Published:Updated:

`டிரைவிங் லைசன்ஸ்' டு `கப்பேலா...' மலையாளப் படங்களுக்குப் போட்டிபோடும் தெலுங்கு சினிமா!

டோலிவுட்டில் ரீமேக்காகும் மல்லுவுட் படங்களின் லிஸ்ட் இங்கே!

டோலிவுட்டில் ரீமேக்காகும் மல்லுவுட் படங்கள்

மற்ற மொழி சினிமாக்களைவிட மலையாள சினிமா சற்று வித்தியாசமானது. சிம்பிளான ஒன் லைனை வைத்து திரைக்கதையில் விளையாடி சூப்பர்ஹிட் கொடுப்பது அவர்களது வழக்கம். பெரிய நடிகர்கள் நடித்தால்தான் படம் ஓடும் என்பதில்லை. அதே சமயம், பெரிய பட்ஜெட்டும் இல்லை. 'எப்படி மலையாளத்தில் இருந்து மட்டும் இப்படி படங்கள் வருகின்றன?' என்று ஒவ்வொரு முறையும் வியக்க வைப்பார்கள். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான படங்களின் ரீமேக் உரிமையை உடனே டோலிவுட் வாங்கிவிடுகிறது. அப்படி டோலிவுட் வாங்கியுள்ள மலையாளப் படங்களின் ரீமேக் லிஸ்ட்!

டிரைவிங் லைசென்ஸ்

டிரைவிங் லைசென்ஸ்:

சமீபத்தில் மறைந்த இயக்குநர் சச்சி எழுதி நடிகர் லாலின் மகன் ஜீன்பால் லால் இயக்கிய படம் இது. ஒரு பெரிய சினிமா நட்சத்திரத்துக்கும் அவருடைய அதிதீவிர ரசிகனுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படம். ஹீரோ ஹரிந்திரனாக ப்ரித்விராஜும் அவருடைய தீவிர ரசிகராக போக்குவரத்து ஆய்வாளராகக் குருவில்லாவாக சூரஜ் வெஞ்சரமூடுவும் நடித்திருப்பார்கள். அந்த ஹீரோவுக்கு டிரைவிங் லைசென்ஸ் கிடைத்ததா, இந்த இருவர்களிடையே நடந்த மோதல் முடிவு பெற்றதா, ஹீரோ ஹரிந்திரனுடன் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற குருவில்லாவின் நீண்ட நாள் கனவு என்ன ஆனது என்பதுதான் கதை. இந்தப் படத்தின் தெலங்கு ரீமேக் உரிமையை நடிகர் ராம்சரண் வாங்கி வைத்துள்ளார். அவருடைய கொனிடலா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இதைத் தயாரிக்க இருக்கிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

லூசிஃபர்

லூசிஃபர்:

நடிகர் ப்ரித்விராஜ் இயக்குநர் அவதாரம் எடுத்த படம் இது. இந்தப் படம் பார்க்கும்போது மோகன்லாலுக்கு ப்ரித்விராஜ் எப்படிப்பட்ட ரசிகர் என்பதை தெரிந்துகொள்ள முடியும். அத்தனை மாஸ், அத்தனை க்ளாஸாக அசரடித்திருப்பார் மோகன்லால். மலையாள சினிமாவில் இப்படியொரு மாஸா என எல்லோரையும் ஆச்சர்யப்படுத்திய படம். பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ், இந்திரஜித் ஆகியோர் நடித்திருந்தனர். மோகன்லாலுக்கான படம் என்றாலும் இதில் நடித்த எல்லோரும் ஒவ்வொரு இடத்தில் பயங்கரமாக ஸ்கோர் செய்திருப்பார்கள். இதன் சீக்வலான 'எம்புரான்' படத்தின் கதையையும் தயார் செய்து வருகிறார், ப்ரித்விராஜ். இந்தப் படத்தைப் பார்த்த ராம்சரண், சிரஞ்சீவிக்காக இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கி வைத்துள்ளார். இதை 'சாஹோ' படத்தை இயக்கிய சுஜீத் இயக்கவிருக்கிறார். மஞ்சு வாரியர் கேரக்டரில் சுஹாசினி, விவேக் ஒபராய் கேரக்டரில் ரகுமான் நடிக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஹெலன்

ஹெலன்:

இயக்குநர் வினீத் ஶ்ரீநிவாசன் தயாரிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் உருவான படம் 'ஹெலன்'. பார்ட் டைமாக துரித உணவு கடையில் வேலைபார்க்கும் பெண், அங்கு இறைச்சியை குளிரூட்டும் அறையில் மாட்டிக்கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படித் தப்பிக்கிறார் என்ற போராட்டம்தான் படம். அன்னா பென், அந்த அறைக்குள் இருக்கும் காட்சிகளைப் பார்க்கும்போதே நமக்குள் குளிர் தொற்றிக்கொள்ளும். அத்தனை எதார்த்தமாக இருக்கும் அந்தக் காட்சியமைப்பு. அவரது அப்பாவாக லால் நடித்திருப்பார். இந்தப் படத்தின் தமிழ் உரிமையை அருண் பாண்டியன் வாங்கி, தயாரித்து நடிக்கிறார். அன்னா பெண் நடித்த கதாபாத்திரத்தில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். தெலுங்கில் இப்படத்தின் ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

அய்யப்பனும் கோஷியும்

அய்யப்பனும் கோஷியும்:

இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் `அய்யப்பனும் கோஷியும்'. அய்யப்பன் நாயர் - கோஷி குரியன் இந்த இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல்தான் கதை. 'டிரைவிங் லைசென்ஸ்' கதையை எழுதிய சச்சிதான் இந்தப் படத்துக்கு இயக்குநர். அந்தப் படத்தில் இருந்த அதே விஷயத்தை சற்று மாற்றி வெவ்வேறு கதாபாத்திரங்களுள் வைத்திருக்கிறார். அய்யப்பன் நாயராக பிஜூ மேனனும், கோஷி குரியனாக பிரித்விராஜும் கலக்கி இருப்பார்கள். லாக்டெளனில் பெரும்பாலானோர் பார்த்து சிலாகித்த படம் இது. இதன் தெலுங்கு உரிமையை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் வரும் இரண்டு கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டதால் அதில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால், வெளியில் ராணா - ரவிதேஜா, ராணா - பாலகிருஷ்ணா, ரவிதேஜா - பாலகிருஷ்ணா என தகவல்கள் வெளியாகிறது. அதிகாரபூர்வமான அறிவிப்பு இந்த லாக்டெளன் முடிந்தவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கப்பேலா

கப்பேலா:

முகமது முஸ்தஃபா என்பவர் இயக்கத்தில் அன்னா பென், ரோஷன் மேத்யூ, ஶ்ரீநாத் பாஸி ஆகியோர் நடித்து வெளியான படம். லாக்டெளன் அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பு, திரையரங்கிலேயே வெளியானது. நல்லவன் போல இருக்கும் கெட்டவன், கெட்டவன் போல இருக்கும் நல்லவனுக்கு இடையில் மாட்டிக்கொண்ட பெண்ணின் கதைதான் 'கப்பேலா'. 'கும்பலங்கி நைட்ஸ்', 'ஹெலன்' என இரண்டு வெற்றிப் படங்களில் நடித்த அன்னா பென்னுக்கு இது மூன்றாவது படம். இதிலும் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையையும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது. இதில் ஶ்ரீநாத் பாஸி கேரக்டரில் 'ஹிட்' படத்தில் நடித்த விஷ்வாக் சென் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்னா பென், ரோஷன் மேத்யூ ஆகியோருடைய கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

அடுத்த கட்டுரைக்கு