சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சிங்கம் சிங்கிளா வரும், சிரிப்பு கும்பலா வரும்!

விவேக்
பிரீமியம் ஸ்டோரி
News
விவேக்

நகைச்சுவை நடிகர்களுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆகும் டீம் உண்டு. அப்படி ஒரு டீம், விவேக்கின் டீம்.

ஹீரோ - டைரக்டர், ஹீரோ - ஹீரோயின் இவர்களுக்குள் மட்டும் கெமிஸ்ட்ரி இருப்பதில்லை; நகைச்சுவை நடிகர்களுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆகும் டீம் உண்டு. அப்படி ஒரு டீம், விவேக்கின் டீம்.

தனது டீமில் இருக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாகச் சொல்லி நமக்கு அறிமுகப்படுத்தி வைத்த விவேக்கைத் தொடர்ந்து, ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினர். “நான் ‘கிளி’ ராமச்சந்திரன். ‘அள்ளித்தந்த வானம்’ படத்துல விவேக் சாரை முதன்முறையா சந்திச்சேன். அப்புறம், ‘ரன்’ படத்துல காக்கா பிரியாணி காமெடியில வாய்ப்பு கொடுத்தார். அதுல என் மூக்கை வெச்சு கிண்டல் பண்ற சீன்ல இருந்து என் பேர் ‘கிளி’ ராமச்சந்திரன் ஆகிடுச்சு” என்றவர் அந்தக் காமெடியை நடித்தே காட்டினார்.

அவரைத் தொடர்ந்த ‘நட்டு’ நட்ராஜ், “நடிக்கணும்னு ரொம்ப ஆசை. ‘தமிழன்’ பட மேனேஜர் விவேக் சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். விவேக் சார் என்னைப் பார்த்துட்டு ‘வெயிட் பண்ணுங்க பார்ப்போம்’னு சொன்னார். நானும் காலையில இருந்து சாயந்திரம் வரை என்னைக் கூப்பிடுவாங்கன்னு காத்துக்கிட்டிருந்தேன். அன்னிக்குத்தான் அந்தப் பட ஷூட்டிங்குடைய கடைசி நாள். நேரம் நெருங்க நெருங்க ‘நம்மளைக் கூப்பிடமாட்டாங்களோ’ன்னு பயம் வந்து கண்ணுல தண்ணியே வர ஆரம்பிச்சுடுச்சு. கடைசிப் பத்து நிமிஷம் இருக்கப்போ என்னைக் கூப்பிட்டாங்க.

போண்டா மணி , நட்டு, கிளி ராமச்சந்திரன், விவேக், ஜெகதீஷ், ராஜாதிராஜன், தெனாலி
போண்டா மணி , நட்டு, கிளி ராமச்சந்திரன், விவேக், ஜெகதீஷ், ராஜாதிராஜன், தெனாலி

‘கடைசி ரோல்பா. ஒன்மோர் போச்சுனா மறுபடியும் எடுக்கமுடியாது. இதுதான் கான்செப்ட். கரெக்டா பண்ணிடணும்’னு சொல்லி அந்த மாவுக்கட்டு கையில அட்ரஸ் எழுதுற காமெடியை எனக்குப் புரியவெச்சார், விவேக் சார். நான் அதைச் சரியாப் பண்ணுனதும் ரொம்பப் பாராட்டினார். அப்போதிலிருந்து விவேக் சாருடன் நிறைய படங்கள்ல நடிச்சுட்டிருக்கேன்” என்றார்.

“என்ன தலைவா... புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்கியாமுல்ல? அதுக்கு நான்தான் கொ.ப.சே” என்று ‘சாமி’ படத்தில் தான் விவேக்குடன் நடித்த காமெடி வசனத்துடன் ஆரம்பித்தார் தெனாலி. “ஷூட்டிங்குக்கு ஆள் வேணும்னு சொல்லி கூட்டிட்டுப் போவாங்க. கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல போயிருக்கேன். ஆனா, ஒரு படத்துலகூட என்னைப் பார்க்க முடியாது. ஒருத்தர் மூலமா ஸ்டில்ஸ் சிவா சார்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். ‘சுதந்திரம்’ படத்துல அசிஸ்டென்ட் போட்டோகிராபரா வேலை செய்யும்போது விவேக் சாரைப் பார்த்த சந்தோஷத்துல கொஞ்சம் அதிக சுறுசுறுப்பா வேலை செஞ்சுட்டிருந்தேன். அதைப் பார்த்துட்டு எனக்கு அந்தப் படத்துல ஒரு சின்ன ரோல் கொடுத்தார். அப்புறம் ‘சாமி’ படத்துல ஒரு காமெடி சீன்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது. ஒரே டேக்ல முடிச்சுட்டேன்” என்ற தெனாலிக்கு ‘அது ஒண்ணுமில்ல. குடிகார கேரக்டர் பண்ணுனதனால உனக்கு இயற்கையா வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்’ என்ற விவேக்கின் கவுன்ட்டருக்கு செம ரெஸ்பான்ஸ்!

சிங்கம் சிங்கிளா வரும், சிரிப்பு கும்பலா வரும்!

“ ‘நீ எங்கடா இங்க? நீ வடிவேலு டீம்தானே?’ங்கிற உங்களுடைய மைண்ட் வாய்ஸ் எனக்குக் கேட்குது. அதுக்குக் காரணம் சொல்றேன்” என்று தொடங்கினார் போண்டா மணி. “விவேக் சார்கூட சீரியல்ல நடிக்கும்போது நான் தமிழ் பேசுற விதம் அவருக்குப் பிடிச்சிருந்தது. அதுக்குப் பிறகு, சில படங்கள்ல நடிச்சேன். ஆனா, ‘ரன்’ படத்துல அவர்கூட நடிச்ச ‘காக்கா பிரியாணி’ காமெடி நல்ல ரீச் இருந்தது. ‘சுந்தரா டிராவல்ஸ்’ல நடிச்சு முடிச்ச பிறகு, விவேக் சாரைப் பார்த்து ‘ஏதாவது படம் இருந்தா சொல்லுங்க’ன்னு சொன்னேன். அவர்தான், ‘`சுந்தரா டிராவல்ஸ்’ படத்துல உன்னுடைய காமெடி நல்லா இருந்தது. வடிவேலு கூட நீ வரும்போது சூப்பரா வொர்க் அவுட் ஆகுது. அவரைக் கெட்டியா பிடிச்சுக்கோ. மத்தபடி உனக்கு எப்போவும் நான் இருப்பேன்’னு சொன்னார். இப்படி எத்தனை பேர் சொல்லுவாங்கன்னு தெரியலை” என்று விவேக்கைப் பார்த்த போண்டா மணியின் தோள்களைத் தட்டிக்கொடுத்தார் விவேக்.

“அதுக்குப் பிறகுதான் நான் வடிவேலு சார் படங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். மக்கள் மத்தியில தெரிய ஆரம்பிச்சேன். விவேக் கூட்டணி, வடிவேலு கூட்டணியை எல்லாம் இப்போ மறந்துட்டாங்க. ஹீரோக்களே காமெடி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. பழைய மாதிரி காமெடி ட்ராக் வர்றதில்லை. அதுக்காக விவேக் சார் போராடுறார். வடிவேலு சார் ‘போங்கயா ஒண்ணும் வேணாம்’னு வெறுத்து நடிக்கவேயில்லை. ஆனா, மறுபடியும் பழைய மாதிரி நாங்க எல்லோரும் ஒரு ரவுண்ட் வருவோம். 2020 எங்க கையிலதான்” என்று சொல்லும்போது அவர் முகத்தில் அவ்வளவு நம்பிக்கை.

“என் பேரு ஜெகதீஷ். பொக்கே ஷாப் வெச்சிருக்கேன். தவிர, சீரியல்ல சின்னச் சின்ன கேரக்டர் நடிச்சுட்டிருந்தேன். ‘திருமலை’ படத்துல ஆட்டோ டிரைவரா நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதுக்குப் பிறகு, நிறைய படங்கள்ல சார்கூட சின்னச் சின்ன கேரக்டர்கள் பண்ணியிருக்கேன்” என்றவர் அவர் நடித்த காமெடிக் காட்சிகளின் வசனங்களை நினைவுகூர்ந்து சிம்பிளாக முடித்துக்கொண்டார். “என் பேரு உங்களுக்குத் தெரிஞ்சுருக்க வாய்ப்பு குறைவு. நானே சொல்றேன். என் பேரு ராஜாதிராஜன். டிராமாவுல நடிச்சுட்டிருந்தேன். ஆனா, எனக்கு சினிமாவுல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. எத்தனையோ படங்கள்ல கூட்டத்துல ஒருத்தனா நின்னுட்டிருப்பேன். ஆனா, படம் பார்க்கும்போது நான் எங்க இருக்கேன்னு எனக்கே தெரியாது. அப்புறம்தான், ‘எம்.குமரன்’ படத்துல ஹோட்டல் காமெடியில நடிக்க வெச்சார் விவேக் சார். அதுல இருந்து சார்கூடவே இருக்கேன்” என்றார்.

விவேக்
விவேக்

“இவங்க எல்லோரும் மத்தவங்களைச் சிரிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டு கஷ்டப்பட்டு சினிமாவுக்குள்ள வந்தவங்க. ஆனா, எல்லோராலும் பெருசா ஜெயிக்க முடியலை. அதுக்காக இன்னமும் போராடிக்கிட்டிருக்காங்க. இவங்க காமெடியைப் பார்த்துச் சிரிக்கிறவங்க எல்லோரும் இவங்க சொந்தக் கதையைக் கேட்டா அழுதுடுவாங்க. அப்படிப்பட்ட சூழல்லதான் பெரும்பாலான காமெடி நடிகர்கள் இருக்காங்க” என்றவர் ஒவ்வொருத்தரைப் பற்றியும் பேச ஆரம்பித்தார். “தெனாலியுடைய முகம் கரடு முரடான முகம். அதுதான் ‘சாமி’ பட காமெடியில குடிகார கேரக்டர் சூப்பரா செட்டாச்சு. நட்டுக்கு ஃபேமிலி பிளானிங் சின்னம் மாதிரி முக்கோண முகம். இப்போல்லாம் இப்படிப் பேசுனா ‘பாடி ஷேமிங்’னு சொல்லிடுவாங்க. ஹியூமர்ங்குறது எல்லாத்தையும் கலந்து தொட்டாதான் வொர்க் அவுட்டாகும். கிளி எப்பவும் சந்தோஷமா இருப்பார். அவருடைய பலமே முகமும் மூக்கும்தான். போண்டா மணி என்கூட பண்ணுன காமெடிகளைவிட வடிவேலு கூட பண்ணுன நிறைய காமெடிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஜெகதீஷுக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி சாருடைய ஸ்டைல் இருக்கும். எனக்கு அது ரொம்பப் பிடிக்கும். ராஜாதிராஜன் காமெடியனா அறியப்பட்டிருக்கார். ஆனா, நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட். இன்னும் அதுக்கான வாய்ப்பு அவருக்கு வரலை. இன்னும் நிறைய பேர் இருக்காங்க” என்ற விவேக், இவர்களுடன் நடித்த காமெடிக் காட்சிகள் எடுக்கும்போது நடந்த காமெடிகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டது மட்டுமல்லாமல் அந்தக் காட்சிகளைத் தனது டீமோடு சேர்ந்து ரீ கிரியேட் செய்தும் அசத்தினார்.

பின் சீரியஸ் மோடுக்கு வந்து, “முன்னாடி எல்லாம் ஒரு படம் 2.30 மணி நேரம், 2.45 மணி நேரம் இருக்கும். காமெடிக்கு தனி ட்ராக் உண்டு. அப்போ இவங்களை எல்லாம் மனசுல வெச்சு காமெடியையும் அந்த கேரக்டர்களையும் எழுதுவேன். ஆனா, இப்போ ரெண்டு மணி நேரத்துல படத்தை முடிச்சிடுறாங்க. அஞ்சு நிமிஷம் அதிகமாகிடுச்சுனா, ‘எப்போ முடிப்பீங்க’ன்னு ஆடியன்ஸே கேட்க ஆரம்பிச்சிடுறாங்க. இப்படியான சூழல்ல காமெடி ட்ராக்கை எப்படிச் சேர்க்கிறது? மறுபடியும் 2.30 மணி நேர படங்களும் தனி காமெடி ட்ராக்கும் வரணும். என்னுடைய கோரிக்கை அதுதான். தவிர, காமெடிக்குன்னு ரெண்டு சேனல்கள் இருக்கு. அவங்களுக்கும் நாம கன்டன்ட் கொடுக்கணும்ல. காமெடி நடிகர்களே ஹீரோவா பண்ணும்போது இந்த நடிகர்களுடைய வாழ்வாதாரம், குடும்பம்னு எல்லாத்தையும் மனசுல வெச்சு இவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்” என்று சொல்லும் விவேக்கை, புன்னகையால் ஆமோதிக்கிறார்கள் மற்றவர்கள்.