Election bannerElection banner
Published:Updated:

ரஜினிக்கு சில சிராய்ப்பு; பியர் கிரில்ஸ் கொடுத்த உற்சாகம்! - Man vs Wild ஹைலைட்ஸ்

Man vs Wild
Man vs Wild

நீர் இல்லாமல் வறண்டுபோன ஆற்றின் மேல் இருக்கும் சிதிலமான பாலத்தைக் கடப்பது, குடிநீருக்காக சரிவில் ஏறி இறங்குவது, முதலைகள் இருக்கும் குளத்தைக் கடப்பது என சாகசங்கள் நிறைந்த இந்த மூன்று இடங்களைக் கடப்பதுதான் டாஸ்க்.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி உலக அளவில் ரசிகர்களிடையே பிரசித்திபெற்றது. `அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் சர்வைவல் எப்படி?’ என்பதுதான் இந்த நிகழ்ச்சியின் ஒன்லைன்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பியர் கிரில்ஸுக்குத் தனிரசிகர் பட்டாளமே இருக்கிறது. 5 சீசன் வரை ஒளிபரப்பாகியுள்ள இதில் சிறப்பு எபிசோட்களும் அவ்வப்போது ஒளிபரப்பாகும். அதில் பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, நடிகை பிரியங்கா சோப்ராவின் கணவர் நிக் ஜோனஸ், பிரதமர் மோடி எனப் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

Man vs wild
Man vs wild

இந்த நிலையில் மோடிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து கலந்துகொள்ளும் பிரபலம் ரஜினிகாந்த் என அறிவிப்பு வர, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் ஷூட்டிங் தொடங்கிய ஜனவரி மாதத்திலிருந்தே நிகழ்ச்சி குறித்தான டாக் வைரலானது. இந்த நிலையில் திங்கள் அன்று இரவு டிஸ்கவரி சேனலில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

நீர் இல்லாமல் வறண்டுபோன ஆற்றின் மேல் இருக்கும் சிதிலமான பாலத்தைக் கடப்பது, குடிநீருக்காக சரிவில் ஏறி இறங்குவது, முதலைகள் இருக்கும் குளத்தைக் கடப்பது என சாகசங்கள் நிறைந்த இந்த மூன்று இடங்களைக் கடப்பதுதான் டாஸ்க்.

மேன் வெர்சஸ் வொயில்ட்
மேன் வெர்சஸ் வொயில்ட்

ரஜினிக்கான வார்ம் வெல்கமுடன் நிகழ்ச்சியை கிரில்ஸ் ஆரம்பிக்க, டீசரில் முன்னோட்டம் காட்டப்பட்ட காட்சிகளுடன் ஹெல்மட், கூலர்ஸ், ஜெர்கின் ஓவர்கோட் என தமிழ் ராப் இன்ட்ரோ பாடலுடன் `சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ என டைட்டில் கார்டுடன் மாஸாக என்ட்ரி கொடுத்தார் ரஜினி.

`உங்களைப் பார்க்கறதே மேஜிக் மாதிரி இருக்கு’ என கிரில்ஸை சிரிப்புடன் ரஜினி எதிர்கொள்ள, இன்று என்ன செய்யப் போகிறோம் என்பதை விளக்கினார் கிரில்ஸ்.

முதல் அட்வென்ஞ்சர் ஸ்பாட்டான பாலத்துக்குப் போகும்போது, இயக்குநர் பாலசந்தரைச் சந்தித்தது, அவரால் சினிமாத்துறைக்கு அறிமுகமானது எனத் தனது ஆரம்பகால சினிமா நினைவுகளைப் பகிர்ந்தபடி வந்தார் ரஜினி.

``நான் வளர்ந்தது எல்லாம் இந்த கர்நாடகாலதான். அப்ப எல்லாம் நிறைய படங்கள் பார்க்குறது வழக்கமா இருந்தது. என்னோட 22 வயசு வரைக்கும் சினிமால நடிக்கணும்கிற எண்ணம் வந்ததே இல்லை. சாதாரண ஒரு பஸ் கண்டக்டரா இருந்தேன். அப்படி ஆரம்பிச்ச என்னோட வாழ்க்கை இப்போ இப்படி மாறியிருக்கு. இந்தப் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு” என்று ரஜினி கூற,

 ‘மேன் vs வொயில்ட்’
‘மேன் vs வொயில்ட்’

``சூப்பர் ஸ்டார் ஆன பிறகு பஸ்ல போக ஆசை வந்துருக்கா?'' என கிரில்ஸ் கேட்டார். அதற்கு, ``நிறைய முறை போக நினைச்சிருக்கேன். ஆனா, அது ரொம்ப கஷ்டம்” என ரஜினி கூற, ``அப்போ, நிச்சயம் ஒருமுறை நாம அப்படி போவோம். புரோகிராம் பண்ண நல்ல கன்டென்ட் அது'' என ரஜினியை கூல் மோடுக்கு மாற்றினார் கிரில்ஸ்.

இந்தியாவின் தண்ணீர்ப் பற்றாக்குறை குறித்து இருவரும் பேசிக்கொண்டே, பாதுகாப்பு உபகரணங்களுடன் பாலத்தைக் கடக்கத் தயாரானார்கள். ``என்னை இன்னும் பத்து முறை செக் பண்ணுங்க, ரோப் அறுந்து பாலம் உடைஞ்சா அவ்வளவுதான்'' என மைல்ட் ஜெர்க்குடன் பாலத்தில் ஏறினார் ரஜினி. சிதைந்த பாலம், இரும்புப் பாலத்தின் சூடு, கீழே அதளபாதாளத்தில் வறண்ட ஆறு என சவால்களை சமாளித்து இருவரும் பக்கவாட்டில் பாலத்தைக் கடந்தனர்.

ரஜினி
ரஜினி

``சினிமால நிறைய பாதுகாப்போட எவ்வளவோ ஸ்டன்ட் பண்ணியிருக்கேன். ஆனா, பெருசா எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாம, இப்படிப் பண்றது கொஞ்சம் பயமாதான் இருந்தது. எப்படியோ, ஐ டிட் இட்'' என மூச்சு வாங்கிக்கொண்டே குதூகலத்துடன் தன் முதல் ரியல் அட்வென்ச்சர் டாஸ்க்கின் அனுபவம் பகிர்ந்தார் ரஜினி.

அதன் பிறகு காட்டின் நடுவில் மறைத்து வைக்கப்பட்ட ஜீப்பில் இருவரும் அடுத்த இலக்கு நோக்கிப் பயணித்தபோது, கிரில்ஸிடம், ``மோடிஜியிடம் உங்களுக்குப் பிடித்தது என்ன?'' என ரஜினி கேட்க, ``அவரது ஹியூமர் சென்ஸ் மிகவும் பிடித்தது. அவர் சிறுவயதில் காடுகளுடனான தனது அனுபவத்தைப் பகிர்ந்தார்'' எனக் கூறிவிட்டு தான் பிரிட்டிஷ் மிலிட்டிரியில் இருந்த கதையையும், தன் அனுபவங்களைப் புத்தகமாக்கியபோது, அதன் மூலம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி செய்ய வாய்ப்பு வந்த கதையையும் பகிர்ந்தபடி வந்தார் கிரில்ஸ்.

`மேன் vs வைல்ட்’
`மேன் vs வைல்ட்’

``நிகழ்ச்சியில் இந்தப் பூச்சிகளை எல்லாம் அப்படியே சாப்படுறீங்களே, அலர்ஜி ஆகும்னு பயம் கிடையாதா?'' என ரஜினி கேட்டார். ``சில நேரங்கள்ல அப்படி ஆகும். ஆனா, காட்டுக்குள்ள பல சமயங்கள்ள சர்வைவல்க்கு வேற வழியில்லை. இப்ப யாரும் என் வீட்டுக்கு டின்னர்க்கு வர மாட்டாங்க'' என ஜோக் அடித்தபடி தன்னுடைய கம்ஃபோர்ட் ஜோனுக்குள் சூப்பர் ஸ்டாரைக் கொண்டு வந்தார் கிரில்ஸ்.

``என்னுடைய வாழ்க்கையே ஒரு அற்புதம். இந்த மாதிரி டிஸ்கவரில வந்து ஒரு ஷோ பண்ணுவேன்னு கனவுலகூட நினைச்சிருக்க மாட்டேன். எல்லாம் கடவுளுடைய ஆசி'' என நெகிழ்ந்தபடி வந்தார் ரஜினி. அதன் பிறகு தண்ணீருக்காக ஒரு இடத்தில் இறங்கி ஏறுகிறார்கள். சரிவில் இறங்கவும் ஏறவும் சிரமப்பட்ட ரஜினியை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தார் கிரில்ஸ். ஏறும்போது கால் சறுக்கி ரஜினிக்கு சில சிராய்ப்புகள் ஏற்பட்டன.

