Published:Updated:

"மனோரமா விரும்பி, நிறைவேறாத அந்த ஒரு ஆசை!" - 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் பகிர்வு #HBDManorama

ப.தினேஷ்குமார்

நகைச்சுவை, குணச்சித்திரம் என பன்முக நடிப்பை வெளிப்படுத்தியவர் 'ஆச்சி' மனோரமா. இன்று அவருக்குப் பிறந்தநாள். நடிக்கத் தொடங்கிய காலம் முதல், அவரது இறுதிக் காலம் வரை... அவரைப் பற்றிய சுவாரஸ்யமான நினைவுகளின் தொகுப்பு இது.

மனோரமா
மனோரமா

தமிழ் திரையுலகம் ஆரம்பித்த காலகட்டங்களில் இருந்து இதுவரை க்கும்நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்ற எத்தனையோ கதாநாயகிகளைப் பார்த்திருப்போம். ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுடைய புகழும், நடிப்பும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிடும். ஆனால், காலத்திற்கும் மாறாமல் காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு நகைச்சுவை, குணச்சித்திரம் எனப் பன்முக நடிப்பை வெளிப்படுத்தியவர், 'ஆச்சி' மனோரமா.

மனோரமா
மனோரமா

நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்துப் பிரிவுகளிலும் தனது பெயரை நிலைநாட்டிய மனோரமா, நடிப்பில் ஐம்பது ஆண்டுகளைக் கடந்து 'பொன்விழா' கொண்டாடியவர். இன்று மனோரமாவின் 81-வது பிறந்தநாள். அவரைப் பற்றிய சில தகவல்கள் இதோ!.

மனோரமாவின் தந்தை காசி கிளாக்குடையார், தனது மனைவியின் தங்கையை இரண்டாம் தாரமாக மணந்துகொண்டு, பத்து மாதக் குழந்தையான மனோரமாவையும், அவரது அம்மாவையும் வீட்டைவிட்டு வெளியேற்றினார். அப்படி வெளியேறியதும், காரைக்குடி அருகிலுள்ள பள்ளத்தூரில் குடிபெயர்ந்து வீட்டு வேலைகளைப் பார்த்தும், பலகாரங்களைச் செய்தும் சில காலம் வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார், மனோரமாவின் தாயார்.

ஒருகட்டத்தில் அவருக்கு உடல்நலம் குன்றிப்போக, குடும்பப் பொறுப்புகளைச் சுமந்துகொண்டு பள்ளிக்கூடம் படிக்க வேண்டிய பன்னிரண்டு வயதில், பத்து ரூபாய் சம்பளத்தில் 'யார் மகன்' என்ற நாடகத்தின் மூலம் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

'கிராமத்தில் பொம்பளப் புள்ளைங்க வெளியே வர்றதே பாவம்' என்றிருந்த காலகட்டத்தில் 'கலைமாமணி நாடக சபா' குழுவில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார், மனோரமா. ஒரு நாடகத்தில் நடிக்கத் திருமயத்தில் ரயிலேறியதும், நூறு பக்க வசனத்தை மனப்பாடம் செய்ய நாடகக் குழு கொடுத்துவிட, கோவையில் இறங்குவதற்குள் அத்தனை பக்கத்தையும் மனப்பாடம் செய்து முடித்திருந்தார், மனோரமா. இவர் கலையார்வத்திற்கு இந்த ஒரு நிகழ்வே சிறந்த சான்று. 

மனோரமாவுக்கு எல்லாமே அவரது தாயாரும், அவரது மகன் பூபதியும்தான். மனோரமாவின் தாய் கடைசிவரை மனோரமாவின் படங்களைப் பார்த்துவிட்டு, 'இன்னும் நீ நல்லா நடிக்கணும்' என்றுதான் சொல்வாராம். ஒருமுறையும் 'நீ நல்லா நடிச்ச' போன்ற வார்த்தைகளைச் சொல்லி பாராட்டியதே கிடையாதாம். இதுகுறித்து மனோரமாவிடம் கேட்டபோது, 'குளவி புழுவைக் கொட்டிக் கொட்டி குளவியாக்குவதைப்போல, என் தாயார் நீ இன்னும் நல்லா நடிக்கணும்னு என்று சொல்லிச் சொல்லியே என்னை சிறந்த நடிகையாக உயர்த்தினார்' என்று விளக்கமளித்தார்.

