Published:Updated:

மண்டேலா - சினிமா விமர்சனம்

மண்டேலா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
மண்டேலா - சினிமா விமர்சனம்

ஒடுக்கப்பட்ட நபராக ‘இளிச்சவாயன் என்கிற ஸ்மைல்’ கதாபாத்திரத்தில் யோகிபாபு.

மண்டேலா - சினிமா விமர்சனம்

ஒடுக்கப்பட்ட நபராக ‘இளிச்சவாயன் என்கிற ஸ்மைல்’ கதாபாத்திரத்தில் யோகிபாபு.

Published:Updated:
மண்டேலா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
மண்டேலா - சினிமா விமர்சனம்

இரண்டு கிராம மக்களும் சேர்ந்து தேர்வு செய்யும் ஊர்த் தலைவர் தேர்தலில், ஒற்றை ஓட்டு வெற்றியாளரைத் தீர்மானிக்குமென்றால் என்ன நடக்கும் என்பதைச் சாட்டையடி காமெடியாகச் சொல்லியிருக்கிறது ‘மண்டேலா’.

சாதியால் பிளவுபட்டு நிற்கும் இரு கிராமங்கள் வடக்கூர், தெக்கூர். அந்த இரண்டு கிராமங்களுக்கும் பொதுவான நபர்கள் ஊர்த்தலைவர் பெரிய அய்யாவும், முடி திருத்தும் ‘ஸ்மைலும்’தான். புதிய தலைவருக்கான தேர்தல் தொடங்க, ஓட்டு வேட்டையை ஆரம்பிக்கிறார்கள் பெரிய அய்யாவுக்கு இரு மகன்கள். சொல்லிவைத்தாற் போல், இரண்டு கிராமங்களிலும் ஒரே அளவிலான ஓட்டுகள் வரிசை கட்டி நிற்க, ஸ்மைலுக்கு அடிக்கிறது ஜாக்பாட். அந்த ஜாக்பாட் ஸ்மைலை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என நீள்கிறது மண்டேலா.

மண்டேலா - சினிமா விமர்சனம்

ஒடுக்கப்பட்ட நபராக ‘இளிச்சவாயன் என்கிற ஸ்மைல்’ கதாபாத்திரத்தில் யோகிபாபு. தன்னைத்தானே சுயபகடி செய்துகொள்ளும் கதாபாத்திரம்தான் என்றாலும், இந்தமுறை அதை காமெடியாக இல்லாமல், அனுதாபமாக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார் யோகிபாபு. பெரிய அய்யா என்னும் ‘கருணாகரன் பெரியாராக’ சங்கிலி முருகன். ஸ்மைலை ஊரையே உற்றுநோக்க வைக்கும் நெல்சன் மண்டேலாவாக மாற்றும் நபராக ஷீலா ராஜ்குமார். `கிருதா’வாக முகேஷ், பெரிய அய்யாவின் மூத்த மகனாக GM சுந்தர், இளைய மகனாக கண்ணா ரவி, வேண்டாம் மட்டுமே சொல்லும் கல்கி, செருப்பு சர்ச்சை செய்யும் குமாரமூர்த்தி என படத்தில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் வரும் ஒவ்வொருவரும் நம் மனதில் நிற்கிறார்கள்.

சமூகம் சார்ந்து செய்யும் பகடிகளில் கொஞ்சம் பிசகினாலும் அது அபத்தமாக, ஆபத்தானதாகிவிடும். அதைத் தன் முதல் படத்திலேயே தெளிவாகக் கையாண்டிருக்கிறார் மடோன் அஷ்வின். வெறுமனே காமெடிப் படமாகத் தொக்கி நிற்காமல், ‘ஓட்டு மட்டும் இல்லன்னா உன்ன அறுத்துப் போட்ருவோம்’ என ஒலிக்கும் ஆதிக்க சாதிகளின் அதிகாரக் குரல்களையும் படம் முழுக்கப் பதிவு செய்திருக்கிறார் அஷ்வின். அரசியல் ஜனநாயகத்தை மாற்ற, சமூகம் சார்ந்த ஜனநாயகத்தை ஒருவர் சீரமைப்பது அவசியம் என்பதை ஒடுக்கப்பட்டவரின் குரலாக அழுத்தமாகப் பதிவு செய்ததற்கு வாழ்த்துகள் அஷ்வின். காமெடி காட்சிகள், மென்சோகக் காட்சிகள் என இரண்டுக்குமான தனித்துவப் பின்னணி இசையை வழங்கியிருக்கிறார் பரத் ஷங்கர். யுகபாரதி, அறிவு ஆகியோரின் பாடல்களின் வரிகளும் அரசியல் பேசுகின்றன.

மண்டேலா - சினிமா விமர்சனம்

படத்தில் பிசகுகளே இல்லையா என்றால் இருக்கின்றனதான். தேர்தல் அரசியலை எல்லாவற்றுக்கும் தீர்வாக முன்வைப்பதில் இருந்து, அதீத ஃபேன்டஸி சூழலும் கொஞ்சம் நம்மை அந்நியப்பட வைக்கின்றன. அதேபோல், இலவசங்கள் குறித்த புரிதல் போதாமைகளும் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் மீறி முதல் படத்திலேயே சமூகத்துக்குத் தேவையான முக்கியமான விஷயத்தைப் பேசி, நம்மைக் கவர்கிறார் இந்த மண்டேலா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism