சினிமா
தொடர்கள்
Published:Updated:

“யோகிபாபுவின் முதல் ஹீரோ படம் இதுதான்!”

 யோகிபாபு
பிரீமியம் ஸ்டோரி
News
யோகிபாபு

- கிருஷ்ணா

ஒரு நல்ல சினிமா ஒரு விவாதத்தைத் தொடங்கி வைக்கவேண்டும். தொலைக்காட்சியில் வெளியாகி பாராட்டைப் பெற்று, தேர்தல் குறித்த விவாதத்தைத் துளிர்விடச் செய்திருக்கிற ‘மண்டேலா’ அந்த ரக சினிமா. படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வினிடம் உரையாடினேன்.
“யோகிபாபுவின் முதல் ஹீரோ படம் இதுதான்!”

“உலகமே கொண்டாடுற தலைவர்... மண்டேலா பேரை ஏன் படத்துக்கு யோசிச்சீங்க?”

“டிரெய்லரைப் பார்த்துட்டே இந்தக் கேள்வியை நிறைய பேர் கேட்டாங்க. காமெடிங்கிறதைத் தாண்டி படத்துல நிறைய விஷயங்கள் பேசியிருக்கோம். அரசாங்கப் பதிவேடுகள் எதிலயுமே பெயரில்லாத ஒருத்தனை, ‘இளிச்சவாயன்’னுதான் ஊர் கூப்பிடுது. தனக்கான பேர் என்னன்னு அவன் தேடும்போது ‘மண்டேலா’ பொருத்தமா இருக்கு. மேம்போக்கா இந்தப் பேரை வச்சிடலை... நிறைய யோசிச்சு, இதுக்குள்ள இருக்கிற அரசியலுக்குப் பொருத்தமா இருந்ததாலதான் வச்சோம். இந்தியாவுல இருக்குற ஒரு தலைவர் பெயரை வச்சா மத, சாதிய வட்டத்துக்குள் அடக்க வாய்ப்புகள் அதிகம். ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த ஒரு தலைவரா, இந்தக் கதைக்கு மண்டேலா பொருத்தமாக இருந்தார்.”

“யோகிபாபுவின் முதல் ஹீரோ படம் இதுதான்!”

“இன்னைக்கு வரைக்குமே உருவகேலிதான் யோகிபாபு காமெடிக்கான தளமா இருக்கு. அதை இந்தப்படம் எந்த அளவுக்கு மாற்றியிருக்கு?”

“கதை எழுதறப்போ கதாநாயகன் யாருன்னு யோசிக்கவேயில்லை. பெரிய நடிகர்கள் இந்த கேரக்டர் பண்ண ஒத்துக்குவாங்களான்னு தயக்கம் இருந்துச்சு. தயாரிப்புத் தரப்புலதான் யோகிபாபுவைக் கேட்டுப்பாருங்கன்னு சொன்னாங்க. யோகிபாபுவுக்காக கதைக்குள்ள சில மாற்றங்களைக் கொண்டு வந்து திருப்தியடைஞ்ச பிறகுதான் அவர்கிட்ட கதை சொன்னேன். சொல்லப்போனா, இதுதான் யோகிபாபு கதாநாயகனா நடிச்சு முதல்படமா வந்திருக்கணும். ‘கோலமாவு கோகிலா’வுக்கு முன்னாலயே கதையை அவர்கிட்ட சொல்லிட்டேன். தயாரிப்பு சார்ந்த சில சிக்கல்கள் இருந்ததால தாமதம் ஆகிடுச்சு. படத்துக்காக யோகிபாபு நிறைய மெனக்கெட்டார். செருப்பால் அடிக்கிற காட்சியெல்லாம் முதல்ல நாங்க யோசிக்கலே. அவரே வந்து, ‘இப்படிப் பண்ணினா நல்லாருக்கும்ல’ன்னு கேட்டார். அந்த அளவுக்கு அவர் இந்தக் கதை மேலயும், எங்க மேலயும் நம்பிக்கை வச்சிருந்தார்.”

“யோகிபாபுவின் முதல் ஹீரோ படம் இதுதான்!”

“தேர்தல் அரசியல்தான் இங்கிருக்கிற எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வுன்னு நம்புறீங்களா?”

“படம் முழுக்கவே ஃபேண்டஸிதான். ஒரு படைப்பாளி எல்லாத்துக்கும் தீர்வு சொல்லமுடியாது. அது அவங்க வேலையும் இல்லை. படத்துல இருக்கிற பல காட்சிகள் நானே எங்க ஊர்ல பார்த்தவை. இங்க நடக்குற எந்தவொரு ஒடுக்குமுறையையும் மிகைப்படுத்திக் காட்டல. ஓட்டோட மதிப்பை எல்லோரும் புரிஞ்சுக்கணும்ங்கறது தான் எங்க விருப்பம்.”

மடோன் அஷ்வின்
மடோன் அஷ்வின்

“குறும்படத்துக்காக தேசிய விருது வாங்கியிருக்கீங்க... எங்கிருந்து தொடங்குச்சு சினிமாப் பயணம்?”

“இஞ்ஜினீயரிங் முடிக்கிற வரைக்கும் சினிமாக்குள்ள வரணும்னு யோசிச்சதுகூட இல்லை. ஆனா, நிறைய படம் பார்ப்பேன். படிப்பை முடிச்சுட்டு பெங்களூருல நாலு வருஷம் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்தேன். அந்தச் சூழல்ல ஏற்பட்ட வெறுமையால கிரியேட்டிவா ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு. மூணு மாத டைரக்‌ஷன் கோர்ஸ் படிச்சேன். அப்போ, குறும்படம் ஒண்ணு பண்ணினேன். அதுக்குக் கிடைச்ச வரவேற்பு, பெரிய நம்பிக்கையைக் கொடுத்துச்சு. அதன் தொடர்ச்சியாதான் ‘நாளைய இயக்குநர்’ சீசன் மூணுல வாய்ப்பு கிடைச்சது. அதுக்காக ஏழு குறும்படங்கள் செஞ்சேன். அதுல `தர்மம்’ங்கிற குறும்படத்துக்கு தேசிய விருது கிடைச்சுச்சு. மண்டேலா கதையையும் ஏழு நிமிடக் குறும்படமா செஞ்சிருக்கேன். ஆனா, ‘இது பெரிசா செய்யவேண்டிய சினிமா’ன்னு அப்பவே யோசிச்சுட்டேன்.”

“20 ரூபா டோக்கன், தமிழக அரசின் இலவசப் பொருள்கள்னு படத்துல குறியீடுகள் நிறைய இருக்கே?”

“அப்படியெல்லாம் யோசிச்சுச் செய்யலே. சில அரசியல் நிகழ்வுகளைப் பாக்குறப்போ எனக்கு மீம் கன்டென்ட் மாதிரி தெரியும். அதைத்தான் படத்துக்குள்ள வச்சிருக்கேன். ‘இப்படியெல்லாம் நடக்குது... இதைப் பார்த்துத் திருந்துங்க’ன்னு புத்திமதியெல்லாம் சொல்ல வரலே... ‘இதைப் பத்தியெல்லாம் யோசிங்க’ன்னு சொல்ல நினைச்சேன். அவ்வளவுதான்!”