 ‘மேன் vs வைல்ட்’
‘மேன் vs வைல்ட்’

தண்ணீர் சேகரித்துவிட்டு திரும்பும்போது இடையில் ஜீப் பஞ்சராக, இருவரும் டயர் மாற்ற நின்றார்கள். ``இதெல்லாம் என்னுடைய வாழ்க்கையில முதல்முறையா பண்றேன். நிகழ்ச்சியோட ஆரம்பத்துல எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனா, இப்போ என்ஜாய் பண்ண ஆரம்பிச்சிட்டேன். என்னுடைய வாழ்க்கையிலயே மறக்க முடியாத நாள் இது” என்றார் ரஜினிகாந்த். தனது மனைவியுடன் காரில் சென்றபோது, பஞ்சரான அதே டயரை மீண்டும் மாற்றி பல்பு வாங்கியது, ரஜினி ஸ்டைலில் கூலர் போட கற்றுக்கொண்டது என நிகழ்ச்சி முழுக்கவே ரஜினியைக் கூலாக ஹேண்டில் செய்து உற்சாகமாகப்படுத்திக்கொண்டே வந்தார் பியர்.

``நடிகர்ங்கிற புகழ் வந்த பிறகு, ப்ரைவசி பாதிக்கப்படுறதுதான் இந்த பாப்புலாரிட்டிக்கு நாங்க கொடுக்குற விலை. எனக்கு இருக்க இந்தப் புகழை எப்பவுமே நான் தலைக்கு எடுத்துட்டுப் போகமாட்டேன். நடிச்சு முடிச்சிட்டா என் வேலையும் அவ்வளவுதான். அதுக்குப் பிறகு ரஜினிகாந்தை மறந்துட்டு சிவாஜிராவ் ஆகிடுவேன். பணமிருக்கு, புகழிருக்குங்கிறதைவிட நல்ல பண்புகளோட இருக்கனும்ணுதான் எப்பவுமே நினைப்பேன்” எனப் பேசிக்கொண்டே அடுத்து முதலைகள் இருக்கும் நீர்நிலைக்குள் என்ற கடைசி டாஸ்க்கிற்கான இடம் வர, ``இல்ல, வேண்டாம்'' என ரஜினி பயத்துடன் பின்வாங்க, நம்பிக்கை அளித்து கூட்டிச்சென்றார் நம்ம வொயில்ட் மேன்.

 ‘மேன் vs வைல்ட்’
‘மேன் vs வைல்ட்’

பாலம், இறக்கம், நீர்நிலை என அட்வென்ச்சர்க்கு முன் ஒவ்வொரு இடத்திலும் கமல், மாதவன், அக்ஷய்குமாரின் வாழ்த்து வீடியோக்கள் ரஜினிக்குக் காட்டப்பட்டன.

அட்வென்ச்சரின் முடிவில், இந்தியாவுக்கான உங்களது செய்தி என்ன என்று பியர்ல்ஸ் கேட்க, ``வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்புகளை உருவாக்குறதுதான் முக்கியம். கலாசார ரீதியா இந்தியா வலுவா இருக்க மாதிரி பொருளாதாரத்துலயும் உயரணும். அதுதான் என்னோட கனவு. இந்து, கிறிஸ்துவம், இஸ்லாமியம், புத்தம் இந்த நாலு மதம் இந்தியா முழுக்க அதிகம் இருக்கு. இதுல இந்து மதம் தவிர மற்றது எல்லாம் உலகம் முழுக்க இருக்கு. ஆனா, இந்து மதத்துக்கு இந்தியாவும், நேபாளமும் மட்டும்தான் இருக்கு.

இந்தமாதிரி பல வேற்றுமைகள் இருந்தாலும், எல்லாரும் ஒற்றுமையா இருக்கோம்” எனத் தனது வழக்கமான ஸ்டைலில் நிகழ்ச்சியை முடித்து வைத்தார் ரஜினி.

கிரில்ஸ்
கிரில்ஸ்

``தண்ணீர்ப் பிரச்னைகள் குறித்து பேசியது, சூப்பர் ஸ்டார் இமேஜைக் காட்டாமல் இயல்பாக நிகழ்ச்சி முழுக்க இருந்தது, இந்தியா குறித்தான அவரது பேச்சு இதெல்லாம் பிடித்தது'' என சூப்பர்ஸ்டாருடன் தனது நிகழ்ச்சி அனுபவம் பகிர்ந்தார் கிரில்ஸ்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு