Published:Updated:

மனோரமா - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

Manorama - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Manorama - A Reporter's Diary

பத்து நாட்கள் நடிக்காமலிருந்தால் இவருக்குப் பைத்தியமே பிடித்து விடும்!

மனோரமா - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

பத்து நாட்கள் நடிக்காமலிருந்தால் இவருக்குப் பைத்தியமே பிடித்து விடும்!

Published:Updated:
Manorama - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
Manorama - A Reporter's Diary

மீபத்தில் மனோரமா போய்க் கொண்டிருந்த வண்டி திடீரென்று சாலையில் நின்றது. இயந்திரக் கோளாறு.அப்போது அவ்வழியே வந்த ஓர் இளைஞர் மனோரமாவை அடையாளம் கண்டுகொண்டார்.

``ஐ..! மனோ! என்ன மனோ, எங்கே போறீங்க..? படப்பிடிப்பா மனோ?" என்று மனோரமாவை `மனோ' `மனோ' என்று அழைத்துக் கேள்விகளைக் கேட்டுத் துளைத்தார்.ரொம்ப நாள் கூடப் பழகியது போல அந்த இளைஞர் தன்னை இப்படி `மனோ... மனோ' என்று அழைப்பதைக் கேட்ட மனோரமாவுக்குக் கோபத்திற்குப் பதில் சிரிப்பு வந்தது. சிரித்தும் விட்டார்.

அந்த இளைஞரின் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளித்தார்.ரசிகர்களைக் கண்டதும் வண்டியின் கண்ணாடியை ஏற்றி விட்டு `உர்' என்று முகத்தை வைத்துக் கொள்ளும் நட்சத்திரங்கள் சிலரைப் பார்த்திருக்கிறேன்.இப்படி வெளியில் மட்டும் அல்ல, பொதுக்கூட்டங்களில்கூட மனோரமா பேச ஆரம்பித்தால் உடனே கலகலப்பாக சகஜமாகப் பேச ஆரம்பித்து விடுவார்.

இவ்வளவு ஏன்? அவர் நட்சத்திரமாகிக் கொண்டிருந்த சமயம்...

``விகடனுக்காக அண்ணாசாலையில் நீங்கள் நடந்து செல்ல வேண்டும். சாலையில் பலருடன் பேசவேண்டும், அதை நாங்கள் புகைப்படம் எடுத்துக் கட்டுரையாக்கப் போகிறோம். இதற்குத் தைரியம் இருக்கிறதா?" என்று கேட்டேன்.

அதற்கு அவர், ``எப்போது நடக்க வேண்டும்? நான் தயார்!" என்று கிளம்பி விட்டார்.சாலையில் தனக்கு முன் பின் தெரியாதவர்களிடமெல்லாம் போய் சகஜமாகப் பேசினார். ஒரு சிலர் பதிலளித்தனர். ஒருவரிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டார்! அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவேயில்லை.

அண்ணா சிலையிலிருந்து அண்ணா மேம்பாலம் வரை போனார். இடையே சிறு பேருந்துப் பயணம் வேறு! அவரது தைரியத்தைப் பார்த்து நாங்கள் வியந்தோம். இப்படி எடுத்த காரியத்தைத் திறமையாக முடிக்க வேண்டும் என்று பாடு படுவார். கடனே என்று பணியாற்ற மாட்டார்.

படப்பிடிப்பில் தன்னோடு நடிப்பவர்கள் ஏதாவது நல்ல நகைச்சுவை ஒன்று சொல்லிவிட்டால் போதும், உடனே துடித்துப் போய் விடுவார், தானும் அதற்குமேல் ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று.

மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப் படமாட்டார். மற்றவர்களைவிட சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற தொழில் பொறாமை இவரிடம் உண்டு.

Manorama - A Reporter's Diary
Manorama - A Reporter's Diary

பத்து நாட்கள் படப்பிடிப்பு இல்லாமல் இவரை வீட்டிலிருக்கச் செய்ய முடியாது. பத்து நாட்கள் நடிக்காமலிருந்தால் இவருக்குப் பைத்தியமே பிடித்து விடும்!

அத்தனை ஆர்வம்.ஒரு முறை இவரோடு பேசும்போது, ``நல்ல வேளை, ஓரிரண்டு படங்களில் நான் கதாநாயகியாக நடித்ததோடு சரி. பின்னர் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க வந்து விட்டேன். அது ஒரு வகையில் எனக்கு நல்லதாகப் போயிற்று. கதாநாயகியாக நடித்தால் இளமை இருக்கும் வரைதான் மதிப்பு. நகைச்சுவைப் பாத்திரங்களுக்கு வயதைப் பற்றிக் கவலை இல்லை. என் கடைசிக் காலம் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன்" என்றார்.

நடிப்பின் மீது இவருக்கு அத்தனை காதல்!தன்னைக் கதாநாயகியாகக் `கொஞ்சும் குமரி'யில் நடிக்க வைத்த அமரர் டி.ஆர். சுந்தரத்தின் படத்தைத்தான் தன் வீட்டில் பெரியதாக மாட்டி வைத்திருக்கிறார்.

இவ்வளவு ஏன்? நடிப்பின் மீது இவருக்கு இருக்கும் ஆர்வத்தால் சில படங்களுக்குப் பணமே வாங்காமல் நடித்திருக்கிறார். அந்தத் தயாரிப்பாளர்களையும் எங்காவது பார்த்தால் பணம் கேட்க மாட்டார். அவர்களாகக் கொடுத்தால் சரி. அவர்களும் கொடுக்கவேயில்லை.

மேடையில் நடிக்கும் போது வசனத்திலும் உடையிலும் தன் முழு கவனத்தைச் செலுத்துவார். `என் வீடு... என் கணவர்... என் குழந்தை' என்ற நாடகத்தில் இவர் நடித்த 13 காட்சிகளில் 12 புடவைகளை மாற்றி மாற்றிக் கட்டிக் கொண்டு வருவார். அதுவும் சாதாரணக் கட்டா? மடிசார் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். சில விநாடிகளில் அடுத்த காட்சிக்குத் தயாராகி விடுவார்.

மனோரமாவுக்கு இரக்க குணம் அதிகம். பலர் இவரிடம் வந்து பணம் வாங்கிச்சென்றிருக்கின்றனர். இவருக்குச் சம்பந்தமே இல்லாத தெலுங்குப் பட உலகிலிருந்து அதில் நடிக்கும் நடிக நடிகையர்கூடச் சிலர் வந்து உதவி பெற்றுச் சென்றிருக்கின்றனர்.

மனோரமா வீட்டில் எப்போதும் பத்துப் பூனைகள், நாலைந்து நாய்கள், தொட்டியில் மீன்கள், ஏழெட்டுக் கோழி, சில மாடுகள் இப்படிக் காணப்படும். நாய்களையும் பூனைகளையும் தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சுவார்.

தெருவில் ஏதாவது பூனையோ நாயோ அனாதையாகக் கிடந்தால் எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் அன்பாக வளர்ப்பார்.

சில மிருகங்களை நண்பர்கள் கேட்கிறார்கள் என்று கொடுத்து விடுவார். திடீரென்று ஒரு நாள் வண்டியை அனுப்பி, ``அந்த நாய்க்குட்டியைக் கொண்டு வரச் சொல்! பார்த்து ரொம்ப நாளாயிற்று" என்று சொல்லி வரவழைப்பார். அது வந்ததும் சின்னக் குழந்தையைப் போல அதனிடம் விளையாடுவார்.- இவருக்கு இருக்கும் வசதிக்கு வெளிநாட்டிலிருந்துகூட நாய்க்குட்டியும் பூனைக்குட்டியும் வரவழைக்கலாம்.

அப்படி உயர்ந்த ரக மிருகங்களை வளர்க்கும் பெரிய மனிதத் தோரணை  இவரிடம் இல்லை.

தன் கண்ணில்பட்ட அனாதை மிருகங்களுக்கு அபயம் அளிக்க வேண்டும். அது தான் அவர் எண்ணத்தில் மேலோங்கி நிற்கும்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள். மனோரமா இரண்டு அனாதைப் பூனைக்குட்டிகளைக் கொண்டு வந்தால், அவர் மகன் பூபதி நான்கு அனாதை நாய்க்குட்டிகளைக் கொண்டு வருவார்! 

- பாலா

(14.01.1981 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism