Published:Updated:

ஏ.ஆர்.ரஹ்மான் - மாரி செல்வராஜ் - உதயநிதி ஸ்டாலின்... கோடம்பாக்கத்தில் உருவான புதுக்கூட்டணி!

உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், ஏ.ஆர்.ரஹ்மான்
உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், ஏ.ஆர்.ரஹ்மான்

பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, உதயநிதி ஸ்டாலினை இயக்கவிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துவிட்டார் மாரி செல்வராஜ். இவருடைய அடுத்தப் படம் என்ன என்கிற விசாரிப்புகளை அதிகம் கேட்கமுடிகிறது. 'கர்ணன்' திரைப்படத்துக்குப்பின், துருவ் விக்ரமை இயக்கவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியான சில நாள்களிலேயே, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது ஒரு கபடி வீரரின் பயோபிக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. அதற்காக, தன்னை தயார் செய்து வருகிறார் துருவ்.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ்

இதற்கிடையில், ''நானும் மாரி செல்வராஜும் மீண்டும் ஒரு படம் இணைந்து பணியாற்ற இருக்கிறோம்'' என்ற அறிவிப்பை தனுஷ் வெளியிட்டிருந்தார். தனுஷிற்கு இருக்கும் லைன் அப்களில் இந்தப் படத்தை எப்போது திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், படம் உறுதி. துருவ் படத்தை முடித்துவிட்டு, மீண்டும் தனுஷை இயக்குவார் என்று நினைத்திருந்த நிலையில் இடையில் இன்னொரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்தான் ஹீரோ. இன்னொரு ஸ்பெஷல் அப்டேட் என்னவென்றால், இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். இதுவும் தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் வாழ்க்கை வரலாறுதானாம். இந்தப் படத்தோடு நடிப்பதை நிறுத்திவிட்டு தீவிரமாக அரசியலில் மட்டும் கவனம் செலுத்த இருக்கிறாராம் உதயநிதி. தற்போது உதயநிதி கைவசம், மு.மாறன் இயக்கத்தில் 'கண்ணை நம்பாதே', மகிழ் திருமேனி இயக்கும் படம், அருண்ராஜா இயக்கும் 'ஆர்டிகள் 15' ரீமேக் ஆகியவை உள்ளன. விரைவில் மாரி செல்வராஜ் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு