Published:Updated:

`மாஸ்டர்' படத்தின் இன்ஸ்பிரேஷன் எது, ஐடி ரெய்டின்போது விஜய் சொன்னது என்ன?! - லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர்
மாஸ்டர்

'மாஸ்டர்' பொங்கலுக்கு ரிலீஸாகயிருக்கும் நிலையில் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விகடனுக்காகப் பிரத்யேகமாகப் பேசியிருக்கிறார். அவரின் பேட்டி இங்கே!

''விஜய் சாரோட மற்ற படங்களை கம்பேர் பண்ணும்போது, ’மாஸ்டர்’ படத்தில் இருக்கிற புதுமையான விஷயமே எல்லா கேரக்டர்களுக்கும் இருக்கிற முக்கியத்துவம்தான். பல கேரக்டர்கள் படத்தில் இருந்தாலும், எந்த ஒரு கேரக்டரும் சும்மா வந்துபோன மாதிரி இருக்காது. அந்த கேரக்டருக்கான தாக்கத்தை மனசுல பதிய வைக்கும். இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, பார்த்து பண்ணோம்.

அதுமட்டுமல்லாமல், இந்த டீமில் இருக்கிற பல பேருக்கு இதுதான் பெரிய ஸ்டாரோட வேலைப் பார்க்கிற முதல் படம். ஆரம்பத்தில் எல்லாருமே ஒருவித பயத்தோடும், பதற்றத்தோடும்தான் இருந்தாங்க. அதை முதன்முதலில் உடைச்சதே விஜய் சார்தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரோடும் நல்லா பேசி, ஃப்ரீயா இருக்கிற டைம் அவங்களோடு கிரிக்கெட் விளையாடி எல்லாரையுமே சகஜமா ஃபீல் பண்ண வெச்சார். விஜய் சாரும் விஜய் சேதுபதி அண்ணாவுமே செட்டில் ஜாலியாத்தான் இருப்பாங்க. செட்டில் இருக்கிறதுக்கு அப்படியே நேரெதிரா படத்தில் இருப்பாங்க. படத்தில் இவங்க சந்திக்கிற காட்சிகளைப் படமாக்கும் போது, மானிட்டரில் பார்த்தே கைத்தட்டி, விசில் அடிச்சு என்ஜாய் பண்ணோம். நிச்சயமா படத்திலும் அது மாஸ் மொமென்ட்டா இருக்கும்..." - என்றபடியே பேச ஆரம்பித்தார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

மாஸ்டர்
மாஸ்டர்

உங்களோட ‘கைதி’ படத்துக்கு ‘விருமாண்டி’ படம்தான் இன்ஸ்ப்ரேஷன்னு பல இடங்களில் சொல்லியிருக்கீங்க; ‘மாஸ்டர்’ படத்துக்கு இன்ஸ்ப்ரேஷன் எது..?

”ரொம்ப நாளுக்கு முன்னாடி என்னோட ஊர்ல ஒரு சுவாரஸ்யமான கேரக்டரைப் பார்த்தேன். ஒரு பத்து நிமிஷம்தான் அவரைப் பார்த்திருப்பேன்; அவரோட நடவடிக்கை எல்லாமே பயங்கரமா இருந்துச்சு. அவரைப் பற்றி விசாரிக்கும் போது, அவர் யார்; அவர் பின்னணி என்னனு தெரிஞ்சது. அதையெல்லாம் வெச்சு ஒரு கதை பண்ணலாமேனு எனக்கு அப்போவே தோணுச்சு. அதை கொஞ்சமா டெவலப் பண்ணியும் வெச்சிருந்தேன். இந்தக் கேரக்டரில் விஜய் சார் நடிக்கிறதுக்கு ஓகே சொன்னதுக்கு அப்புறம்தான், ஹீரோவுக்குத் தேவையான சில விஷயங்கள் இருக்கணும்; ஒரு ஸ்ட்ராங்கான வில்லன் வேணும்; வில்லனோட பின்னணி இப்படி இருக்கணும்னு கதைக்குத் தேவையான பல விஷயங்களைச் சேர்த்தேன்.”

‘மாஸ்டர்’ படத்தோட ஷூட்டிங் நெய்வேலியில் நடக்கும் போதுதான் ஐடி ரெய்டும் நடந்தது; அந்த சமயத்தில் விஜய் எப்படி இருந்தார்?

மாஸ்டர்
மாஸ்டர்

”நாங்கதான் ரொம்ப டென்ஷனா இருந்தோம். அவர் கூலாத்தான் இருந்தார். நெய்வேலியில் இருந்து அவரை சென்னைக்கு அழைச்சிட்டு போறாங்கனு சொன்னப்போ, ‘நான் போயிட்டு வரேன்... நீ பார்த்துக்கோ’னு சொன்னார். நானும் அவர் இல்லாத சீன்களை எடுத்துட்டு இருந்தேன். சென்னையில ஐடி வேலைகளை எல்லாம் முடிச்சிட்டு அவர் மறுபடியும் ஷூட்டிங் வந்தப்போ, செட் எப்படி இருக்கப்போகுது, அவர் என்ன மைண்ட் செட்டில் இருப்பார், அவர்கிட்ட எப்படி பேசுறதுனு ஒருவித இறுக்கத்தோடு இருந்தோம். எப்படி இந்தப் படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்சப்போ, ஒரு பெரிய ஸ்டார் படத்துல வேலைப் பார்க்கிறோம்கிற பதற்றத்தை உடைச்சாரோ, அதே மாதிரி இந்த சம்பவம் நடந்து முடிஞ்சு அவர் செட்டுக்குள்ள வந்து எங்களோட முகங்களைப் பார்த்துட்டு, ‘ஏன் எல்லாரும் முகத்தை இப்படி வெச்சிருக்கீங்க’னு சிரிச்சார். அந்த நொடி, செட்ல இருந்த எல்லாரும் சிரிச்சாங்க. அவ்வளவுதான், அடுத்து யாருக்குமே அந்த விஷயம் ஞாபகத்துக்கு வராமல் வொர்க் பண்ணோம்.”

பெரிய நடிகர்களை பெரிய இயக்குநர்கள்தான் இயக்குவாங்கங்கிற நிலை இப்போ மாறியிருக்கு. சினிமாவோட இந்த சூழலை எப்படிப் பார்க்கிறீங்க... ஸ்டார் நடிகர்களின் எதிர்பார்ப்பு எந்த மாதிரி இருக்கு?

”பெரிய நடிகர்கள் பெரும்பாலும் பெரிய இயக்குநர்களோடுதான் படங்கள் பண்றாங்க. அதில் எப்போதாவது இப்படி ஒரு முடிவை பெரிய ஹீரோக்கள் எடுக்குறாங்க. இது ஒரு ரிஸ்க்கா வெளியில இருக்கிறவங்களுக்கு தெரிஞ்சாலும், இப்போ இருக்கிற இயக்குநர்களோட வேலைப் பண்ணிப் பார்க்கலாம்னுதான் இந்த முடிவை எடுக்கிறாங்க. இந்த மாதிரியான முடிவை எப்போதாவது எடுத்தாலும், இது ரொம்ப முக்கியமான முடிவுனு நான் நினைக்கிறேன். எல்லாத்தையும் தாண்டி, ஒரு நடிகர் நல்லக்கதையில் நடிக்கணும்னுதான் ஆசைப்படுவார்; அந்தப் படம் நல்லா ஓடணும்னுதான் நினைப்பார். இதுதான் எல்லா நடிகர்களுக்கும் எப்போதும் இருக்கிற எதிர்பார்ப்பு.”

மாஸ்டர்
மாஸ்டர்

உங்களுடைய படங்கள் பெரும்பாலும் கேங்ஸ்டர் கதையாகவே இருக்கே..?

”எனக்கு கேங்ஸ்டர் படங்கள் ரொம்ப பிடிக்கும். அதோட தாக்கமாவும் இதை எடுத்துக்கலாம்; என்னோட ஸ்டைலாவும் எடுக்கலாம். மற்ற ஜானர்களிலும் படங்கள் பண்ணணும்கிற ஆசை இருக்கு. முழுக்க முழுக்க பிளாக் ஹ்யூமர் வெச்சு ஒரு கதை எழுதியிருக்கேன். இருக்குற கமிட்மென்ட்டை எல்லாம் முடிச்சிட்டால், இந்த மாதிரி வேற ஜானரும் ட்ரை பண்ணலாம்னு இருக்கேன். கேங்ஸ்டர் கதைகள் மட்டும்தான் பண்ணணும்னு எந்த முடிவும் எடுக்கலை.”

அடுத்த கட்டுரைக்கு