Published:Updated:

அதிகார மையம், `நண்பர்' அஜித், விஜய் ஆன விஜய் சேதுபதி... `மாஸ்டர்' விழா எப்படி?

விஜய்
விஜய்

விழாவுக்கு முன்பாக, அஜித் பெயரைச் சொல்லலாமா, வேண்டாமா எனப் பல முறை விவாதித்த பிறகே பெயரைக் குறிப்பிடுவது என முடிவெடுத்திருக்கிறார் விஜய்.

`கொரோனா' பிரச்னை காரணமாகத் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட `மாஸ்டர்' இசை வெளியீட்டு விழா எவ்விதப் பிரச்னைகளும் இன்றி நடந்து முடிந்திருக்கிறது. ஞாயிறுக்கிழமை இசை வெளியீட்டு விழாவுக்கு சனிக்கிழமை மதியமே விஜய், மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ் என எல்லோருமே லீலா பேலஸ் ஹோட்டலில் ஒன்றுகூடிவிட்டனர். படத்தில் நடித்திருந்த முக்கியமான நடிகர்கள், டெக்னீஷியன்கள் என அனைவருக்குமே லீலா பேலஸில் மூன்று நாள்களுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

சனிக்கிழமை (14.3.2020) படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள். அவரது பிறந்தநாள் கொண்டாட்டமும் விஜய் முன்னிலையில் சனிக்கிழமை இரவு லீலா பேலஸில் நடந்தது.

விஜய்
விஜய்

கலர்ஃபுல் ப்ளெய்ன் ஷர்ட், கறுப்பு அல்லது அடர்வண்ண பேன்ட்... இதுதான் சமீபத்தில் நடந்த எல்லா இசைவெளியீட்டு விழாக்களுக்கும் விஜய்யின் டிரெஸ் கோட். ஆனால், மாஸ்டர் விழாவுக்கு கோட் சூட்டோடு வந்திருந்தார் விஜய். ஆனால், வழக்கமாக உற்சாகமாக இருக்கும் விஜய்யின் முகம் நேற்று கொஞ்சம் பொலிவை இழந்திருந்தது.

``மக்களுக்காகத்தான் சட்டம். சட்டத்தை உருவாக்கிவிட்டு மக்களை அதில் அடக்கக் கூடாது'' எனக் குடியுரிமைச் சட்டம் குறித்து விஜய் பேசிவிட்டதாக யாரோ அடித்துவிட ட்விட்டர் ரணகளமாகிவிட்டது. ஒருபக்கம் எல்லோரும் கன்டென்ட் கிடைத்துவிட்டது எனக் குஷியாக, மறுபக்கம் பா.ஜ.க தரப்பு `இந்தா கிளம்பிட்டோம்ல' என மாஸ்டர் புரொமோஷனுக்கு வான்டடாக வண்டியில் ஏறத் தயாரானபோதுதான் தெரிந்தது விஜய் அப்படிப் பேசவேயில்லை என்பது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இழுத்த இழுவைப் பேச்சில் நொந்துபோன யாரோ ஒருவர் போகிறபோக்கில் கொளுத்திப்போட்ட வாட்ஸ்அப் `குட்டிக் கதை'யாம் அது!

`மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவின் பேச்சும் மேடையில் இருக்கும் அந்த 20 நிமிடங்களும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல யோசனைகள் விஜய்க்குத்தரப்பட அவர் டிக் அடித்தவைதான் கோட் சூட், பேச்சின் இடையே போட்டி நடிகரின் பெயர், பாடல் பாடுவதற்குப் பதில் டான்ஸ்.

அதிகார மையம், `நண்பர்' அஜித், விஜய் ஆன விஜய் சேதுபதி... `மாஸ்டர்' விழா எப்படி?
``ரெய்டு இல்லாத அமைதியான வாழ்க்கை; நண்பர் அஜித் காஸ்ட்யூம்..." - `மாஸ்டர்' விஜய் என்ன பேசினார்?

விஜய் மேடையேறும் முன் ஒரு வீடியோ ஒளிபரப்பானது. ``அதிகார மையங்கள் அனைத்தும் தேடும் மோஸ்ட் வான்டட் தமிழன்'' என அந்த வீடியோ முடிய மேடை ஏறினார் விஜய். `பிகில்' விழாவில் வெறித்தனம் பாடியதுபோல் இந்த முறை குட்டி ஸ்டோரி பாடுவார் என நினைத்துக்கொண்டிருக்கும்போது குட்டி டான்ஸையே போட்டார் விஜய். இப்படி விஜய் மேடைகளில் ஆடிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நேற்று வித்தியாசம் வேண்டி மேடையில் சில பல ஸ்டெப்ஸ் போட்டார் விஜய்.

டான்ஸை முடித்துவிட்டு சென்டர் ஸ்டேஜில் ஸ்டாண்டிக் மைக்கில் `என் நெஞ்சில் குடியிருக்கும்' எனத் தொடங்கி படக்குழு பற்றிப் பேசினார். இயக்குநர் லோகேஷ் குறித்துப் பேசும்போது லோகேஷின் வொர்க்கில் விஜய் எவ்வளவு இம்ப்ரஸாகி இருக்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. பிரபுதேவா, அட்லி, முருகதாஸ் போன்ற இயக்குநர்களிடம் மட்டும்தான் விஜய் இந்த அளவுக்கு ஃப்ரீயாக ஜாலியாகப் பொதுவெளியில் பேசியிருப்பார். இரண்டு பேருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரியைப் பார்த்தால் விரைவில் மீண்டும் ஒரு படத்துக்கான அப்டேட் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ரசிகர்கள் இல்லாமல் அரைமனதோடுதான் இந்த விழாவுக்கு ஒத்துக்கொண்டேன் எனக்கூறிய விஜய் மிக சுருக்கமாக ஸ்வீட்டாக `Kill them with your Success, bury them with your smile' எனப் பேச்சை முடித்துக்கொண்டார்.

பேச்சு முடிந்ததும், தொகுப்பாளர் விஜய், நடிகர் விஜய்யிடம் சில கேள்விகளைக் கேட்டார். ``20 வருடங்களுக்கு முன்புள்ள இளைய தளபதியிடம் என்ன கேட்பீர்கள்? எனத் தொகுப்பாளர் கேட்க, ``இந்த ரெய்டுயெல்லாம் இல்லாத சந்தோஷமான வாழ்க்கையைக் கேட்பேன்'' என்றார் விஜய்.

விஜய் சேதுபதிக்கு விஜய்யின் முத்தம்
விஜய் சேதுபதிக்கு விஜய்யின் முத்தம்

ஏன் இந்த விழாவுக்கு கோட் சூட் எனக் கேட்கப்பட, ``ஸ்டைலிஷ்தான்னு சொன்னாங்க... நண்பர் அஜித் ஸ்டைலில் கோட் சூட் போடாலாம்னு போட்டேன்... நமக்கு சூட்டாகுதா" என்றார் விஜய். பொதுவாக, எந்தப் போட்டி நடிகரின் பெயரையும் பேட்டிகளிலோ, விழாக்களிலோ குறிப்பிடுவதைத் தவிர்த்து வருபவர் விஜய். குறிப்பாக, அஜித்தின் பெயரைக் குறிப்பிட்டு அவர் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.

ஆனால், `மாஸ்டர்' விழாவில் பேசினார் விஜய். ஒவ்வொரு இசைவெளியீட்டு விழா முடிந்ததும், விஜய் ரசிகர்கள் சிலாகித்து ட்வீட்கள் போட, அஜித் ரசிகர்களாகச் சொல்லப்படும் சிலர் விஜய்யைத் திட்டி ட்வீட் போட்டு டிரெண்டாக்குவார்கள். இதுதான் வழக்கமாக இருந்துவருகிறது. இதை நிறுத்துவதற்காகத்தான் அஜித் பெயரை சொல்ல வேண்டும் என விஜய்க்கு ஆலோசனை தரப்பட்டிருக்கிறது. விழாவுக்கு முன்பாக, அஜித் பெயரைச் சொல்லலாமா, வேண்டாமா எனப் பல முறை விவாதித்த பிறகே பெயரைக் குறிப்பிடுவது என முடிவெடுத்திருக்கிறார் விஜய். ஆனால், இப்படிப் பேசிய பிறகும் ட்விட்டர் பஞ்சாயத்துகள் ஓயவில்லை.

`மாஸ்டர்' வெளியீட்டு விழாவின் ஹைலைட்டே விஜய் சேதுபதிதான். இந்தமுறை விஜய்யின் ரோலை விஜய் சேதுபதி எடுத்துக்கொண்டார். செம கூலாக, கேஷுவலாக இருந்த விஜய் சேதுபதி போகிறபோக்கில் சிலரைக் கலாய்த்து, சிலரைப் பாராட்டி, சில டிரெண்டிங் டாப்பிக்ஸைத் தொட்டுப்பேசினார். கடவுள், கொரோனா, மதம், மனிதம், அரசியல் என விஜய்சேதுபதிப் பேச அப்ளாஸ் அள்ளியது.

பெற்றோருடன் விஜய்
பெற்றோருடன் விஜய்

விஜய் சேதுபதியின் பேச்சுக்கு எதிராகக் கொடி பிடிக்க ஒரு கும்பல் வரலாம்... ஆனால் விஜய் சேதுபதி, அவர்களுக்கான பதிலோடு தயாராகத்தான் இருக்கிறார். அதுவும் அவர் ஏற்கெனவே சொன்னதுதான்.

``போய் வேற வேலை இருந்தா பாருங்கடா!''

அடுத்த கட்டுரைக்கு