Published:Updated:

“நாடகக் காதல் என்பது நாடக அரசியல்!”

நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே - அமிதாப்
பிரீமியம் ஸ்டோரி
நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே - அமிதாப்

ஒரு சினிமாவால் சமூகம் திருந்திவிட்டதா என்று கேட்கிறீர்கள்தானே? நிச்சயமாய் ஒரு தனி மனிதன் மனமாற்றம் அடைந்திருந்தாலும் அது என் படத்துக்குக் கிடைத்த வெற்றியே.

“நாடகக் காதல் என்பது நாடக அரசியல்!”

ஒரு சினிமாவால் சமூகம் திருந்திவிட்டதா என்று கேட்கிறீர்கள்தானே? நிச்சயமாய் ஒரு தனி மனிதன் மனமாற்றம் அடைந்திருந்தாலும் அது என் படத்துக்குக் கிடைத்த வெற்றியே.

Published:Updated:
நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே - அமிதாப்
பிரீமியம் ஸ்டோரி
நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே - அமிதாப்

‘ஃபான்றி’, ‘சாய்ரத்’ என்ற இரண்டே படங்கள் மூலம் மராத்தி சினிமாவை உலகறியச் செய்தவர் இயக்குநர் - திரைக்கதை ஆசிரியர் - நடிகர் - கவிஞர் நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே. முதல்படத்தில் பன்றியைக் குறியீடாகக் கொண்டு ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவனின் கனவும், நிகழ்கால யதார்த்தமும் எப்படியெல்லாம் அவனை வெகுண்டெழச் செய்கிறது என்று சொல்லியிருந்தார்... ஆணவக் கொலையின் ரத்த சாட்சியமாய் ஓர் ஆவணமாய் நம்மை உலுக்கி எடுத்த சினிமாதான் ‘சாய்ரத்.’ மூன்றாவது படம் ‘ஜுண்ட்’ (கூட்டம்) இந்த மார்ச்சில் ரிலீஸாகிறது. இது மஞ்சுளேவின் முதல் இந்தி சினிமா. அதோடு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார். புனேவில் இருக்கும் மஞ்சுளேவைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

“நாடகக் காதல் என்பது நாடக அரசியல்!”

“மராத்தி சினிமாவின் நவீன முகமாக அறியப்படும் நீங்கள் ஏன் தொடர்ச்சியாய் படங்கள் இயக்குவதில்லை?”

“2016 சாய்ரத்துக்குப் பிறகு ஏன் படம் இயக்கவில்லை என்ற கேள்வி என்னைத் தேவையே இல்லாமல் துரத்துகிறது. அந்தக் கேள்வியே தவறு. சாய்ரத்துக்குப் பிறகு நான்கு படங்கள் நடித்துவிட்டேன். அதில் ஒரு படம் என் இயக்கத்தில் வந்தது. ‘ஜுண்ட்’ படம் அமிதாப் பச்சன் நடிப்பில் 2019-ல் இயக்கி முடித்தும்விட்டேன். விஜய் பார்ஸே என்ற சமூகப்போராளி பாத்திரத்தில் நடித்திருக்கிறார் அமிதாப். விஜய் போர்ஸே நாக்பூரில் குடிசைப்பகுதிச் சிறுவர்களுக்குக் கால்பந்தாட்டப் பயிற்சியளிப்பதை சிறிய அளவில் தொடங்கி பேரியக்கமாக மாற்றிக் காட்டியவர். பப்ளிசிட்டி இல்லாததால் அப்போது நான் இயக்கிய விஷயம் ஊடகங்களுக்குத் தெரியவில்லை. கொரோனாவின் இரண்டு அலைகளால் ஜுண்ட் ரிலீஸாவதில் சிக்கல். தயாரிப்புத் தரப்பு எவ்வளவு கால தாமதமானாலும் தியேட்டர் ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என உறுதியோடு இருக்கிறது. அதனால்தான் இவ்வளவு தாமதமாக ரிலீஸாகப் போகிறது. சமீபத்தில் அமேசான் பிரைமுக்காக ‘அன்பாஸ்டு: நயா சஃபர்’ என்ற ஆந்தாலஜி வெப்சீரீஸில் ‘வைகுந்த்’ என்ற 25 நிமிட படத்தை இயக்கியிருந்தேன். வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இரண்டாம் அலையின்போது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இயக்கியிருந்தேன். புனேவில் நிஜ எரியூட்டும் மயானத்தில் எடுக்கப்பட்ட படம் அது. கொத்துக்கொத்தாக பிணங்களை எரியூட்டியவராக நானே நடித்து இயக்கியிருந்தேன். படமாக்கும்போது உடலாலும் மனதாலும் என்னை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கிய சினிமா இது!”

