Published:Updated:

`எனக்கு சமமானவர் அல்லர்; மேடையில் உட்கார முடியாது!' - `தெறி' பட நடிகருக்கு நேர்ந்த சங்கடம்

`விழா 6 மணிக்குத்தானே... நேரம் ஆகிவிட்டது இப்போது கிளம்பினால் சரியான நேரத்தில் விழாவுக்குச் சென்றுவிடலாம்' என நடிகர் பினீஷ் கூற மாணவர்கள் திரும்பத் திரும்ப `லேட்டாக வந்தால் போதும் சார்' எனக் கூறியுள்ளனர்.

நடிகர் பினீஷ்
நடிகர் பினீஷ்

கேரள மாநிலம் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று முன்தினம் மாணவர்கள் அமைப்பின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்காக ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற `நார்த் 24 காதம்' படத்தின் இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இவருடன் ஆக்ஷன் ஹீரோ பைஜூ, டபுள் பேரல், குட்டமாக்கான், கொலுமிட்டாயி உள்ளிட்ட மலையாள படங்களில் வில்லனாக நடித்த நடிகர் பினீஷ் பாஸ்டின் என்பவரையும் மாணவர்கள் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர்.

பினீஷ்
பினீஷ்

பினீஷ் பாஸ்டின் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்திலும் சிறிய ரோலில் நடித்துள்ளார். மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்காக நடிகர் பினீஷ் கிளம்பி ரெடியாக இருந்துள்ளார். அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் `சிறிது நேரம் கழித்து விழாவுக்கு வர வேண்டும்' எனக் கூறியுள்ளனர். `விழா 6 மணிக்குத்தானே... நேரம் ஆகிவிட்டது. இப்போது கிளம்பினால் சரியான நேரத்தில் விழாவுக்குச் சென்றுவிடலாம்' என நடிகர் பினீஷ் கூற மாணவர்கள் திரும்பத் திரும்ப `லேட்டாக வந்தால் போதும் சார்' எனக் கூறியுள்ளனர்.

`தெறி’ டு `வேதாளம்’... எட்டு எட்டா பிரிக்கச்சொன்ன `பாட்ஷா' ஃபார்முலா படங்கள்!

சிறிதுநேரம் கழித்துதான் மாணவர்கள் உண்மையைக் கூறியுள்ளனர். அதில், மற்றொரு சிறப்பு விருந்தினரான இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன், ``தங்களுடன் ஒரே மேடையில் அமர மறுக்கிறார். அதனால் அவர் சென்ற பின் நீங்கள் வாருங்கள் சார்" எனக் கூறியுள்ளனர். அனில் ராதாகிருஷ்ணன் மேனனின் வற்புறுத்தலின் பேரிலேயே மாணவர்கள் லேட்டாக வரச் சொன்னது தெரியவர டென்ஷனான நடிகர் பினீஷ், நேராக விழா நடக்கும் கல்லூரிக்குச் சென்றுள்ளார். அப்போது மேடையில் அனில் ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருக்க மேடையில் இருந்த நாற்காலிகளுக்கு அருகே தரையில் அமர்ந்துகொள்ள நிகழ்ச்சியில் திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

அனில் ராதாகிருஷ்ணன் மேனன்
அனில் ராதாகிருஷ்ணன் மேனன்

இதற்கிடையே நடிகர் பினீஷ் மேடை ஏறாமல் இருக்க மருத்துவக் கல்லூரி முதல்வர் முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர், பினீஷ் மேடையேற அவரை வெளியேற்றுவதற்கு `போலீஸாரைக் கூப்பிடுவேன்' என மிரட்டியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடந்த இந்தச் சம்பவம் குறித்து பேசியுள்ள நடிகர் பினீஷ், ``மாணவர் சங்கத் தலைவர் உட்பட சிலர் என்னை ஹோட்டலில் சந்தித்தனர். லேட்டாக விழாவுக்கு வர வேண்டும் எனக் கூறினர். ஏன் என்று கேட்டபோது மேனன் என்னுடன் மேடையில் உட்கார விரும்பவில்லை என்றும், எனக்கு சமமாக அமரும் அளவுக்கு அவர் பெரிய நடிகர் இல்லை என்றும், தன் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டவருடன் எப்படிச் சமமாக அமருவது என்றும் மேனன் கூறியதாகக் கூறினர்.

மஞ்சக்கட்டி மலையில் மாவோயிஸ்ட்டுகள்; தடுத்த பெருமழை! - கேரள துப்பாக்கிச் சூட்டின் பின்னணி

நான் சாதாரண நடிகன்தான். கூலி வேலை செய்து நடிகராக வளர்ந்திருக்கிறேன். என் பெயருக்குப் பின்னால் மேனன் இல்லை. நான் தேசிய விருதும் வாங்கவில்லை. அதனால்தான் மனவேதனையில் தரையில் அமர்ந்துகொண்டேன்" எனக் கூறியுள்ளார். ``சாதிய பாகுபாட்டின் காரணமாகவே, பினீஷ் உடன் மேடையில் அமர மறுத்துள்ளார்" என அனில் ராதாகிருஷ்ணன் மேனன் கூறியதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை மறுத்துள்ள இயக்குநர், ``நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னதாகதான் எனக்கு அழைப்பு வந்தது.

குறுகிய காலம் என்பதால் என்னைத் தவிர வேறுயாரையும் நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை எனச் சொன்னார்கள். ஆனால், அடுத்த நாளே பினீஷும் கலந்துகொள்வதாகச் சொன்னார்கள். அவர் வருகிறார் என்பதால் என் பெயரை நீக்கிவிடுங்கள் நான் வரவில்லை என்றுதான் கூறினேன். இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நான் பணம் வாங்குவதில்லை என்பதால், பணம் சம்பாதிக்க நினைக்கும் வேறொருவரின் வாய்ப்பைக் கெடுக்க விரும்பவில்லை என்பதால் விழாவிலிருந்து என் பெயரை நீக்கச் சொன்னேன்.

மேடையில் உட்கார்ந்திருக்கும் பினீஷ்
மேடையில் உட்கார்ந்திருக்கும் பினீஷ்

மாணவர்கள் மீண்டும் அழைத்து, பினீஷின் பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றொரு நாளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறினர். அதன் பின்னரே விழாவில் பங்கேற்றேன். இருந்தாலும் நடந்த நிகழ்வுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். பினீஷிடம் என் இதயத்தின் அடிப்பகுதியிலிருந்து மன்னிப்பு கேட்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்த நிலையில் தற்போது அரசு தரப்பில் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ளன. பினீஷ் அவமானப்படுத்தப்பட்டது தெரிந்தால் நடவடிக்கை உறுதி எனப் பட்டியல், கேரள பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் இந்த விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழிசையைத் தொடர்ந்து ஸ்ரீதரன் பிள்ளை - மிசோரம் ஆளுநரான கேரள பி.ஜே.பி தலைவர்!