேர்ந்து தேசிய விருது வாங்கப் போவோம்' என என்னிடம் உறுதியாகச் சொல்லியிருந்தார். இப்போது அவரது பிரதிநிதியாக நான் மட்டும் விருது வாங்கக் போகவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது'' எனச் சொல்லும்போதே அவரது குரல் உடைகிறது.

அஜித்திடம் ‘அய்யப்பனும் கோஷியும்’ சச்சி சொல்லாத கதை!

‘‘ராம் லீலா படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதி முடித்துவிட்டு 2016-ல் சபரிமலைக்குப் போய்விட்டுத் திரும்பி வரும் சமயத்தில் ஒரு ஹோட்டலில் தங்கினார். அப்போது சச்சிக்கு இடுப்புக்குக் கீழே தளர்ந்துபோனது. அதுதான் உடல்நலக்குறைவின் ஆரம்பம். அதன்பிறகு ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தோம். அவாஸ்குலர் நெக்ரோஸிஸ் (Avascular Necrosis) பாதிப்பு ஏற்பட்டதால் காலில் வெயிட் போட்டு சச்சிக்கு சிகிச்சை அளித்தார்கள். பலமுறை இடுப்புக்குக் கீழ் தளர்ந்துபோவதும், ஆயுர்வேத சிகிச்சையில் சரியாவதுமாக இருந்தது. நான்கு வருடங்கள் அப்படியே போக, இறுதியில் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதுதான் தீர்வு என்ற நிலை ஏற்பட்டது. ‘அய்யப்பனும் கோஷியும்' படம் முடித்து ஆபரேஷன் செய்யலாம் என முடிவெடுத்தார். கடுமையான வலியைத் தாங்கிக்கொண்டு மிகுந்த சிரமத்துக்கு மத்தியில்தான் ஷூட்டிங் நடத்தினார். அந்த வலிக்கான பலன் கிடைத்தது. அதைக் கொண்டாட அவர் இல்லை'' என்றவரிடம் நஞ்சியம்மாவுக்கு விருது கிடைத்தது பற்றிக் கேட்டோம்.

‘‘அய்யப்பனும் கோஷியும் படப் பாடலுக்காக நஞ்சியம்மாவுக்கு விருது கிடைக்கும் என சச்சி நம்பினார். நஞ்சியம்மாவின் பாட்டு இந்த உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று ஆசைப்பட்டார். நஞ்சியம்மா விருது கிடைத்ததும் என்னை போனில் அழைத்து, ‘ஆகஸ்ட் ஐந்தாம் தேதி எர்ணாகுளத்துக்கு வருகிறேன். வீட்டில் வைப்பதற்காக சச்சி சாரின் பெரிய போட்டோ எனக்கு வேணும்' எனக் கேட்டிருந்தார். நஞ்சியம்மாவுக்குக் கொடுப்பதற்காக சச்சியின் பெரிய போட்டோவைத் தயாராக்கிவருகிறேன்'' என்ற சிஜியின் கண்கள் கலங்குகின்றன.

சிஜி சச்சி
சிஜி சச்சி

‘‘சச்சியின் கதாபாத்திரங்களில் வெளிப்படும் தன்மானம், ஈகோ ஆகியவைதான் சச்சியின் சுபாவமாக இருந்தது. தன்மானத்தை அடகு வைத்து எந்தக் காரியமும் செய்யமாட்டார். ஈகோவை லேசாக உரசினாலும் காயப்படும் சுபாவம் அவருக்கு உண்டு. கோஷியும் சச்சிதான், அய்யப்பன் நாயரும் சச்சிதான். இரண்டு கதாபாத்திரங்களும் அவரது குணத்தைப் பிரதிபலிப்பவைதான்.

ஒரு நிமிடம் பேசும் மனிதரிடமும் உடனே ஒட்டிக்கொள்வார். உறவுகளை மதிக்கும் நபர் அவர். பெரியவர், சிறியவர் என்ற பேதம் பார்க்கமாட்டார். ஒரு மனிதனின் அடிப்படை குணம் என்னவென்று உடனே புரிந்துகொள்வார். அந்த குணத்தில் நின்றுதான் சச்சி கதை எழுதுகிறார். ‘எந்த மொழி பேசினாலும் மனிதரின் அடிப்படைக் குணம் ஒன்றுதானே. அதனால்தான் எல்லா மொழிகளிலும் என் கதையை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது’ என்பார்.

ஒரு படத்துக்கான கரு மனதில் தோன்றினால் அதைப் பற்றித் தேடித் தேடிப் படிப்பார். எந்த ஊர் அதற்கான கதைக்களமோ அங்கு போய்த் தங்கி அங்குள்ள மக்கள், அந்த இடத்தின் கலாசாரம் ஆகியவற்றை உள்வாங்குவார். எல்லாவற்றையும் நோட் செய்து ஸ்கிரிட் எழுதத் தயாராகும்போது மது குடிக்காமல், சிகரெட் பிடிக்காமல், அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பார். மூகாம்பிகை கோயில் அருகில் ரூம் போட்டுக் கதை முழுவதையும் எழுதி முடித்து, ஸ்கிரிப்டை மூகாம்பிகை கோயிலில் வைத்து பூஜித்துவிட்டு வருவார். எழுதுவதை தெய்விகமான விஷயமாகக் கருதினார். ‘தேவி எனக்கான வசனங்களை நூலில் கட்டி இறக்கித் தருவார்' என அடிக்கடி சொல்லுவார்'' என்றவரிடம் சச்சியின் நிறைவேறாத கனவு ஏதாவது இருந்ததா எனக் கேட்டேன்.

அஜித்திடம் ‘அய்யப்பனும் கோஷியும்’ சச்சி சொல்லாத கதை!

‘‘சினிமா இன்ஸ்டிடியூட்டில் படிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. வறுமையான குடும்பச் சூழல் ஒத்துழைக்கவில்லை. படித்து ஐகோர்ட்டில் வழக்கறிஞர் ஆன பிறகும் சினிமா அவரது தாகமாக இருந்தது. அது அவரைத் தன்வசம் இழுத்துக்கொண்டது. வீட்டில் இருக்கும்போது சினிமா பற்றியே பேசுவார், விவாதிப்பார். அவருக்கு நிறைய கனவுகள் இருந்தன. நல்ல சினிமாக்கள் செய்து கொஞ்சம் பணம் சேர்த்தபிறகு, விரும்பிய ஒரு சினிமா தயாரித்து உலகம் முழுவதும் திரைப்பட விழாக்களுக்குக் கொண்டு போகவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. நாவல் எழுத வேண்டும் என அடிக்கடி சொல்வார்.

‘அய்யப்பனும் கோஷியும்' ஒரு தொடக்கம்தான். அடுத்ததாக அவர் மனதில் வைத்திருந்த கதைகள் இதைவிடச் சிறப்புமிக்கவை. கதையை முழுமையாக எழுதி வைக்கும் பழக்கம் அவருக்கு இல்லை. ஆனால், எடுக்கப்போகும் சினிமாக்களுக்கான தொடக்கம், இன்டர்வல், க்ளைமாக்ஸ் ஆகியவற்றுக்கான குறிப்புகள் எழுதி வைத்திருப்பார். அவர் எழுதி வைத்திருக்கும் எல்லாக் கதைகளும் வருங்காலங்களில் சினிமாவாக வரும். அவர் என்னிடமும், அவரின் சகோதரி சஜிதாவிடமும் சொல்லிய சுமார் 20 கதைகள் உள்ளன. அந்தக் கதைகளை சினிமாவாக மாற்ற முயன்றுகொண்டிருக்கிறோம். அதில் அஜித்துக்கும் ஒரு கதை இருக்கிறது'' என்ற சிஜி, அதற்கான காரணத்தையும் சொல்கிறார்.

‘‘சச்சி எப்போதுமே கதையை குறிப்பிட்ட நடிகரை மனதில் வைத்தே எழுதுவார். ‘அய்யப்பனும் கோஷியும்' கதையில் வரும் அய்யப்பன் நாயர் கதாபாத்திரத்தை மம்மூட்டிக்காக எழுதினார். மம்மூட்டியிடமும் பேசினார். எதனால் அது நடக்கவில்லை எனத் தெரியவில்லை. மம்மூட்டியை வைத்து ஒரு சினிமா இயக்க வேண்டும் என்ற பெரிய ஆசை சச்சிக்கு இருந்தது. மற்றபடி அவர் யாருடைய ரசிகராகவும் இருந்ததில்லை. பிரித்விராஜுடன் கூடுதல் பந்தம் உண்டு. பிஜு மேனனிடம் சகோதரனைப் போலப் பழகினார்.

நஞ்சியம்மா
நஞ்சியம்மா

‘அய்யப்பனும் கோஷியும்' பார்த்துவிட்டு சச்சியிடம் அஜித் பேசினார். ‘படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களுடன் ஒரு படம் செய்ய வேண்டும். அதுபற்றிப் பேச நான் கொச்சி வரட்டுமா' என்று அஜித் கேட்டார். அதற்கு சச்சி, ‘வேண்டாம். ஒரு ஆபரேஷனுக்காகப் போகிறேன். ஆபரேஷன் முடிந்த பிறகு நான் சென்னையில் வந்து பார்க்கிறேன்' என அஜித்திடம் சொன்னார். ஆனால், அந்தச் சந்திப்பு நடக்காமலே போயிற்று.

சச்சி எவ்வளவு பிஸியாக இருந்தாலும் வீட்டை கவனிப்பதில் குறை வைக்கவில்லை. அவர் குடும்பத்தை நெஞ்சோடு சேர்த்துப் பிடித்திருந்தார். எங்கள் மகன் ஆகா‌ஷை விருப்பப்பட்டு சினிமாவுக்குக் கொண்டுவந்தார். ஆகாஷ் கதாநாயகனாக நடித்த படம் அடுத்த மாதம் ரிலீஸாகிறது.

சச்சியின் எழுத்தில் அவரின் சகோதரி சஜிதாவுக்குப் பெரிய ஈடுபாடு உண்டு. சின்ன வயதில் இருந்து சச்சி எழுதுவதை சஜிதா பாதுகாத்து வைத்துள்ளார். சச்சி எழுதி வேண்டாம் எனக் கசக்கிப் போட்ட கவிதைகளைச் சேர்த்து வைத்து, அதை சச்சியின் பிறந்த நாளான கடந்த டிசம்பர் 25-ம் தேதி புத்தகமாக வெளியிட்டார் சஜிதா. சச்சியின் பிரதிநிதியாக நான் விருது வாங்கப்போவேன். சச்சியின் சகோதர, சகோதரிகளுக்கும் இந்த விருதில் உரிமை உண்டு. சகோதரி சஜிதா விருது வாங்க என்னுடன் வரவேண்டும் என விரும்புகிறேன்'' என்று நெகிழ்கிறார் சிஜி சச்சி.