Published:Updated:

`மன்மத லீலை' டைட்டிலில் பிரச்னையா? வாட்ஸ்அப் ஆடியோ குழப்பமும், வெங்கட் பிரபுவின் விளக்கமும்!

மன்மத லீலை

"‘மன்மத லீலை’ தலைப்புக்கு கலாகேந்திராவை அணுகியதாகவும் அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்பதாகவும், இப்போது சினிமாவே தயாரிக்காதவர்களிடம் எதற்குப் பணம் கொடுத்து டைட்டில் வாங்க வேண்டும்" என்றும் போகிறது அந்த ஆடியோ.

`மன்மத லீலை' டைட்டிலில் பிரச்னையா? வாட்ஸ்அப் ஆடியோ குழப்பமும், வெங்கட் பிரபுவின் விளக்கமும்!

"‘மன்மத லீலை’ தலைப்புக்கு கலாகேந்திராவை அணுகியதாகவும் அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்பதாகவும், இப்போது சினிமாவே தயாரிக்காதவர்களிடம் எதற்குப் பணம் கொடுத்து டைட்டில் வாங்க வேண்டும்" என்றும் போகிறது அந்த ஆடியோ.

Published:Updated:
மன்மத லீலை

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்திருக்கும் படம் ‘மன்மத லீலை’. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்துக்கு பழைய படத்தின் டைட்டில் வைத்திருப்பதில் சிக்கல் இருப்பதாக சில ஆடியோக்கள் உலவுகின்றன.

’மன்மத லீலை’ படம் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்து 1976ல் வெளியாகி ஹிட் ஆன படம். கலாகேந்திரா நிறுவனத்தின் கோவிந்தராஜன் படத்தைத் தயாரித்திருந்தார். படம் இந்தியிலும் தெலுங்கிலும் கூட வெளியானது.

அந்தப் படத்தையே தற்போது வெங்கட் பிரபு எடுத்து வருவதாகவும் இது தொடர்பாக தங்களிடம் முறையாக அனுமதி வாங்கவில்லையென்றும் மறைந்த கோவிந்தராஜனின் குடும்பத்தினர் கூறி வரும் நிலையில், தயாரிப்பாளர் முருகானந்தமோ, "நாங்க எடுக்கிற படம் எந்தப் படத்தின் ரீமேக்கோ தழுவலோ இல்லை என்றும், டைட்டில் குறித்து இயக்குநருக்குதான் தெரியும்" என்றும் கூறி வருகிறார். இயக்குநர் கே.பாலசந்தர் ரசிகர் மன்றத்தின் சார்பிலும் படத்தின் டைட்டிலுக்கு அனுமதி வாங்க வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன்மத லீலை
மன்மத லீலை

இதனிடையே சினிமா தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக இருக்கும் சில வாட்ஸ் அப் குரூப்களில் கலாகேந்திரா நிறுவனத்தைப் பற்றி சிலர் பேசும் ஆடியோக்கள் வலம் வருகின்றன.

"‘மன்மத லீலை’ தலைப்புக்கு கலாகேந்திராவை அணுகியதாகவும் அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்பதாகவும், இப்போது சினிமாவே தயாரிக்காதவர்களிடம் எதற்குப் பணம் கொடுத்து டைட்டில் வாங்க வேண்டும்" என்றும் போகிறது அந்த ஆடியோ.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து மறைந்த கலாகேந்திரா கோவிந்தராஜனின் மகள் கவிதாவிடம் பேசியபோது,

"அந்த ஆடியோவுல டைட்டிலுக்கு க்ளைம் பண்றதுக்கு இவங்க யாருனு கேக்கறாங்க. அதுவும் இப்ப தயாராகி இருக்கிற அந்தப் படத்துக்குச் சம்பந்தமில்லாதவங்க எல்லாம் வாட்ஸ்அப் ஆடியோ ரிலீஸ் பண்ணிட்டிருக்காங்க. நாங்க எடுத்து ஹிட் ஆன படம்ங்க அது. டைட்டில் உரிமை பத்தி நான் பேசக் கூடாதா?

தமிழ், கன்னடம், இந்தின்னு மூணு மொழியில இருபது படங்களுக்கு மேல தயாரிச்சவங்க நாங்க. எங்களுடைய பல படங்கள் தேசிய விருதெல்லாம் வாங்கியிருக்கு. ரஜினியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தின ‘அபூர்வ ராகங்கள்’ எங்க தயாரிப்பு. ‘எதிர் நீச்சல்’, ‘அரங்கேற்றம், தண்ணீர் தண்ணீர்’னு எங்களூடைய எத்தனையோ படங்கள் எவர்கிரீன் லிஸ்டுல இருக்கு.

மன்மத லீலை
மன்மத லீலை

’ஆனா எங்களை 500 ரூபாய் சந்தா கட்ட முடியலை’னு அந்த ஆடியோவுல இழிவாப் பேசறாங்க. அதோட நிறுத்தினா பரவால்ல. டைட்டிலுக்கு எங்களைப் படக்குழு தரப்பிலிருந்து அணுகியதாகவும் நான் 50 லட்சம் கேட்டதாகவும் நாக்கு கூசாம ஒரு பொய்யைச் சொல்றாங்க அந்த ஆடியோவில். படக்குழுவுல இருந்து என்னை யாரும் இது தொடர்பா சந்திக்கலைங்க. ஆனா, யார் தூண்டுதல்ல இந்த மாதிரியான சம்பந்தமில்லாத மனிதர்களின் ஆடியோக்கள் வெளிவருதுன்னு தெரியலை. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரைத் தந்த எங்க குடும்பத்துக்கு இன்றைய சினிமா தர்ற மரியாதை இவ்ளோதானானு நினைக்கிறப்ப ரொம்பவே வேதனையா இருக்கு" என்கிறார் இவர்.

இந்தக் குழப்பம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபுவிடமே பேசினோம். "பழைய படத்துக்கும் இந்தப் படத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதன் ரீமேக்காக இதை எடுக்கவில்லை. இது முற்றிலும் புதிய கதை. இந்தக் கதைக்கு 'மன்மத லீலை' என்ற டைட்டில் மிகவும் பொருந்திப் போனது. படத்துக்கு சென்சார் சான்றிதழும் வாங்கிவிட்டோம். ஒருவேளை டைட்டிலில் பிரச்னை என்றால் சென்சாரிலேயே மறுத்திருப்பார்கள். NOC வாங்கச் சொல்லியிருப்பார்கள். அப்படி எதுவும் கேட்கவில்லை.

வெங்கட் பிரபு
வெங்கட் பிரபு

என் படத்துக்கு ஒரு பழைய படத்தின் தலைப்பை வைப்பது இதுவே முதல் முறை. அதனால் இது தொடர்பாக அப்பாவிடம் பேசினேன். காப்பிரைட்டிலும் பேசினோம். பழைய டைட்டில் என்பதால் பிரச்னையில்லை. குறிப்பிட்ட காலமானாலே அந்தத் தலைப்பைப் பயன்படுத்தலாம் என்றுதான் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் நாங்கள் முறைப்படி இந்த டைட்டிலை ரெஜிஸ்டர் செய்திருக்கிறோம். இது தொடர்பாக கலாகேந்திரவிடமிருந்தும் எங்களை யாரும் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. 'எங்களிடம் நீங்கள் NOC வாங்குங்கள்' என்றும் யாரும் சொல்லவில்லை. இப்படி ஒரு பிரச்னை உலாவுகிறது, வாட்ஸ்அப்பில் ஆடியோ சுற்றுகிறது என்பதே எனக்கு புதிய செய்திதான். இது ஒரு பிரச்னையே இல்லை. நடுவிலிருக்கும் யாரோதான் குழப்பம் ஏற்படுத்த இப்படிச் செய்கிறார்கள்" என்றார்.