Published:Updated:

8ம் பிரதி.. 11வது சாட்சி.. பூட்டிய அறையில் விசாரணை.. மஞ்சு வாரியரின் வைலன்ட் மோடால் டென்ஷனான திலீப்!

மஞ்சு வாரியார்
மஞ்சு வாரியார் ( twitter )

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என வெளியே இருந்து பல்வேறு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வண்ணம் இருந்தார். ஆனால், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட சினிமாக்களில் நடித்த முன்னணி நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவை உலுக்கியது. கேரளத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் நடிகையின் கார் டிரைவர் மார்ட்டின் ஆண்டனி, பல்சர் சுனில் என்பவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டார்.

சுமார் 80 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு நடிகர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது படங்களில் நடித்து வருகிறார். எனினும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என வெளியே இருந்து பல்வேறு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வண்ணம் இருந்தார். ஆனால், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

திலீப்
திலீப்
twitter

தற்போது இந்த வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கொச்சி கலூரில் சிறப்பு நீதிமன்றத்தில் பெண் நீதிபதி முன் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. 6 மாத காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதால் மொத்தம் உள்ள 385 சாட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விடுமுறை இல்லாமல் விசாரணை நடைபெற்று வருகிறது. 14 பேர் குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கில் நடிகர் திலீப் 8-ம் பிரதியாக சேர்க்கப்பட்டுள்ளார். பூட்டிய அறையில் நடந்து வரும் விசாரணையில் மலையாள திரையுலகின் முக்கிய நடிகர்கள் தினமும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய விசாரணை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Vikatan

ஆம்.. நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியான நடிகை மஞ்சு வாரியார் நேற்று விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கில் 11 சாட்சியாக அறியப்படும் மஞ்சு முக்கிய சாட்சியும் கூட. காரணம், நடிகை வன்கொடுமை செய்யப்படுவதற்கு திலீப், காவ்யா மாதவன் இடையேயான உறவை மஞ்சுவிடம் அந்த நடிகை தெரிவித்ததுதான். கூடவே, வன்கொடுமை செய்யப்பட்ட நடிகையும் மஞ்சுவும் நெருங்கிய தோழிகளும்கூட.

அப்படி இருக்கையில் நேற்றைய விசாரணைக்கு மஞ்சு வரப்போவதில்லை, திலீப்புக்கு எதிராக அவர் வாக்குமூலம் கொடுக்கமாட்டார் என்று கேரளத்தில் ஒருதரப்பினர் பேசிவந்தனர். இதனால் அவர் நீதிமன்றத்துக்கு வருவாரா என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் நடிகை மஞ்சு வாரியார் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதுவும், நீதிமன்றம் காலை 11 மணிக்குத் தொடங்கிய நிலையில் தனது வக்கீலுடன் காலை 9 மணிக்கெல்லாம் நீதிமன்றத்துக்கு வந்தார்.

மஞ்சு வாரியார்
மஞ்சு வாரியார்
twitter

பின்னர் பூட்டிய அறையில் விசாரணை தொடங்கியது. 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1 மணிக்கும் மேலாக நீடித்தது. அதுவரை எந்த இடைவேளையும் எடுக்காமல், உணவுகூட அருந்தாமல் தனது சாட்சியத்தை நீதிபதியிடம் மஞ்சு தெரிவித்தார் என்கின்றன மலையாள ஊடகங்கள். அதில், சுமார் இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணையில் திலீப்புக்கு எதிராக 2017-ல் சம்பவம் நடந்தபோது போலீஸில் என்ன வாக்குமூலம் அளித்தாரோ, அதையே தான் தற்போதும் தெரிவித்துள்ளார் என்கின்றன ஊடகங்கள்.

Vikatan

2017-ல் ``திலீப்பை விவாகரத்து செய்வதற்கு காரணம் காவ்யா மாதவன் உடனான உறவுதான். இதை தன்னிடம் சொன்னதற்காக வன்கொடுமை செய்யப்பட்ட நடிகை மீது திலீப் கோபத்தில் இருந்தார். காவ்யாவுடனான உறவு பற்றி தாக்கப்பட்ட நடிகை என்னிடம் சொன்னதைப் பற்றி நான் திலீப்பிடம் கேட்டபோது, ​​அவர் என்னிடம் இல்லை என்று மறுத்தார். இதனால் சதி நடந்திருக்கலாம்" என்று மஞ்சு வாக்குமூலம் கொடுத்திருந்தாக கூறப்படுகிறது. இதையே நேற்றைய விசாரணையிலும் மஞ்சு தெரிவித்தார் எனக் கூறப்படுகிறது. நேற்று நீதிமன்றத்துக்கு வந்திருந்த திலீப்பும் மஞ்சு சாட்சியத்தின்போது கோபத்துடன் வெளியே சென்றுள்ளார்.

சித்திக்
சித்திக்
twitter

இந்த வழக்கின் தொடக்கப்புள்ளியே மஞ்சு வாரியாரின் சாட்சியம்தான். அதன்படி பார்த்தால், மஞ்சு வாரியார் நேற்று நீதிமன்றத்தில் திலீப்புக்கு எதிராக கொடுத்திருக்கும் சாட்சியம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இது வழக்கின் திருப்பு முனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது. மஞ்சு மட்டுமல்ல.. மலையாள திரையுலகின் பல்வேறு பிரபலங்கலான நடிகர் குஞ்சாக்கோ போபன், சித்திக், லால், நடிகை பிந்து பணிக்கர், ரம்யா நபீஸன் என ஏகப்பட்ட பேர் தினமும் ஆஜராகி சாட்சியம் அளிக்கவுள்ளனர். இதனால் வழக்கில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு