Published:Updated:

"`மாஸ்டர்' படம் கொஞ்சம் நீளம்தான்... ஆனால்?!" - தயாரிப்பாளர் பிரிட்டோ

கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காத்திருப்புக்குப்பின் தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கும் மாஸ் ஹீரோ படம் 'மாஸ்டர்'. படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோவிடம் பேசினேன்.

"'மாஸ்டர்' படத்தின் வெற்றி விஜய்க்கு எந்தளவு மகிழ்ச்சியை கொடுத்திருக்கு?"

மாஸ்டர்
மாஸ்டர்

''ரொம்ப சந்தோஷமா இருக்கார். சொல்லப்போனா, விஜய் சார்கூட சேர்ந்து நாங்க எல்லாருமே டென்ஷனா இருந்தோம். ஏன்னா, முதல்ல தியேட்டர்களின் இருக்கையை நூறு சதவிகிதம்னு சொன்னாங்க. பிறகு, ஐம்பது சதவிகிதம்னு மாத்திட்டாங்க. படம் பார்க்க வர மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நல்ல முறையில பண்ணனும்னு மனசுல பலதரப்பட்ட கவலைகள் ஓடிக்கிட்டே இருந்தது. என்னோட கோ புரொடியூசர்ஸ்கூட சில இடங்களில் மனதளர்ச்சி அடைந்தாங்க. அப்போ, 'எது வந்தாலும் பார்த்துடலாம். சில ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்னு' நம்பிக்கை கொடுத்தேன். பொங்கலை விட்டுட்டா வேற தேதிகள் கிடைக்குறது கஷ்டம். அதனால, இந்தப் பொங்கலை விட்டுற கூடாதுனு நாங்க முடிவா இருந்தோம். பெரிய டிஸ்கஷன் போச்சு. ஆனா, எங்களுக்கு நிறைய தியேட்டர்ஸ் ஓப்பனிங் கிடைச்சது. இதை வெச்சிட்டு படத்தை ரிலீஸ் பண்ணிட்டோம். ஏன்னா, 'மாஸ்டர்' படம் வெற்றிதான் மத்தவங்களுக்குப் பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கும். இப்ப எல்லா மாநிலங்களிலும் படம் வெற்றிகரமா ஓடிட்டு இருக்கு. முக்கியமா, இந்தி சினிமாவுல 'மாஸ்டர்' தியேட்டர்ல ரிலீஸாகி ஓடிட்டு இருக்கு. இதனால, விஜய் சாருக்கும் எங்களுக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.''

"தியேட்டர் உரிமையாளர்கள் யார்கிட்டாவது பேசுனீங்களா?"

பிரிட்டோ
பிரிட்டோ

"சில தியேட்டர் உரிமையாளர்களின் பேட்டிகளைப் பார்த்தேன். 'தியேட்டர் தொழில் முடங்கி போயிருந்த நேரத்துல 'மாஸ்டர்' ரிலீஸாகி எங்களுக்குப் பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கு'னு சொல்லியிருந்தாங்க. தவிர, மக்கள் எல்லாருமே எந்தவிதமான பயமும் இல்லாம ஆரவாரத்துடன் படத்தைப் பார்த்துட்டு இருக்காங்க. என்கிட்ட சில தியேட்டர் உரிமையாளர்கள் போன் பண்ணி சந்தோஷத்தையும் பகிர்ந்துகிட்டாங்க.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"'மாஸ்டர்' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என்ன?"

மாஸ்டர்
மாஸ்டர்

"பல விதமான தகவல்கள் பாக்ஸ் ஆபிஸ் குறித்து வந்துட்டு இருக்கு. 200 கோடி வசூல் கிளப்பில் விஜய் சார் சேர்ந்துட்டார்னு தகவல் வருது. இதெல்லாம் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு. ஆனா, நெட் கலெக்‌ஷன்ஸ் குறித்து சரியான தகவல் இன்னும் கிடைக்கல. ஏன்னா, வரிகள் கழிக்கணும். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. வெறும் கிராஸ் கலெக்‌ஷன்ஸ் மட்டும் வெச்சிட்டு இவ்வளவுதான் வருமானம்னு இப்போ சொல்லிட முடியாது. முதல்ல, 'மாஸ்டர்' படம் தீபாவளிக்கு ரிலீஸாகுற மாதிரி இருந்தது. ஆனா, கொரோனா காரணமா தள்ளிப்போனது. அப்போ படத்தை வாங்கியிருந்த விநியோகஸ்தர்கள் கொஞ்சம் பயந்துட்டாங்க. உடனே, நாங்க விஜய் சார்கூட சேர்ந்து பேசினோம். பிறகு, 'நீங்க எதுக்காகவும் பயப்பட வேண்டாம். கவலைப்பட வேண்டாம்'னு சொல்லி என்னோட தரப்புல இருந்து நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்தேன். முழுநம்பிக்கையும் கோ-ப்ரொட்யூசர் லலித் சார்க்குக் கொடுத்தேன். உண்மையான பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்ஸ் தெரிய கொஞ்சம் டைம் எடுக்கும்."

"விஜய் தவிர, மற்ற ஹீரோக்கள் படத்தைத் தயாரிக்குற ஐடியா இருக்கா?''

விஜய், சேவியர் பிரிட்டோ
விஜய், சேவியர் பிரிட்டோ

"சமீபத்துல, விஜய் சார்கூட பேசிட்டு இருந்தேன். அப்போ, 'அங்கிள், உங்க பேனருக்கு நல்ல பேர் இருக்கு. இன்னும் பெரிய ஹீரோக்கள் வெச்சி படம் பண்ணுங்க'னு சொன்னார். என்னோட மருமகன் ஆகாஷூக்கும் நடிப்புல ஆர்வமிருக்கு. அதனால, பெரிய டைரக்டர் இயக்க, ஆகாஷை நடிக்க வைக்கணும். இதுக்கான முயற்சிகள் எடுத்துட்டு இருக்கேன். இதுக்கு இடையில நல்ல டைரக்டர், கதை, ஹீரோ வந்தா தொடர்ந்து படம் பண்ணுவேன்னு விஜய்கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன். தவிர, சின்னத்திரையில என்னோட சீரியல் 'நீ தானே எந்தன் பொன்வசந்தம்' வெற்றிகரமா போயிட்டு இருக்கு. ஓடிடி தளத்துக்கும் சின்ன பட்ஜெட் படங்கள் பண்றதுக்குக் கதைகள் கேட்டுட்டு இருக்கேன்.''

"விஜய் தயாரிப்பாளராக வாய்ப்பிருக்கா... இதைப் பற்றி பேசியிருக்காரா?"

விஜய் | 'மாஸ்டர்'
விஜய் | 'மாஸ்டர்'

"தயாரிப்பு எண்ணம் இருக்குற மாதிரி இதுவரைக்கும் அவர் வெளிப்படுத்துனதில்ல. நானும், இத்தனை நாள்ல அதைப் பற்றி விஜய்கிட்ட பேசல. நிறைய தயாரிப்பாளர்கள் இவரோட படங்களைத் தயாரிக்க வரிசையா காத்துக்கிட்டு இருக்காங்க. இதனால, படங்கள் தயாரிக்குறதுக்கான தேவைகள் வரலைனு நினைக்குறேன். ஒருவேளை சில வருஷங்களுக்குப் பிறகு தயாரிப்பு பக்கம் கவனம் போகலாம். ஆனா, இப்போ நடிப்புலதான் முழு கவனத்தைச் செலுத்திட்டு வர்றார்."

மாஸ்டர் - சினிமா விமர்சனம்

"'மாஸ்டர்' படத்துக்கு வந்திருக்கும் விமர்சனங்களை எப்படி பார்க்கிறீங்க?"

மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய், ஸ்டன்ட் சில்வா, லோகேஷ் கனகராஜ்
மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய், ஸ்டன்ட் சில்வா, லோகேஷ் கனகராஜ்

''படத்தோட நீளம் அதிகம்னு சொல்லியிருந்தாங்க. படம் நீளமா இருக்குறது வேற, விறுவிறுப்பா போறது வேற. 'மாஸ்டர்' படம் நீளம்தான். ஆனா, படம் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் விறுவிறுப்பா போயிருச்சு. ஸ்பீடு முக்கியம்னு நினைக்குறேன். இதே மாதிரி டைரக்‌ஷனும் முக்கியம். படத்துல இது ரெண்டுமே இருக்கு. சரியான இடத்துல பாட்டும், ஆக்‌ஷனும் இருந்தன. லோகேஷ் கனகராஜ் எல்லாத்தையும் கலந்து கொடுத்திருக்கார். விமர்சனங்கள் எப்படி வந்தாலுமே, இதுவரைக்கும் படம் ஹவுஸ்ஃபுல்லா போயிட்டு இருக்கு. முக்கியமா, நிறைய பெண்களும் படம் பார்க்க வந்துட்டு இருக்காங்க."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு