Published:Updated:

`தலைமுடியால் தடைவரை சென்ற இளம் நடிகர்!'- மலையாளத் திரையுலகில் தொடரும் சர்ச்சை

``படத்தில் நடிக்க 30 லட்சம் சம்பளம் பேசப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு ஒப்பந்தத்தை மீறி 40 லட்சம் கேட்டார் ஷேன். இதைத் தர மறுத்தற்காகவே முடியை வெட்டி படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார்''

ஷேன் நிகம்
ஷேன் நிகம்

தலைமுடிக்கு இவ்வளவு அக்கப்போரா எனக் கேட்கும் அளவுக்கு மலையாள நடிகர் ஷேன் நிகம் விவகாரத்தில் பிரச்னை கொளுந்துவிட்டு எரிகிறது. சம்பவம் இதுதான்.. `கும்பளாங்கி நைட்ஸ்', `இஷ்க்', கிஸ்மத் என மலையாள சினிமாக்களில் தனித்துவ படங்களில் நடித்து புகழ்பெற்ற ஷேன் நிகம் `வெயில்', குர்பானி ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். வெயில் படத்தின் கேரக்டருக்காக நீண்ட முடி வளர்ந்திருக்க வேண்டும் என இயக்குநர் தரப்பில் ஷேனிடம் வலியுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.

ஷேன் நிகம்
ஷேன் நிகம்

ஆனால், அதை மீறி சமீபத்தில் தனது நீண்ட முடியை வெட்டினார் ஷேன். ஷூட்டிங் தொடங்கி நடந்துவந்த நிலையில் அவரின் செயலை தயாரிப்பாளர் ஷோபி ஜார்ஜ் மற்றும் வெயில் இயக்குநர் சரத் ஆகியோர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தனர். ``படத்தில் நடிக்க 30 லட்சம் சம்பளம் பேசப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு ஒப்பந்தத்தை மீறி 40 லட்சம் கேட்டார் ஷேன். இதைத் தர மறுத்தற்காகவே முடியை வெட்டி படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார்" எனத் தயாரிப்பாளர் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது. ஷேன் நிகமோ, `தயாரிப்பாளர் ஜார்ஜ் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்' என ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் ஷேன். ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை அடுக்கியவண்ணம் இருந்தனர்.

``துல்கர் எனும் அரக்கன், நிவின் எனும் பூதம்.. மலையாள சினிமாவும், மதம்பிடித்த ரசிகர்களும்!"

பின்னர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்க முயற்சியால் இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இனி வெயில் படப்பிடிப்பு முடியும்வரை முடியை வெட்ட மாட்டேன் என உறுதி அளித்திருந்தார் ஷேன். 15-ம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாகச் சொன்ன ஷேன், சொன்னபடி படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும், கேட்டதற்கு 25-ம் தேதி கலந்துகொள்கிறேன் எனக் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதற்கிடையே, சமீபத்தில் மீண்டும் தனது முடியை வெட்டி அதைப் புகைப்படம் எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்தார். கூடவே, ``நான் அதை ஒரு போராட்டமாகச் செய்தேன்" எனக் கூறியிருந்தார்.

ஜார்ஜ்
ஜார்ஜ்

அவரின் புதிய ஹேர்ஸ்டைல் புகைப்படம் வெளியான உடன் மீண்டும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஜார்ஜ் புகார் அளித்திருந்தார். அதையடுத்து, அவசர கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு தயாரிப்பாளர்கள் ஆலோசனை செய்தனர். முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகிகள், ``ஷேன் நிகம் படங்களுக்கு ஒத்துழைப்பு இனி கொடுக்க மாட்டோம். அவரை வைத்து எடுக்கவிருந்த வெயில், குர்பானி மற்றும் உல்லாசம் ஆகிய படங்களில் இருந்து அவர் நீக்கப்படுகிறார். இதுவரை அவரால் ஏற்பட்ட நஷ்டம் ரூ.7 கோடியை அவர் திருப்பித்தர வேண்டும்" என அதிரடியாக அறிவித்தனர்.

"முதல் சீஸனில் காதல் கல்யாணமே நடந்தது... ஆனால், இரண்டாவது சீஸன்?!" - மலையாள 'பிக்பாஸ்' அப்டேட்ஸ்!

ஆனால், இந்த முடிவில் தன்னுடைய கருத்தைக் கேட்காமல் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுத்துள்ளனர் என புகார் கூறியுள்ளார் ஷேன். அதில், ``நான் ஏன் எதிர்ப்பு தெரிவித்தேன் என்பது குறித்து அவர்களிடம் பேசச் சென்றேன். கடந்த நான்கு நாள்களாக ஊடகங்களுடன் பேச வேண்டாம், எனது இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்க வேண்டும் என்று என்னிடம் சொல்லும் அதே தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் பேசினேன். நேற்று மாலை வரை, அன்டோ ஜோசப், சியாத் கோக்கர் மற்றும் மஹா சுபைர் என்னிடம் அவசரம் இல்லை, எந்தப் பிரச்னையும் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களின் பையன் என்றும் எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், அவர்கள் என்னை அடக்கும் எண்ணம் இல்லை என்றும் சொன்னார்கள். இந்தத் திடீர் முடிவைப் பற்றி யாரை அழைப்பது, கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.

ஷேன் நிகம் புதிய ஹேர்ஸ்டைல்
ஷேன் நிகம் புதிய ஹேர்ஸ்டைல்

இது ஒருபுறம் இருக்க தற்போது, ``மலையாள சினிமாவில் இளம்நடிகர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் கேரவனில் ஏன் போலீஸார் சோதனை செய்யவில்லை" என ஷேனை குறிவைத்து போதைமருந்து குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர் தயாரிப்பாளர்கள். இதற்கு ஷேன் மற்றும் அவரது தாய் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த மலையாள திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த விவகாரம். சிலர் ஷேனுக்கு ஆதரவாகவும், சிலர் தயாரிப்பாளருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மஞ்சுவாரியாருக்கு இயக்குநர் மிரட்டல் விடுத்த வழக்கு, இளம் நடிகை மற்றும் அவரின் தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர் விநாயகன் இப்போது ஷேன் நிகம் விவகாரம் என அடுத்தடுத்து மலையாள சினிமா தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய வண்ணம் உள்ளது.

Vikatan