“நாடகக் காதல் என்பது நாடக அரசியல்!”

“2016-ல் சாதி ஆணவக் கொலையை மையமாக வைத்து ‘சாய்ரத்’ படத்தை இயக்கியிருந்தீர்கள். மராத்தி சினிமாவில் வசூலில் இன்றுவரை நம்பர்1 ரெக்கார்டு ‘சாய்ரத்’தான். மகாராஷ்டிராவில் ஆணவக் கொலைகள் நிகழ்வது குறைந்து விட்டதா?”

“ஒரு சினிமாவால் சமூகம் திருந்திவிட்டதா என்று கேட்கிறீர்கள்தானே? நிச்சயமாய் ஒரு தனி மனிதன் மனமாற்றம் அடைந்திருந்தாலும் அது என் படத்துக்குக் கிடைத்த வெற்றியே. சாய்ரத் படத்துக்குப் பிறகு எங்கு சென்றாலும் யாராவது ஒரு மேல்வகுப்பைச் சார்ந்த முற்போக்குச் சிந்தனை கொண்டவர் என் முன் வந்து நின்று பாராட்டாமல் இருந்ததில்லை. அதே வேளையில் சாய்ரத் படத்துக்குப் பிறகுதான் பொதுவெளியில் என்னைக் கடுமையாக தரம்தாழ்ந்து சிலர் விமர்சிக்கவும் செய்தார்கள். அம்பேத்கராலேயே முடியாததையா நாம் செய்துவிடப் போகிறோம்? ஆனால், அம்பேத்கரிய சித்தாந்தம் தோற்கவே தோற்காதுதானே. இந்தப் பயணத்தை நிறுத்தக் கூடாது. ‘டன்னல்’ பாதையில் தூரத்து வெளிச்சத்தைப் பார்த்து என் போன்றோர் போய்க்கொண்டிருக்கிறோம். இருபுறமும் கேட்கும் வவ்வால் சத்தங்களுக்குச் செவி கொடுப்பதில்லை!’’

“சாய்ரத் அழகான காதல் சினிமா. இந்தியச் சூழலில் காதலித்தால் இப்படித்தான் நடக்கும் என க்ளைமாக்ஸில் நெகட்டிவாகக் காட்டியது எதிர்மறையான எண்ணத்தை விதைப்பதாக இல்லையா?”

“நிஜத்தை உணருங்கள் நண்பரே. ஏதோ ஒரு தலைமுறையில் நாம் மிதித்த அருவருப்பான ஒன்றுதான் சாதி. இன்றுவரை அதைக் கழுவாமல், புனிதம் என்று அதைக் காய்ந்துவிடாமலும் கழுவாமலும் வீட்டுக்குள்ளே நடமாடிக் கொண்டிருக்கிறோம்.

சாய்ரத் படத்தில் வலிந்து எதையும் நான் காட்டவில்லை. ஏன் இப்படி ஆனது என்று படம் முடிந்த பிறகு உங்களுக்குத் தோணு மில்லையா? அதைத்தான் படம் காட்டுகிறது. படத்தில் காதல் என்ற பெயரில் எதையுமே புனிதப்படுத்தவில்லை. நியாயப்படுத்தவில்லை. ஏனென்றால், சமூகப் பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதனால்தான் க்ளைமாக்ஸின் நீட்சியாக ஒன்றுமறியா குழந்தை சாலையில் நடப்பதையும் அதன் பாதத்திலிருந்து ஒட்டிய ரத்தச் சுவட்டையும் காட்டினேன். எப்போது அதை நாம் கழுவப்போகிறோம்? அந்தக் குட்டி ரத்தச் சுவடு நம் இந்திய மேப்பைப் போலத் தெரியவில்லையா?”

“நாடகக் காதல் என்பது நாடக அரசியல்!”
“நாடகக் காதல் என்பது நாடக அரசியல்!”
“நாடகக் காதல் என்பது நாடக அரசியல்!”

“தமிழ்நாட்டில் நாடகக் காதல் என்ற ஒரு வார்த்தைப் பிரயோகம் ரொம்பவே பாப்புலர். இளம் பிராயத்துக் காதலைப் புனிதப்படுத்தாமல் இருந்தாலே இங்கு எல்லாமே சரியாக நடக்கும் என்ற கருத்தியல் இங்கு இருக்கிறது தெரியுமா?”

