Published:Updated:

“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி

மணிரத்னம்
பிரீமியம் ஸ்டோரி
மணிரத்னம்

இன்னமும் ஒண்ணுமே கத்துக்கலைன்னு தோணுது. ஒரு படத்தை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு இன்னும் தெரிய மாட்டேங்குது. தெரியாத வரைக்கும் முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கலாம்.

“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி

இன்னமும் ஒண்ணுமே கத்துக்கலைன்னு தோணுது. ஒரு படத்தை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு இன்னும் தெரிய மாட்டேங்குது. தெரியாத வரைக்கும் முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கலாம்.

Published:Updated:
மணிரத்னம்
பிரீமியம் ஸ்டோரி
மணிரத்னம்

எங்கே பார்த்தாலும் 'பொன்னியின் செல்வன் 1' தான் பேச்சு. கல்கியின் காவியத்தைக் கண் முன்னால் கொண்டு வருகிற வேலை. செம சவால் அசைன்மென்ட். களம், வரலாறு, சமூகம், அரசியல் என கதை நடக்கும் காலகட்டத்திற்கே அழைத்துச் செல்லக் காத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். தமிழ் சினிமாவின் பிராண்ட் அம்பாசிடர். அனுபவத்தின் முற்றத்தில் அமர்ந்து இன்னும் இளமையாய்ப் படம் பிடிக்கிறவர். கால நதியால் அடித்துச் செல்ல முடியாத படங்களைத் தந்தவரிடம் ‘பொன்னியின் செல்வன்' அனுபவங்களைக் கேட்பதே சுகானுபவம்.

‘‘வெளியே இருக்கிற எதிர்பார்ப்பு பதற்றத்தை உண்டுபண்ணுதான்னு கேட்கிறீங்க, சந்தோஷம்தான் கூடுது. எனக்கு இன்னும் அந்தப் பரவசம் குறையவே இல்லை. ஸ்கூல் நாள்கள்ல பொன்னியின் செல்வன் படிச்சேன். திரும்பத் திரும்ப ரசிச்சுப் படிக்க முடிஞ்சிருக்கு. அதில் வருகிற காட்சிகள், பிரமாண்டம், அட்வென்சர் எல்லாம் படிக்கும்போது சினிமாவிற்கு எழுதுனது மாதிரியே தோணியிருக்கு. அப்ப நான் சினிமாவுக்கு வருவேன்னு நினைச்சதில்ல. கதாபாத்திரங்களுக்கு இவ்வளவு டீட்டெய்லிங் கொடுக்க முடியுமான்னு ஆச்சரியம் தாங்க முடியாம இருந்துச்சு. அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ‘த த்ரீ மஸ்கிட்டர்ஸ்' மாதிரி இருக்கும். ‘பொன்னியின் செல்வ'னை எப்படி ரசித்தேனோ, உணர்ந்தேனோ, உள்வாங்கினேனோ, அப்படியே கொண்டு வர முயற்சி செய்திருக்கேன். நல்லா வந்திருக்குன்னு நியாயமா சொல்லத் தோணுது. நம்ம ஊர்ல பொன்னியின் செல்வனுக்கு ஒரு பெரிய மேஜிக் இருக்கு. நானும் ஆர்வமா இருக்கேன். ரொம்ப காத்திராமல் அடுத்த வாரமே பார்த்திடலாம்...'' இன்னும் பேசத் தயாராகிறார்.

“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி

``வரலாற்றுப் படங்களில் எதை அதிகம் விரும்பியிருக்கீங்க?’’

‘‘ரொம்பவும் பாதித்தது ஜப்பானின் குரோசோவாதான். அவர் சாமுராய் பற்றிக்கூட படம் எடுத்திருக்கிறார். அதெல்லாம் இப்ப நிகழ்காலத்தில் நடக்கிற மாதிரி இருக்கும். நாம் அங்கேயிருந்தால் எப்படி உணர முடியுமோ அப்படி இருக்கும். அழுக்கு, புழுதி, வியர்வை இருக்கும். அதெல்லாம் அவரோட ஸ்பெஷாலிட்டி. இந்த ஸ்டைலைத்தான் பொன்னியின் செல்வனில் கொண்டுவரப் பார்த்திருக்கோம். To make it real. ‘அந்தக் காலத்துக் கதை சொல்றான் பாரு'ன்னு இல்லாமல் கல்கி ‘நாம் அங்கே போவோமா'ன்னு எழுதுவார்ல, அப்படி முயற்சி செய்திருக்கேன். படம் பிடிச்சது, கலர்ஸ் எல்லாம் நிகழ்காலம் மாதிரியே இருக்கும். பேசுகிற விதத்தில், எமோஷன் வெளிப்படுவதில் நடிகர்களின் நடிப்பில் எல்லாம் நாடகத் தன்மை குறைந்து ரியலிசம் அதிகம் வெளிப்பட்டிருக்கும். அதைத்தான் நானே விரும்பினேன்.''

