Published:Updated:

``அந்தப் படம் ஓடாம இருந்திருந்தா... இப்போ நான்?!" - பர்சனல் பகிரும் மஞ்சு வாரியர்

Manju Warrier

மல்லுவுட்டில் தூள் கிளப்பும் நடிகை மஞ்சு வாரியர், `அசுர’னுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலும் தடம் பதிக்க ஆயத்தமாகி வருகிறார். அவருடனான உரையாடலில், லாக்டெளன் அனுபவம் முதல் பர்சனல்வரை பகிர்ந்தார்.

``அந்தப் படம் ஓடாம இருந்திருந்தா... இப்போ நான்?!" - பர்சனல் பகிரும் மஞ்சு வாரியர்

மல்லுவுட்டில் தூள் கிளப்பும் நடிகை மஞ்சு வாரியர், `அசுர’னுக்குப் பிறகு தமிழ் சினிமாவிலும் தடம் பதிக்க ஆயத்தமாகி வருகிறார். அவருடனான உரையாடலில், லாக்டெளன் அனுபவம் முதல் பர்சனல்வரை பகிர்ந்தார்.

Published:Updated:
Manju Warrier

நாயகர்களையே பெரிதும் கொண்டாடும் சினிமா உலகில், வித்யா பாலனும் மஞ்சு வாரியரும் ட்ரெண்டை மாற்றியமைத்து திறமையால் ஜொலிக்கும் குறிஞ்சிப் பூக்கள். 40 வயதைக் கடந்த நிலையில், இவர்கள் இருவரும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும், அடைந்திருக்கும் உயரமும் அசாத்தியமானது. தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களால் நிராகரிக்கப்பட்டு, வட இந்தியாவில் மையம் கொண்டுள்ள வித்யா பாலனுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தது பாலிவுட்.

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தபோதே திருமணமாகி, ஆறு ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகியிருந்த மஞ்சு வாரியர், செகண்டு இன்னிங்ஸில் சூப்பர் ஸ்டார்களுக்கு இணையான அசுர வளர்ச்சியில் கலக்கிக்கொண்டிருக்கிறார். தென்னிந்திய சினிமாக்களில் நாயகிகளை மையப்படுத்திய சினிமாக்கள் அதிக அளவில் எடுக்கப்படுவதற்கு மஞ்சுவின் படங்களும் முக்கிய காரணம். இவரது நடிப்பில் 'சதுர் முகம்' திரைப்படம் ஓ.டி.டி-யில் சமீபத்தில் ரீ-ரிலீஸானது. `மீண்டும் ஒரு ஹிட் பார்சல்' என்பதுபோல, இந்தப் படம் உட்பட தொடர் வெற்றிகளைக் கொடுத்து இந்தியா முழுக்க கவனம் பெற்றுள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மல்லுவுட்டில் நிலை கொண்டிருக்கும் மஞ்சு, `அசுர’னுக்குப் பிறகு, தமிழ் சினிமாவிலும் தடம் பதிக்க ஆயத்தமாகி வருகிறார். அவருடனான உரையாடலில், லாக்டெளன் அனுபவத்திலிருந்தே பேசத் தொடங்கினார்.

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

``கிளாசிக்கல் டான்ஸ் பிராக்டிஸ், வீணை வாசிப்புன்னு பயனுள்ள விஷயங்களைச் செஞ்சேன். நண்பர்கள் பலருடனும் பேசினேன். சுமாரா பாடவும் செய்வேன். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்ல உருவான `என்ன விலை அழகே' பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். சில வருஷங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா போனப்போ, ஒரு கடற்கரையில அந்தப் பாடலைப் பாடினேன். அந்தத் தருணம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. அப்போ எடுத்த வீடியோவை, லாக்டெளன் டைம்ல என்னோட சோஷியல் மீடியா பக்கத்துல ரீ-ஷேர் செஞ்சேன்.

பாசிட்டிவ் மெசேஜ் நிறைய வந்ததால, உற்சாகம்கூடி ஓய்வு நேரத்துல பிடிச்ச பாடல்களைப் பாடினேன். குடும்பத்தினருடன் அதிகம் நேரம் செலவிட முடிஞ்சது. நம்மோட பாதுகாப்புக்காக, முன்களப் பணியாளர்கள் வெளியில போராடிட்டு இருக்காங்க. அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, வீட்டுக்குள்ளயே பாதுகாப்பா இருக்க வேண்டியது நம்முடைய கடமை. அந்தப் பொறுப்புணர்வைச் சரியா கடைப்பிடிக்கிறேன். கேரளாவுல கோவிட் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரல. தொடர்ந்து பல மாதங்களா வீட்டிலேயேதான் இருக்கேன்.

ஐஸ்வர்யா ராய் உடன் மஞ்சு வாரியர்
ஐஸ்வர்யா ராய் உடன் மஞ்சு வாரியர்

மலையாளத் திரையுலகம் பல மாதங்களா முடங்கியிருக்கு. நிறைய மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பல. அதனால, ஹாலிடே உணர்வுல வீட்டுல மகிழ்ச்சியுடன் நேரம் செலவிட முடியல. ஆனாலும், வழக்கமான வேலைகளுடன், புக்ஸ் படிக்குறது, பிடிச்ச விஷயங்கள்னு மனசை பாசிட்டிவ்வா வெச்சுக்குறேன். என்னோடதும் ரொம்பவே நார்மல் லைஃப்தான்" என்று சிரிப்பவரின் பேச்சு, சினிமா விஷயங்கள் குறித்து திசைமாறியது.

``சமீப காலங்கள்ல எந்த மொழி சினிமாவா இருந்தாலும், ஸ்டார் வேல்யூ தாண்டி, கதை நல்லா இருந்தா மக்கள் நிச்சயமா வரவேற்பு கொடுக்குறாங்க. அதுக்கு சமீபத்திய உதாரணமான `தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தைப் பார்த்து வியந்தேன். சினிமாவுல ஏற்பட்டுள்ள இந்த மாற்றமும், மக்களின் ரசனையும் நிறைய கலைஞர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். `தி கிரேட் இந்தியன் கிச்சன்', நான் நடிச்ச `ப்ரதி பூவன்கோழி' படம் உட்பட அன்றாட வாழ்க்கையில நம்மைச் சுத்தி நடக்குற விஷயங்கள்ல இருந்தே, சமூகத்துக்குச் சொல்ல வேண்டிய, படமாக்கப்பட வேண்டிய கதைகள் நிறைய இருக்கு.

Manju Warrier
Manju Warrier

கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான கலைஞர்கள் யாரா இருந்தாலும், அவங்கதான் கதையின் நாயகன்; நாயகி. அவங்களுக்கு வயசு வித்தியாசமும், பிரபலத்தன்மையும் தேவையே இல்லைங்கிறது என் கருத்து. திறமையான கலைஞர்கள் யாரா இருந்தாலும், அவங்களுக்கு சினிமாவுல உரிய இடம் உண்டு.

சினிமாவுக்கு வந்த புதுசுல இருந்தே, தமிழ் சினிமா மேல எனக்கு தனிப் பிரியம் உண்டு. நேரம் கிடைக்குறப்போ, தமிழ்ப் படங்களை ஆவலா பார்ப்பேன். சமீபத்துல வெளியான `சூரரைப் போற்று’ படமும், `பாவக்கதைகள்’ வெப் சீரிஸும் எனக்கு ரொம்பவே பிடிச்சது” என்பவர், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் நடித்த `ஜாக் அண்டு ஜில்’ உள்ளிட்ட மூன்று படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர்

``ஆறு வருஷ இடைவெளிக்குப் பிறகு `ஹவ் ஓல்டு ஆர் யூ’ படத்துல ரீ-என்ட்ரி கொடுத்தப்போ, எனக்குள் நிறைய தயக்கங்கள் இருந்துச்சு. ஆனா, அந்தப் படத்தின் கதையும், படம் எடுக்கப்பட்ட விதமும்தான், அந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம். அந்தப் படத்தை மக்கள் ஏத்துக்காம இருந்திருந்தா, என் பயணம் எப்படி மாறியிருக்கும்னு நினைச்சாலே திகைப்பா இருக்கு. கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, வெற்றி தோல்விகளை ஒரே கண்ணோட்டத்துல பார்க்குறேன்.

கமர்ஷியல், ஆர்ட் சாயல்னு ஜனரஞ்சகமான கதைகளைத் தேர்வு செய்யுறதுல கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதுல, சில கேரக்டர்களுக்கு மட்டும்தான் ஹோம் வொர்க் தேவைப்படும். மத்தபடி ஆன் ஸ்பாட் நடிப்புதான். சமீபத்துல, பிரபல நகைக்கடை நிறுவனத்தின் காலண்டர் போட்டோ ஷூட்ல வேலை செஞ்சதுகூட மறக்க முடியாத அனுபவம். அதுல, வித்தியாசமான காஸ்டியூம்ல போட்டோஷூட் செஞ்சது, நிறைவான உணர்வைக் கொடுத்துச்சு.

இதுபோல, சினிமா, விளம்பரம்னு எந்த புராஜெக்ட்டுல வேலை செஞ்சாலும், வெரைட்டி காட்டணும்னு ரொம்பவே ஆசைப்படுவேன். கோடிகள்ல முதலீடு செய்யப்படுற சினிமாத்துறையில, என்னை மையப்படுத்தியும் படங்கள் எடுக்குறாங்க. இதுக்காக, பலரோட நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் என்னால பூர்த்தி செய்ய முடியுறதே பெரிய பாக்கியம். அதுக்குத் தகுதியானவளா என்னைத் தயார் படுத்திக்குறது மட்டும்தான் என்னோட வேலை. ஏராளமான கலைஞர்களின் உழைப்பாலதான், நானும் சுடர்விடுறேன்" என்று புன்னகையுடன் முடித்தார்.

சினிமா, பர்சனல் விஷயங்கள் குறித்த மஞ்சு வாரியரின் விரிவான பேட்டியை, தற்போதைய அவள் விகடன் இதழில் படிக்கலாம்.