சவால்
லுங்கி கட்டிக்கொண்டு ஆண் போன்ற கதாபாத்திரத்தில் மனோரமா நடித்த படம்

மனோரமாவுக்கு படிக்கிற வயதிலேயே நன்றாகப் பாடும் திறமையும் வாய்த்திருந்தது. சினிமா பார்த்தும், கிராமபோனில் பாடல்களைக் கேட்டு, தன் பாடும் திறமையை வளர்த்துக்கொண்டே வந்தார். இவரது பாடும் திறமையைக் கண்டு வியந்த அக்கம் பக்கத்தினர், அவரை அழைத்துப் பாடச்சொல்வது வழக்கமாக இருந்ததாம்.

பலரும், 'வா வாத்யாரே வூட்டாண்ட' பாடல்தான் மனோராமா பாடிய முதல் பாடல் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், 'மகளே உன் சமர்த்து' படத்தில் இடம்பெற்ற 'தாத்தா தாத்தா பொடி கொடு' பாடல்தான், இவர் பாடிய முதல் பாடல்.

'மனுசங்கதான் நம்பவெச்சு ஏமாத்திடுறாங்க. ஆனால், இந்த ஜீவனுங்க எக்காலத்துக்கும் நன்றி, விசுவாசத்தோடு இருக்கும்'
மனோரமா

தமிழ் மக்கள் அத்தனைபேரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த மனோரமாவின் சொந்த வாழ்க்கை இறுதிவரை சோகம் நிறைந்ததாகவே இருந்தது. அம்மாவின் எதிர்ப்பையும் மீறி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் தனது காதலன் ராமநாதனைக் கரம் பிடித்தார். இந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பூபதி எனப் பெயரிட்டார்கள்.

மனோரமா
மனோரமா

குழந்தை பிறந்த 11-வது நாள் குழந்தையைப் பார்க்க வந்த ராமநாதன், வரும் வழியில் ஜோசியம் பார்த்துவிட்டு வந்ததாகவும், பிறந்த இந்த குழந்தையால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி, மனோரமாவுடன் சண்டை போட்டார். அப்படி வீண் சண்டை போட்ட சில நாள்களிலேயே, ராமநாதன் மனோரமாவை விட்டுப் பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த நிகழ்விற்குப் பிறகு வேறு திருமணம் செய்து கொள்ளாத மனோரமா, இறுதிவரை மகன் பூபதிக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

கண்ணதாசன் தயாரித்த 'மாலையிட்ட மங்கை' படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியபோது, 'எனக்கு நகைச்சுவையே வராது' எனத் தயங்கினாராம், மனோரமா. அதற்கு கண்ணதாசன், 'நீ சிரிப்பு நடிகையாக நடித்தால் சரித்திரம் படைப்பாய்' என்று ரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார். சொன்னது போலவே, பின்னாள்களில் மிகப்பெரிய நகைச்சுவை நடிகையாக வலம் வந்தார் மனோரமா.

மனோரமா ஒரு பெண் சிவாஜி
சோ

மனோரமா நடிக்காத கதாபாத்திரம் ஒன்று இருக்கிறது. அது திருநங்கை கதாபாத்திரம். மனோரமாவைப் பார்க்க அடிக்கடி அவரது வீட்டுக்குத் திருநங்கைகள் வருவார்கள். அப்படி ஒருநாள், சில திருநங்கைகள் மனோரமாவிடம், 'பார்வையற்ற, காது கேளாத மாற்றுத்திறனாளிகளைப் பார்த்தால் அனுதாபப்படுகிறார்கள். ஆனால், எங்களை மட்டும் கேலிப் பொருளாக நினைக்கிறார்கள். நாங்களும் மனிதப் பிறவிகள்தான்' என்று சொல்ல, அந்த நிமிடத்திலிருந்து திருநங்கை கதாபாத்திரம் செய்யப் பெரிதும் விரும்பினார், மனோரமா.

'சவால்' படத்தில் லுங்கி கட்டிக்கொண்டு ஆண் போன்ற கதாபாத்திரத்தைச் செய்திருந்தாலும், ஒரு முழுமையான திருநங்கை கதாபாத்திரம் செய்யவில்லை என்ற ஏக்கம் இறுதிவரை அவருக்கு இருந்தது.

'சின்னத்தம்பி' படத்தின் க்ளைமாக்ஸில் கைம்பெண் தாய் மனோரமாவின் மீது, மஞ்சள் தண்ணீர் ஊற்றி குங்குமம் வைக்கும் காட்சி எடுக்கும்போது, வழக்கத்தைவிட மிகவும் சீரியஸாக நடித்துக்கொண்டிருந்தார், மனோரமா. 'என்னாச்சு' எனப் படக்குழுவினர் கேட்டபோது, 'ஒண்ணுமில்ல. என் வாழ்க்கைக்கும் இந்தக் காட்சிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரி தோணுது' என வேதனையோடு சொன்னார்.

அவர் சொன்ன அந்த நேரம், மனோரமாவின் கணவர் ராமநாதன் சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் காலமாகி இருந்தார். தன்னைத் தவிக்கவிட்டு, வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்த போதிலும், நேரில் சென்று கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, தனது மகன் பூபதி கைகளால் கணவரின் உடலுக்குக் கொள்ளிபோட வைத்தார். 

அடிக்குமேல் அடி, வலிக்குமேல் வலி, நம்பிக்கைத் துரோகங்களையே வாழ்க்கையாக கொண்ட மனோரமா, சில நாய்களைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தார். இந்த நாய் வளர்ப்பு குறித்து அவர் மகன் பூபதி ஒருமுறை கேட்டபோது, 'மனுசங்கதான் நம்பவெச்சு ஏமாத்திடுறாங்க. ஆனால், இந்த ஜீவனுங்க எக்காலத்துக்கும் நன்றி, விசுவாசத்தோடு இருக்கும்' என்றிருக்கிறார்.

மனோரமாவை 'பெண் சிவாஜி' என ஒரு பேட்டியில் குறிப்பிட்டார், சோ. அவர் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில், சிவாஜியைப் போலவே ஏ.பி.நாகராஜன் இயக்கிய 'கண்காட்சி' படத்தில் ஒன்பது கதாபாத்திரங்களில் நடித்தார், மனோரமா. ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதே பெரும்பாடு என இவர் யோசித்தபோது, 'உன் திறமை மீது எனக்கு நம்பிக்கையிருக்கு. தைரியமா செய்' என்று நம்பிக்கையை ஊட்டியவர், ஏ.பி.நாகராஜன். மனோரமாவுக்குச் மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை வாங்கிக்கொடுத்தது, இப்படம்.

'மஞ்சள் குங்குமம்' படத்தின் படப்பிடிப்பின்போது கட்டுவிரியன் பாம்பு கடித்தபோதும், இன்னொரு படப்பிடிப்பில் குதிரையில் இருந்து கீழே விழுந்தபோதும், காயப்பட்ட அடுத்த சில நாள்களிலேயே வேலைக்குத் திரும்பியவர், மனோரமா. உடலுக்கு எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருந்தார். 'உன்னால் முடியும் தம்பி' படத்தில் நடிக்கும்போது, இயக்குநர் பாலசந்தர், 'மனோரமா, இந்தக் கேரக்டர்ல ஒரு இடத்துலகூட நான் மனோரமாவைப் பார்க்கவே கூடாது.

அங்கயற்கண்ணியைத்தான் பார்க்கணும்' என்று சொல்ல, அதை ஏற்று சிறப்பாக நடித்துக் கொடுத்தார். அந்தக் கதாபாத்திரத்திரத்திற்குப் பிறகுதான், நிறைய குணச்சித்திரக் கதாபாத்திரங்கள் இவரைத் தேடி வந்தது.

மனோரமாவின் அம்மாவைப் போலவே, நடிகர் சிவாஜியும் ஒருமுறைகூட, 'நீ நல்லா நடிச்ச' போன்ற வார்த்தைகளை மனோரமாவிடம் சொன்னதே கிடையாது. ஆனால், மற்றவர்களிடம் மனோரமாவின் நடிப்பைப் பற்றி பலமுறை புகழ்ந்து பேசியிருக்கிறார், சிவாஜி.

மனோரமா, சிவாஜி
மனோரமா, சிவாஜி

ஒருமுறை ஒய்.ஜி.மகேந்திரனிடம், 'அப்பா.. அந்த எதிர்த்த வீட்டுக்காரி ஒருத்தி இருக்காப்பா. அவகிட்ட மட்டும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்பா. அவ, எந்த நேரத்துல என்ன செய்வான்னே தெரியாது' என்று மனோரமாவின் நடிப்பைச் சொல்லி சிலாகித்தாராம், சிவாஜி.

மனோரமா இறுதியாக சிவாஜியை பார்த்தது, அவரது பிறந்தநாள் அன்றுதான். சிவாஜியின் காலைத் தொட்டு வணங்கி, 'அண்ணே. எனக்குப் பிறந்தநாள்னே' என்று மனோரமா சொல்ல, அவருக்கு நூறு ரூபாயை அன்பளிப்பாகத் தந்து, 'நல்லா இரு' என்று ஆசீர்வதித்திருக்கிறார், சிவாஜி. இப்படி, எஸ்.எஸ்.ஆர்.ராஜேந்திரனையும், சிவாஜி கணேசனையும் தனது சொந்த அண்ணனாகவே நினைத்து அவர்களின் இறுதிக்காலம் வரையிலும் பழகி வந்தார், ஆச்சி. 

மனோரமா
மனோரமா
Nadigan

கொஞ்சம் தவறினால்கூட, விரசமாக மாறக்கூடிய அபாயமான கதாபாத்திரத்தை ஏற்று மனோரமா நடித்த திரைப்படம், 'நடிகன்'. ஆனால், தன்னால் முடிந்தளவு அதை விரசமாக்காமல் நடித்து, வெற்றியும் கண்டார். 'நடிகன்' படம் பற்றிப் பேசும்போதெல்லாம், 'நான் கஷ்டப்பட்டு நடிச்ச படம்னா அது இது மட்டும்தான். இது பெருமையான விஷயமும்கூட!' என்று சொன்னார்.

'கமல், எனக்கு இன்னொரு மகன்' என்பார், மனோராமா. கமலுக்கும், இருவருக்கும் உள்ள பொதுவான ஒற்றுமை, இருவருமே தமிழை எந்தளவிற்கு வித்தியாசமாகப் பேச முடியுமோ, அந்தளவிற்கு வித்தியாசமாகப் பேசுவார்கள். கமல் படமென்றாலே, அதில் கண்டிப்பாக மனோரமாவுக்கென்று ஒரு கதாபாத்திரம் ஒதுக்கப்பட்ட காலமும் இருந்தது.

"மனோரமா விரும்பி, நிறைவேறாத அந்த ஒரு ஆசை!" - 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் பகிர்வு #HBDManorama

தென்னிந்தியாவைச் சேர்ந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ராமாராவ் ஆகிய ஐந்து முதலமைச்சர்களுடன் இணைந்து நடித்த ஒரே நடிகை மனோரமாதான். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறார். 1500-க்கும் மேற்பட்ட படங்களிலும் 5000-த்திற்கும் அதிகமான நாடகங்களிலும் நடித்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர். கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது, அண்ணா விருது எனப் பல விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார். இப்படித் தனது வாழ்வின் பெரும்பகுதியைக் கலையுலகில் செலவழித்தால், 'கலை' என்னும் சொல்லோடு இரண்டறக் கலந்தவர் நடிகை மனோரமா.

நடிப்பும் சரி, பாடலும் சரி, நடனமும் சரி... மனோரமா எதையும் முறையாகக் கற்றுக்கொண்டவர் இல்லை. அத்தனையும் கேள்வி ஞானம்தான். ஆனால், அதை எந்தளவிற்குச் சிறப்பாகச் செய்யமுடியுமோ, அந்தளவிற்கு சிறப்பாகச் செய்தார். அந்தக் காலத்தில் ஒரு பிரபலமான ஜோக் ஒன்று இருந்தது. 'என் பொண்டாட்டி செஞ்ச அல்வா, மனோரமா மாதிரி, பாத்திரத்தோடு ஒட்டிக்கும்!' என்பதுதான், அது.

உங்களில் யாருக்கேனும் வாழ்க்கை வெறுத்துப்போனாலோ, தற்கொலை எண்ணம் தலைதூக்கினாலோ மனோரமாவின் வாழ்க்கை வரலாறை ஒருமுறை புரட்டிப் பாருங்கள். இளமையில் வறுமை, சில வருடங்களே நீடித்த மண வாழ்க்கை.. என அவர் தாண்டி வந்த தடைக்கற்கள் அதிகம். அதையெல்லாம் அவர் படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்ட திறமை, தங்கமாக ஜொலித்த அவரது குணம், வயிறு வலிக்கச் சிரிக்க வைத்த நகைச்சுவை... உங்களை ஒரே நொடியில் வாழ்க்கையின் மீது அதீதக் காதல்கொண்டவர்களாக மாற்றிவிடும். அவரது இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாதது. அவருடைய பிறந்தநாளான இன்று அவரை மீண்டும் ஒருமுறை நினைவில் நிறுத்துவோம்!

பிறந்தநாள் வாழ்த்துகள் ஆச்சி!