“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி
“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி

``ஐந்து பாகங்களான பொன்னியின் செல்வனை இரண்டு பகுதிகளாகப் பண்ணும்போது என்னென்ன சிரமங்கள் இருந்தன?’’

‘‘கல்கியே ஒரு கோடு போட்டுக் காட்டிட்டார். வந்தியத்தேவன் வழியாகத்தான் ஒவ்வொரு கேரக்டரும் அறிமுகமாகுது. அவர் மூலமாகத்தான் ஒவ்வொண்ணா தெரிஞ்சிக்கிறோம். சினிமாவில் அதுதான் அழகு. ஒரு கேரக்டர் வழியாக நாமும் வந்தியத்தேவனும் சேர்ந்து கத்துக்கிறோம். அது வெளியிலிருந்து கதை சொல்லாமல் உள்ளிருந்தே கதை சொல்கிற அமைப்பு. கல்கி போட்ட பாதையில்தான் போயிருக்கோம். அவர் தொட்டதையெல்லாம் நாங்களும் தொட ஆசைப்பட்டோம். இதைப் பத்துப் பாகமாக வேண்டுமானாலும் பண்ணலாம். சினிமாவாகச் செய்யும்போது சில விஷயங்கள் இருக்கு. இது ஒரு எக்னாமிக் மீடியா. அதனோட பலம், மினிமம் இடத்தில் மேக்சிமம் கொண்டு வரணும்.

நாவலில் சுந்தர சோழரின் மனநிலை, அந்த நாளில் எப்படி இருக்கார், அவர் சிந்தனை ஓட்டம் எல்லாம் சொல்லலாம். இதைப் படத்தில் வேறு விதத்தில் சொல்லணும். பாடி லாங்குவேஜ் வேணும். குறைந்த வார்த்தைகளில் சொல்லணும். அதுக்குள்ளேயே சுந்தர சோழன் நம் கைக்குள்ளே வந்திடணும். நாவலின் சாராம்சத்தை எடுத்து, அதை எந்த அளவுக்குக் கோவையாகச் சொல்லணுமோ அப்படிச் சொல்லணும். நாவலில் ஒரு விஷயம் சொல்லிட்டு இருக்கும்போது, ‘அங்கே வந்தியத்தேவனை விட்டுட்டு வந்துட்டேன்’னு கல்கி பின்னாடி போயிடுவார். அங்கே கதை சொல்லிட்டு அப்புறம் இங்கே வருவார். படிக்கிறவனையும் எப்பவும் கூட சேர்த்துக்கிட்டே போவார் கல்கி. சினிமாவில் அப்படிச் செய்ய சுதந்திரம் கிடையாது. அதற்குக் கூடுதலாக முயற்சி பண்ணி இயல்பாகச் செய்திருக்கேன்.''

“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி
“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி
“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி

``அந்தக் காலத்தை நிறுத்தற இடங்கள், உடைகள், உண்மைத்தன்மைக்கு எப்படி சிரமப்பட்டீங்க?’’

‘‘டெக்னாலஜி நிறைய வளர்ந்திருப்பதால் இப்ப பெரிய சௌகரியம். 20 வருஷத்துக்கு முன்னாடி செய்திருந்தால் டெலிபோன், மின் கம்பங்கள் இல்லாமல் தேடணும். இப்ப எங்கே ஷூட் பண்ணினாலும் அதை அழிச்சிடலாம். அந்தக் காலத்தில் அவர் எழுதிய இடங்கள் இப்ப அப்படி இல்லை. அப்படியே மாறிக்கிடக்கு. சத்தியமாக அதைக் காட்டவே முடியாது. சொல்லியிருக்கிறதை நிஜத்திற்குப் பக்கமாக நிறுத்திக் கொண்டு வந்திருக்கோம். ஒரு செட் போட்டு எடுத்த மாதிரி செயற்கைத்தனம் வரக்கூடாது. முடிந்தவரை வானம், கீழே மண் தெரியணும். புழுதி பறக்கணும்னு சளைக்காமல் வேறு வேறு இடங்களுக்குப் பயணப்பட்டுக்கிட்டே இருந்தோம்.''

``என்னென்ன சவால்கள் இருந்தன?’’

‘‘நாம் அடிக்கடி பீரியட் படம் பண்றதில்லை. ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியிருந்தது. எதுவுமே நம்மகிட்டே இல்ல. கத்தி, ஈட்டி, வாள்னு ஆராய்ச்சிகள் மூலம் தேடிக் கண்டுபிடிச்சு, நிறைய தயார் செய்தோம். அதுவும் சரியாக இருக்கணும். பழைய இரும்புக் கவசம் எல்லாம் டிராமாவிலிருந்து வந்தது. சாதாரணமாக அதைப் போட்டுக்கிட்டு சண்டையெல்லாம் போடவே முடியாது. அதனால் அதையும் தேடிக் கண்டுபிடிச்சு செய்தோம். அதை இங்கே செய்ய ஆள் கிடையாது. டெல்லிக்குப் போய் ஆளைப்பிடித்து இங்கே கொண்டுவந்து சேர்த்தோம். எல்லாத்தையும் கண்டுபிடிக்கணும். அதைப் பல மடங்காகவும் செய்யணும். இதுமாதிரி இன்னும் இரண்டு படங்கள் வந்தால் சுலபமாகிடும். காகிதத்தில் எல்லாத்தையும் சரி பண்ணி எல்லா முக்கிய முடிவுகளையும் முன்னாடியே எடுக்கணும்.அப்படி சரி பண்ணி வைத்திருந்ததால் நல்லபடியா கொண்டுவந்திட்டோம்.''

“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி
“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி
“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி

``எம்.ஜி.ஆர், கமல்னு முயற்சி பண்ணின ‘பொன்னியின் செல்வன்' உங்களுக்கு எப்படிக் கைகூடி வந்தது?’’

‘‘எம்.ஜி.ஆரும் கமலும் இதை எனக்காக விட்டுக்கொடுத்திருக்காங்கன்னு சொல்லணும். எம்.ஜி.ஆர் நினைத்ததை முடிப்பவர். அவரே நமக்குக் கொடுத்திட்டுப் போயிருக்கார்னு நினைப்பேன். இப்ப என்ன வசதின்னா, இதை இரண்டு பாகமாகச் செய்யலாம். முன்னாடி ஒரே பாகமாகப் பண்ணியிருப்பாங்க. ஐந்து பாகத்தை மூணு மணி நேரத்திற்குள் சுருக்கறது ரொம்பக் கடினம். அவசரமா கதை சொல்ல வேண்டியிருக்கும். சம்பவங்கள் விட்டுப்போயிரும். இப்ப அப்படியில்லை. அதை ரொம்பவும் நன்றாகச் சொல்ல வாய்ப்பிருக்கு.''

``நடிகர்களை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?’’

‘‘டைரக்டரின் வேலையே அதுதானே. கல்கி ஒவ்வொரு கேரக்டரையும், தன்மையையும் எழுதிட்டார். யார் சரியாக இருப்பாங்கன்னு பார்க்கணும். சரியாக இருக்கிற ஆளைக் கூப்பிட்டுப் பேசும்போது அவங்களுக்கு நேரம், ஆர்வம் இருக்கணும், அவங்க கால்ஷீட் தரணும். உடம்பு ரெடியாகணும். குதிரை ஓட்டக் கத்துக்கணும். எல்லாம் தேவைப்பட்டது. இதெல்லாம் பொருந்தினால்தான் நடிகர்கள் உள்ளே வர முடியும். உடல் அமைப்பும் பெர்சனாலிட்டியும் ஒண்ணு. அதைத் தாண்டி திறமை வேறொண்ணு. திறமை இருக்கறவங்க பண்ணிடுவாங்க.

சில சமயம் லுக் சரியாக வரவேண்டும். அவங்களைச் சந்தித்து நிறைய பேசி... இந்த விஷயங்களே நாலு மாதத்திற்கு மேலே போச்சு. அப்புறம்தான் முடிவுக்கு வந்தது. எனக்கு வாய்த்த நடிகர்கள் அருமையானவர்கள். யார் யார்னு casting சரியாக முடிவு பண்ணிட்டால் டைரக்டரோட பாதி வேலை சுலபமாகிடும். அப்படி யோசிச்சபோது அமைஞ்ச காம்பினேஷன்தான் இது. ஒவ்வொருத்தரும் இப்ப எப்படி இருக்காங்களோ, அதைவிட பெரிய உயரங்களுக்குப் போக வேண்டிய தகுதியுடையவர்கள்.''

“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி
“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி

``உங்களுக்கு மரபின் வழியில் காப்பியங்கள், நாவல்கள்மீது ஏன் இவ்வளவு ஆர்வம்? இத்தனைக்கும் நீங்க ஆங்கிலவழிக் கல்விதான் படிச்சீங்க. அப்படிப் பார்த்தா ‘ரோஜா'கூட சத்தியவான் சாவித்திரி தான்...’’

‘‘நான் தமிழன்தானே! கதை கேட்டு வளர்ந்தவன்தானே! காப்பியங்களில் அவ்வளவு விஷயம் இருக்கு. அதுக்குள்ளே இருக்கிற டிராமா, கேரக்டர்கள் நெளிவுசுளிவை வச்சு நிறைய படம் பண்ணலாம். அதில் இருக்கிற ஒரு விஷயத்தை எடுத்து உலகத்தில் போட்டால், ‘ரோஜா' மாதிரி ஒண்ணு கிடைக்கும். 1950களில் கல்கி எழுதியிருக்கார். அதிலிருக்கிற எல்லா விஷயமும் இன்னும் சரியாக இருக்கு. அதிகாரத்திற்கு நடக்கிற சண்டை, அதில் இருக்கிற சூழ்ச்சி, சிற்றரசர்கள் சேர்வது, தியாகம், காழ்ப்பு இப்படி எதை எடுத்தும் இப்ப ஒட்டிப் பார்க்க முடியும். அரசியல் அப்படியே இருக்கு. அதனால் பழசைப் பண்ற மாதிரி தோணவே இல்லை. நாம் வாழ்கிற காலத்தின் கதையாகவே எனக்குத் தெரியுது. அதனால்தான் இதற்கு கிளாசிக்னு பெயர். அதனாலேயே இன்னும் நிலைச்சு நிற்கிறது.''

``ரஜினி பழுவேட்டரையராக நடிக்க ஆசைப்பட்டிருக்காரே... ஏன் விட்டீங்க?’’

‘‘அவர்பாட்டுக்குச் சொல்லிட்டுப் போயிட்டார். அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம். அவர் இந்த கேரக்டருக்கு ஆசைப்படுகிறார் என்று போட்டால் நான்தான் மாட்டிக்குவேன். ஏன்னா கதை மாறிடும். அவர் கேட்டது ஒரு கேரக்டர்‌. அவரோ சூப்பர் ஸ்டார். ரஜினிகாந்தைக் கூட்டி வந்து ‘ரோஜா' எடுக்க முடியுமா? பழுவேட்டையரைத் தனியாகப் பிரிச்சு, அவரை வச்சுமே மட்டும் பண்ணலாம். அவர்கிட்ட அவர் ரசிகர்கள் எதிர்பார்க்கிறதைத் தள்ளி வச்சிட்டு எதுவும் பண்ணமுடியாது.''

“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி
“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி

``15 வருஷங்களுக்கு முன்னாடியே நீங்க செய்ய நினைத்த படம் இது. அப்ப செய்திருந்தால் யாரையெல்லாம் வைத்துச் செய்திருப்பீங்க?’’

‘‘முதல் தடவை நினைச்சபோது கமல் சார் மட்டுமே களத்தில் இருந்தார். அது நடக்காமல்போச்சு. அதற்குப் பிறகுகூட இரண்டு மூன்று தடவை முயற்சி செய்திருக்கேன். கமல் சார்கிட்ட பேசினது ஆரம்பம்தான். பிற நடிகர்கள் யாருன்னு பேசவேயில்லை. 2010-ல் விஜய்யை வந்தியத்தேவனாகவும், மகேஷ்பாபுவைப் பொன்னியின் செல்வனாகவும் விக்ரமை ஆதித்த கரிகாலனாகவும் வச்சு ஆரம்பிச்சோம். ஆனால் அது நடக்கவேயில்லை. அதுகூட நல்லதுதான். அப்ப செய்திருந்தால் ஒரு படமாகத்தான் எடுத்திருப்பேன். பொன்னியின் செல்வனே அதற்கான காலத்தைத் தேர்ந்தெடுத்திருக்குன்னு சொல்லணும்.''

``நவீனக் கவிஞர் இளங்கோ கிருஷ்ணனைக் கொண்டு வந்திருக்கீங்க...’’

‘‘ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவர் திறமை வாய்ந்தவர். இந்தப் படத்தோட நல்ல கண்டுபிடிப்பு இளங்கோ. கைவிரல் அளவுக்கு இப்படி நல்ல கவிஞர்கள் இலக்கியத்தில் இருப்பாங்கன்னு தோணுது. எழுத்தாளர்களும் இதுமாதிரி நிறைய வரணும். இலக்கியத்தின் ஆற்றலை சினிமாவில் காட்டணும்.''

``ஜெயமோகன், குமரவேல் திரைக்கதையில் உங்களுக்கு எப்படி உதவியாக இருந்தாங்க?’’

‘‘எனக்கு ஜெயமோகன் ஒரு கையிலும் கல்கி ஒரு கையிலும் இருந்தது பெரிய பலம். எழுதின விதம், வசனம் எல்லாம் பழைய தமிழில் இருக்கணும். நாடகம் மாதிரி தெரியக்கூடாது. அலங்காரத் தமிழும் வேண்டாம். ‘மனோகரா’ மாதிரி போயிட முடியாது. அது அந்தக் காலத்திற்கு அருமையாகப் பொருந்தியது. அது தமிழ் பிரவாகமெடுத்த நேரம். இப்ப அது மாதிரி இருக்கக்கூடாது. ஜெயமோகன் எளிய, புரியக்கூடிய, வடசொல் கலக்காத மொழியில் வசனம் எழுதினார். அது பேச சுலபமாக இருந்தது. குமரவேலுக்கு ஐந்து பாகத்தில் எந்த சந்தேகம் கேட்டாலும் தெரியும். அவர் நாவலில் அத்துப்படியாக இருந்தார். அவர் உதவி முக்கியமானது.''

“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி
“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி
“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி

``ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்னு நல்ல டீம் வேறே...’’

‘‘ரஹ்மான் எல்லோரும் போகிற வழியில் போகாமல், சுலபமான வழியிலும் போகாமல், புதுசாக ஒன்றைத் தேடுவார். ஆரம்பத்தில் அதற்குக் கொஞ்சம் நேரமாகும். அதுக்குள்ளே ஒன்றைக் கண்டுபிடித்து அதில் வளர்வார். அவர் தந்த இசை, குவாலிட்டி இதுவரை பார்த்த சரித்திரப் படங்களிலிருந்து வித்தியாசத்தைக் கொடுத்திருக்கு. ரவிவர்மன் பிரமாதம். நாங்கள் எவ்வளவு உழைப்பைப் போட்டோமோ அதுக்கு மேலே அவர் போட்டாகணும். எப்பவும் ரெடியா இருப்பார். நிறைய நடிகர்கள். யாரையும் காக்க வைக்க முடியாது. நாங்கள் நிற்கும்போது அவர் ஓடணும். நாங்க ஓடும்போது அவர் பறக்கணும். அழகாகவும் எடுக்கணும். குறைந்த அவகாசத்தில் நிறைவு வேணும். அப்படியே செய்தார் ரவி. அவரால்தான் அது முடியும்.''

``நடிகர் நடிகைகள் காலையில் ஆறு மணிக்கே மேக்கப் போட்டு நின்ற அதிசயத்தை எல்லோரும் பேசுறாங்க...’’

‘‘எல்லா நடிகர்களும் நல்ல நடிகர்களே. அவங்களுக்கு நல்ல வேஷம் செய்யணும்னு ஆசைதான். அவங்ககிட்ட நாம் ஒரு உறுதி கொடுத்தால், அதைச் செயல்படுத்தினால், சரியான நேரத்திற்கு வந்து நிற்பாங்க. முதல் நாள் நல்லா பயன்படுத்தினால் அடுத்த நாளும் அப்படியே வருவாங்க. நமக்கு டிஸிப்ளின் இருந்திட்டால் அதுவே அவங்களுக்கும் வந்திடும். இது இரண்டு பேருக்கும் நல்லதுன்னு தெரியும். நான் வேணுங்கிறது கிடைக்கும் வரை நல்லா தொந்தரவு பண்ணுவேன். அதைச் தொந்தரவா அவங்க எடுத்துக்கலைங்கிறது அவங்க பெருந்தன்மை.''

“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி
“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி

``பொன்னியின் செல்வனின் அடுத்த பாகம் எப்போ?’’

‘‘படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மத்தபடி நிறைய வேலைகள் இருக்கு. 9 மாதம் ஆகும். அடுத்த வருஷம் மே, ஜூனில் எதிர்பார்க்கலாம்.''

``கொரோனா சமயத்தில் இளம் இயக்குநர்களைச் சந்திச்சீங்க, எல்லோர்கிட்டேயும் கலந்து நிற்கிறது உங்க வழக்கம் இல்லை...’’

‘‘எனக்கும் நண்பர்கள் பிடிக்கும். நான் சினிமாவில் பட்ட கஷ்டத்தை அவங்களுக்குச் சொன்னேன். அவங்களும் சொன்னாங்க. பழசைப் பத்தி நாங்க சொல்ல, அவங்க நடக்கிறதைப்பத்திச் சொன்னாங்க. எல்லாமே புத்துணர்ச்சியாக இருந்தது. சினிமாவை அவங்க இவ்வளவு காதலிக்கிறது அழகாகப்பட்டது. அதே காதலோடு நாமும் இருக்கணும்னு நினைச்சுக்கிட்டே வந்தேன். நல்ல பகிர்வு. அந்தச் சந்திப்பை இன்னும் விரிவுபடுத்த இருக்கோம். சில திட்டங்கள் யோசனைகள் உருவாகியிருக்கு... பார்க்கலாம்.''

“எம்.ஜி.ஆரும் கமலும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காங்க!” - மணிரத்னம் ஸ்பெஷல் பேட்டி

``உங்க அனுபவத்தில் இதுதான் கதைன்னு ஒரு விஷயத்தை எப்படி முடிவு பண்றீங்க?’’

‘‘நிறைய பேசுவோம். சில சமயம் பாதி வளரும். சிலது கிட்டத்தட்ட வந்திடும். சில கதைகள் முடிந்த பிறகும்கூட அப்படியே இருக்கும். முழுசா முடிச்சுட்டு சிலது செயலுக்கு வராது. இதுல ஒரு பார்முலா கிடையாது. திடீர்னு ஒரு விஷயம் பிடிக்கும். தொடர்ந்து நூல் பிடிச்சுப் போனால் ரொம்பவே ஆர்வம் வந்திடும். உள்ளுக்குள்ளே ஏதோ வந்து இதைப் பண்ணினால் நல்லா வரும்னு செய்தி சொல்லும். ஆனால் அது சினிமாவாகிறபோது கவனம் வேணும். நமக்குப் பிடிக்கிற அந்த விஷயம் ஒரு வருஷம் கழிச்சு ரெடியாகி தியேட்டரைப் போய் அடைகிற வரை மக்களுக்குப் பிடிக்கணும்.

சில ஐடியாக்கள் தோணும். அதை அப்படியே விட்டிருப்போம். திரும்பத் திரும்ப நம்ம மனசுக்குள்ளே வந்தால் அதை எடுத்திடணும். விதை வீரியமாக இருந்தால் பண்ணிடலாம். ‘ரோஜா'வை எடுக்கிறதுக்கு மூணு வருஷம் முன்னாடியே மனசுக்குள்ளே வந்துவிட்டது. ஃப்ரெண்ட் கிட்ட ‘நீ பண்ணு’ன்னு சொன்னேன். அவர் செய்யலை. நானே செய்து பார்த்திட்டேன். இதுக்கு ஒரு லாஜிக்கான வழியே இல்லைங்க.''

``37 வருட சினிமா அனுபவம் என்ன சொல்லுது..?’’

‘‘இன்னமும் ஒண்ணுமே கத்துக்கலைன்னு தோணுது. ஒரு படத்தை எப்படி ஆரம்பிக்கிறதுன்னு இன்னும் தெரிய மாட்டேங்குது. தெரியாத வரைக்கும் முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கலாம். அதைத்தான் செய்துக்கிட்டே இருக்கேன். உலகத்தை ஆச்சரியமாகப் பார்க்கறேன். ரியாக்ட் பண்றேன். இவ்வளவு நாளாக இங்கே இருந்தாலும் சினிமா கைவந்த கலையாக மாற மாட்டேங்குது. சொல்லப்போனால் இன்னமும் அதான் என்னை சினிமாவிற்குள் உட்கார வைக்குது.''