“கேள்விப்பட்டிருக்கிறேன்... லடாக்கிலிருந்து கன்னியாகுமரி வரைக்கும் சாதியைக் கேடயமாக வைத்து ஒருவரை மற்றொருவர் ஒடுக்கும் நிலை இருக்கிறது. இந்தியாவின் மோசமான சாபக்கேடு சாதிப்படிநிலைதான்... அது ஒழிக்கப்பட வேண்டும். ஒரேநாளில் எதுவும் மாறிவிடாது தான். ஆனால், மாற்றம் நிகழ்ந்தால்தான் அடுத்த தலைமுறைகளுக்கு நல்லதைச் செய்த மன நிம்மதி நமக்குக் கிடைக்கும். எல்லாம் விதி என்று அம்பேத்கர் நினைத்திருந்தால் நான் பள்ளிக்கூடம் போயிருக்கவே முடியாது. சாவித்ரி பாய்- ஜோதிராவ் புலே அவமானங்கள் கண்டு ஒதுங்கியிருந்தால் நான் இலக்கியம் படித்து சினிமா எடுத்திருக்க வந்திருக்க முடியாது. பழைமைகளில் ஊறிப்போன அந்தக் காலகட்டத்திலேயே அவ்வளவு உயரிய லட்சியத்தோடு இருந்தார்கள் என்றால் இப்போது இன்னும்கூட முற்போக்காக நாம் சிந்தித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இது புரியாமல் இன்னமும் பழைமைவாதிகளாக நாடகக் காதல் இருப்பதாகச் சொல்வதெல்லாம் நாடக அரசியல்தான்!”

“நிறைய உள்ளீடுகளோடும் குறியீடுகளோடும் வந்த சினிமாதான் உங்கள் முதல் படம் ‘ஃபான்றி.’ என்னளவில் மிகச் சிறந்த காதல் படம் எனச் சொல்வேன். ஜப்யாவின் காதல் என்னவானது? திருப்பி அடிக்கும் ஜப்யா என்னவானான் என்ற கேள்வி எனக்குள் எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கிறது... எழுதிய உங்களுக்கு அப்படித் தோன்றியதா?”

“ ‘ஒரு பன்றிதான் நீ!’ எனக் கேலி செய்யும் ஆட்களைத் திருப்பி அடிக்கிறானே அதுவே வெற்றிதான். ஜப்யா ஒரு தனிமனிதனல்ல. அவன் ஒரு சித்தாந்தம். அப்படித்தான் நினைத்து எழுதியிருந்தேன். ‘வன்முறையைக் கற்றுத் தருகிறீர்களா?’ என்றுகூட சிலர் கேட்டார்கள். ஜப்யா போன்றவர்கள்மீது வன்முறை நிகழ்த்தப்பட்டபோது நாம் பார்வையாளர்களாக கடந்து போயிருக்கிறோம். அதனால்தான் நிஜப் பார்வையாளர்களாக இருக்கும் நம் எல்லோரின்மீதுமே ஜப்யா கல் எறிவதாக முடித்திருந்தேன்!”

“வார்த்தைக்கு வார்த்தை அம்பேத்கரைப் பற்றிப் பேசுகிறீர்கள். அவர்தான் உங்கள் ரோல் மாடலா?”

“நம் எல்லோருக்குமே அவர் ரோல் மாடலாக இருக்க வேண்டும். அம்பேத்கரை இங்கு சினிமாவில் போட்டோவாகக்கூட காட்ட இவ்வளவு காலம் பிடித்தது. 1982-ல் வெளியான ஹாலிவுட் திரைப்படமான ‘காந்தி’யில் அம்பேத்கரைப் பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. மூன்றரை மணி நேர சினிமாவில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை, இந்தியாவின் முதலாவது சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்களுக்காகக் குரல் கொடுத்த அம்பேத்கரைப் பற்றிக் காட்டியிருக்கவில்லை. ஏனென்றால், அவர் காந்தியையே கேள்வி கேட்டவர். இங்குதான் கேள்விகள் யாரும் கேட்கக்கூடாதே... அதற்காகவே அவர் வரலாற்றை மறைக்க முயன்றார்கள். கல்விமுறையில் பல்கலைக்கழகங்கள் கூழாங்கற்களைப் பளபளப்பாக்கி வைரத்தை மங்கலாக்கி வைத்திருக்கிறது.

இங்கு ஒரு அம்பேத்கரை மறைத்தால் ஓராயிரம் அம்பேத்கர்கள் முளைப்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை பாவம்!”