Published:Updated:

``4.32 டைட் அவுட்... விஜய் பாடி லாங்குவேஜ் ரெஃபரன்ஸ்!'' - மாஸ்டர் `குட்டி ஸ்டோரி’ மேக்கிங் சுவாரஸ்யங்கள்

மாஸ்டர் `குட்டி ஸ்டோரி’
மாஸ்டர் `குட்டி ஸ்டோரி’

கோயம்புத்தூரைச் சேர்ந்த சிவா தலைமையிலான `ரியல்வொர்க் ஸ்டூடியோஸ்’தான் `குட்டி ஸ்டோரி’ பாடலின் அனிமேஷனைச் செய்திருக்கிறார்கள். இவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.

`மாஸ்டர்’ படத்தில் விஜய் பாடிய `குட்டி ஸ்டோரி’ பாடல், வைரல் ஹிட்டாகி யூ-டியூபின் டாப் டிரெண்டிங்கில் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பாடலின் வெற்றிக்கு விஜய்யின் குரல், அனிருத்தின் இசை, அருண்ராஜாவின் வரிகளென இந்தப் பாடலை உருவாக்கிய விதமும் ஒரு முக்கியமான காரணம். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான லோகியின் ஐடியாவை வைத்து கோயம்புத்தூரைச் சேர்ந்த சிவா தலைமையிலான `ரியல்வொர்க் ஸ்டூடியோஸ்’தான் `குட்டி ஸ்டோரி’ பாடலின் அனிமேஷனைச் செய்திருக்கிறார்கள்.

வெரைட்டி காட்டும் விஜய் சேதுபதி... தனி ரூட்டில் சிவகார்த்திகேயன்... 2020 பிளான் என்ன?

`ரியல்வொர்க் ஸ்டூடியோஸ்’ டீம் இதுவரைக்கும் எந்தெந்தப் படங்களில் வொர்க் பண்ணியிருக்காங்க?

realworks shiva
realworks shiva

`` 'மாநகரம்’, `புலி’, `காஸ்மோரா’, `உறுமீன்’, `போக்கிரி ராஜா’, `கொரில்லா’, `திட்டம் போட்டு திருடுற கூட்டம்’னு பல படங்களுக்கு வி.எஃப்.எக்ஸ் மற்றும் 3டி அனிமேஷன் வொர்க் பண்ணியிருக்கோம். இப்போ, `கடைசி விவசாயி' மற்றும் சில படங்கள்ல வொர்க் பண்ணிட்டிருக்கோம்.’’

`குட்டி ஸ்டோரி’ பாடலில் வொர்க் பண்ண ஸ்டோரியைச் சொல்லுங்க...

`` 'குட்டி ஸ்டோரி’ பாட்டோட லிரிக் வீடியோ, 14-ம் தேதி ரிலீஸாச்சு. `மாஸ்டர்’ டீம், எங்ககிட்ட 2-ம் தேதிதான் பேசினாங்க. முதல்ல 2டி அனிமேஷன்ல எல்லா ஃபிரேம்களையும் கையால வரைஞ்சு பண்ணணும்னு சொன்னாங்க. `12 நாள்தான் இருக்கு; கண்டிப்பா அதுக்குள்ள பண்ண முடியாது’னு சொல்லிட்டோம். `வேணும்னா, 3டி அனிமேஷன்ல பண்ணிக் கொடுக்கிறோம். பார்க்கிறதுக்கு 2டியில பண்ண வொர்க் மாதிரிதான் தெரியும்’னு சொன்னதுக்கு அப்புறம், சின்னதா ஒரு சாம்பிள் செஞ்சு காட்டினோம். அதைப் பார்த்துட்டுதான் எங்களுக்கு இந்த வேலையைக் கொடுத்தாங்க. இந்தப் புராசஸ் நடக்குறதுக்கே ரெண்டு நாள் ஆகிடுச்சு. 4-ம் தேதியில இருந்துதான், இந்தப் பாட்டுக்கான வேலையை நாங்க ஆரம்பிச்சோம். முழுசா பத்து நாள்கூட இல்லாத நிலையிலதான், நாங்க இந்த புராஜெக்ட்டுக்குள்ள கமிட்டானோம்."

``இந்த 10 நாளும் எங்க ஆபீஸ் திறந்தேதான் இருந்துச்சு. யாரும் சரியான நேரத்துக்கு சாப்பிடலை; தூங்கலை. கடைசி மூணு நாள் நாங்க யாருமே வீட்டுக்குப் போகவே இல்லை. குளிக்காம வேலை பார்த்துட்டு இருந்தோம். முதல் மூணு நாள், எல்லா ஃபிரேம்களையும் வரைஞ்சு முடிச்சோம். அதுக்கப்புறம் பாட்டோட வரிக்கு ஏத்த மாதிரி, டான்ஸ் பண்றது, ஆக்‌ஷன் பண்றதுனு எல்லா விஷயத்தையும் சேர்த்தோம். இப்படி ஒரு பெரிய படத்துல இருந்து ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. எந்த இடத்துலையும் நாம தப்பு பண்ணிடக்கூடாதுனு எங்க டீம்ல இருந்த 18 பேரும் வேலைபார்த்தோம். 14-ம் தேதி 5 மணிக்கு பாட்டு ரிலீஸ்னு சொல்லியிருந்தாங்க. காலையில 11 மணிக்குதான் ஒரு அவுட்புட் கொடுத்தோம். அதுல சில கரெக்‌ஷன்ஸ் சொன்னாங்க. அதை எல்லாம் சரி பண்ணிட்டு, ஃபைனல் அவுட்டை 4.32-க்குத்தான் அனுப்பினோம். 5 மணிக்கு லிங்க் வரும்னு வெயிட் பன்ணிட்டிருந்தோம். ஆனா, லிங்க் வரவே இல்லை. `என்னடா... எதுவும் தப்பு நடந்துபோச்சா; இன்னும் பாட்டு ரிலீஸாகாம இருக்கே’னு ரொம்பவே பயந்திட்டிருந்தோம். 5.02-க்கு பாட்டு ரிலீஸ் ஆச்சு. நாங்க பண்ண வொர்க் ரிலீஸானப்போ, ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. பாட்டு ரிலீஸாகி 10 நிமிஷத்துல எனக்கு 15 போன் கால் வந்திடுச்சு. இப்போ வரைக்கும் பல பேர் பாராட்டிட்டு இருக்காங்க. நினைச்சுப் பார்க்காத அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு.’’

லோகேஷ் கனகராஜ் என்ன சொன்னார்..?

`` 'மாநகரம்’ படத்தோட டைட்டில் கார்டு வொர்க் பண்ணும்போதே, லோகேஷ் நல்ல பழக்கம்தான். இந்தப் பாட்டுக்கு வொர்க் பண்ணும்போது, அவங்க டீம் ஷூட்டிங்ல பிஸியா இருந்தாங்க. இந்த கான்செப்ட்டை சொன்ன லோகிதான், எங்ககிட்ட தொடர்ந்து பேசிட்டு இருந்தார். பாட்டு ரிலீஸானதுக்கு அப்புறம், லோகேஷுக்கும் விஜய் சாருக்கும் ரொம்ப பிடிச்சிருந்ததா சொன்னாங்க.’’

``இந்த ரெண்டு ஃபீலோடதான் விஜய் சாரோட `குட்டி ஸ்டோரி'யை எழுதினேன்!" - அருண்ராஜா காமராஜ்

இந்த அனிமேஷன் பண்ணதுல எது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு..?

``4.32 டைட் அவுட்... விஜய் பாடி லாங்குவேஜ் ரெஃபரன்ஸ்!'' - மாஸ்டர் `குட்டி ஸ்டோரி’ மேக்கிங் சுவாரஸ்யங்கள்

``எல்லாமே கஷ்டம்தான். குறிப்பா, விஜய் சாரோட பாடி லாங்குவேஜைக் கொண்டுவர்றதுதான் சிரமமா இருந்துச்சு. எங்க டீம்ல இருந்த தரணிதான் அந்த வேலையைப் பார்த்தார். பாட்டோட வரிக்கு ஏத்த மாதிரி விஜய் சாரோட பாடி லாங்குவேஜ் எந்தப் படத்தோட மேட்ச் ஆகுதுனு, பழைய படங்கள்ல இருந்து இப்போ வரைக்கும் பல படங்களோட சீன்களை எடுத்து, இந்தப் பாட்டுல கொண்டுவந்தோம்.’’

நீங்க சென்னையில இருந்து வொர்க் பண்ணினா, இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்தானே?

"நாங்க கோயம்புத்தூர்ல இருந்து வேலை பார்க்க சில காரணங்கள் இருக்கு. பல வருஷங்களுக்கு முன்னாடி கோயம்புத்தூர்ல சினிமா ஸ்டூடியோஸ் இருந்துச்சு. இங்க, நிறைய படங்களுக்கு போஸ்ட் புரொடக்‌ஷன் பண்ணியிருக்காங்க. ஆனா, இப்போ எல்லா வேலைகளையும் சென்னையிலேயே முடிச்சிக்கிறாங்க. மறுபடியும், கோலிவுட்டை கோயம்புத்தூருக்கு கொண்டுவரணும்கிற ஆசையிலதான், நாங்க இங்கையே இருந்து வேலைபார்க்கிறோம். எங்களை மாதிரி நிறைய டீம் இங்க இருந்து சினிமாவுக்கு வேலைபார்த்திட்டு இருக்காங்க. அதை இன்னும் பெருசா பண்ணணும், அதான் எங்க ஆசை. அதுமட்டுமில்லாம, இங்க இருந்து வேலைபார்த்தா செலவுகளும் ரொம்ப குறைவுதான்’’ என்றார், சிவா.

அட... `மாஸ்டர்' படத்தின் குட்டிக் கதை இதுதானா? #Master #Vijay

இந்த கான்செப்ட்டை லோகேஷ் கனகராஜிடம் சொல்லி ஓகே வாங்கிய உதவி இயக்குநர் லோகியிடம் பேசினோம்.

Logi
Logi

"பிப்ரவரி 14-ம் தேதி சிங்கிள் ட்ராக் ரிலீஸ் பண்ணலாம்னு பேச்சு வந்தப்பவே, லோகேஷ் அண்ணாக்கிட்ட, `வித்தியாசமா பண்ணலாம்’னு சொன்னேன். `ஐடியா இருந்தா சொல்லு’னு சொன்னார். நானும் இந்த ஐடியாவைச் சொன்னேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்புறம், தயாரிப்பாளர்கிட்ட சொல்லியும் ஓகே வாங்கிட்டேன். அதுக்கப்புறம்தான் `ரியல்வொர்க்ஸ்’ டீம்கிட்ட இந்த ஐடியாவைச் சொன்னேன். கொஞ்ச நாள் இருந்தாலும், நல்லா பண்ணிடுவாங்கன்னு நம்பிக்கை இருந்துச்சு. அவங்களோட வொர்க்கை தொடர்ந்து ஃபாலோ பண்ணிட்டுத்தான் இருக்கோம். அதேமாதிரி இந்த லிரிக் வீடியோவையும் சூப்பரா பண்ணிக்கொடுத்தாங்க. லோகேஷ் அண்ணாவுக்கும் விஜய் சாருக்கும் இந்த ஐடியாவும், வீடியோவும் ரொம்பவே பிடிச்சிருந்ததுனு சொன்னாங்க’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு