Published:Updated:

‘சில்லுக்கருப்பட்டி’ சந்திப்பு... தித்திப்பு!

‘சில்லுக்கருப்பட்டி’ சந்திப்பு...  தித்திப்பு!
பிரீமியம் ஸ்டோரி
‘சில்லுக்கருப்பட்டி’ சந்திப்பு... தித்திப்பு!

“எல்லோருக்கும் என் போர்ஷன் ரொம்பப் பிடிச்சிருந்ததுன்னு சொல்றாங்க. அதுக்குக் காரணம் இயக்குநர்தான்.

‘சில்லுக்கருப்பட்டி’ சந்திப்பு... தித்திப்பு!

“எல்லோருக்கும் என் போர்ஷன் ரொம்பப் பிடிச்சிருந்ததுன்னு சொல்றாங்க. அதுக்குக் காரணம் இயக்குநர்தான்.

Published:Updated:
‘சில்லுக்கருப்பட்டி’ சந்திப்பு...  தித்திப்பு!
பிரீமியம் ஸ்டோரி
‘சில்லுக்கருப்பட்டி’ சந்திப்பு... தித்திப்பு!

2019-ம் ஆண்டின் இறுதியில் கோலிவுட் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ் ‘சில்லுக் கருப்பட்டி.’ நகர நெரிசலில் மனிதம் நெய்யும் நான்கு கதைகளின் தொகுப்பாக மக்களின் மனதை இலகுவாக்கித் தித்திப்பூட்டி மகிழ்வித்தது இந்தப் படம். ‘அப்படியே எங்க வீட்டுல நடக்குற மாதிரியே இருக்கே’ என்று மக்கள் புன்னகைத்துச் சிலாகிக்கும் ஒரு படத்தைக் கொடுத்த ‘சில்லுக் கருப்பட்டி’களைச் சந்தித்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“முதல்ல இந்த ஆந்தாலஜி படத்துல ஒரு கதையை மட்டும் நான் எழுதி இயக்குறதா இருந்தது. ஆனா, அது அடுத்த கட்டத்துக்கு நகரலை. அதனால, எல்லாக் கதைகளையும் நானே பண்றேன்னு சொல்லி ஆரம்பிச்சதுதான், ‘சில்லுக் கருப்பட்டி’. ‘டர்ட்டில்ஸ் வாக்’, ‘பிங்க் பேக்’ ரெண்டு கதைகளும் ஏற்கெனவே நான் எழுதிவெச்சிருந்தேன். ‘காக்கா கடி’யைப் பொறுத்தவரை மணிகண்டன், நிவேதிதா இவங்க ரெண்டு பேரையும் எனக்கு பர்சனலா நல்லாத் தெரியும். அவங்க கேரக்டர்களை வெச்சு அவங்களுக்காக எழுதின கதை. நான் சமுத்திரக்கனி சார்கிட்ட அசிஸ்டென்ட்டா வொர்க் பண்ணியிருக்கேன். அவருக்காக மட்டுமே எழுதினது அந்த தனபால் கேரக்டர் வர்ற ‘ஹே அம்மு’ கதை. இந்தப் படத்துல எனக்கு சர்ப்ரைஸா வந்து அமைஞ்சது சுனைனா மேடம்தான். அதனாலயே எனக்கு அவங்க ஸ்பெஷல்” என்று இயக்குநர் ஹலிதா ஷமீம் படத்தின் கதாபாத்திரங்கள் பற்றிச் சொல்லி முடித்தவுடன் தொடர்ந்தார், சமுத்திரக்கனி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“எல்லோருக்கும் என் போர்ஷன் ரொம்பப் பிடிச்சிருந்ததுன்னு சொல்றாங்க. அதுக்குக் காரணம் இயக்குநர்தான். அவங்க சொன்னதைத் தவிர நான் வேறெதுவும் பண்ணலை. இதுவரை உடம்பை விறைச்சுக்கிட்டுதானே சுத்திட்டு இருந்திருக்கோம்.

ஸ்ரீராம், மணிகண்டன், ஹலிதா, வெங்கடேஷ், சமுத்திரக்கனி,  ராகுல், நிவேதிதா, சுனைனா
ஸ்ரீராம், மணிகண்டன், ஹலிதா, வெங்கடேஷ், சமுத்திரக்கனி, ராகுல், நிவேதிதா, சுனைனா

இதுல என்னை முழுமையா மாத்துனாங்க. தியேட்டர்ல படம் பார்த்துட்டு எனக்குத் தெரிஞ்சவங்களே, ‘நீ பேச ஆரம்பிச்சா எவ்ளோ பெரிய வில்லனும் திருந்திடுவான். ஆனா, பொண்டாட்டி பிள்ளைகளை வெச்சுக்கிட்டு நீ சமாளிக்கிறதைப் பார்க்க அவ்ளோ சந்தோஷமா இருக்கு’ன்னு சொல்றாங்க. வழக்கமா நாம பண்றதைவிட இந்த மாதிரி கதைகள்ல நடிக்கிறது நமக்கு வேறொரு முகத்தைக் கொடுக்குது. இதுக்கு ஹலிதாவுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றார்.

“ `காக்கா கடி’ பண்ணத் தொடங்கும்போது பயம் இருந்துகிட்டே இருந்தது. கொஞ்ச நேரத்துல அந்த பயத்தைப் போக்கிட்டாங்க ஹலிதா. நான் என்ன பண்ணணும்னு அவங்க தெளிவா சொல்லிடுவாங்க. அதைச் சரியா பண்ணிட்டா போதும். ரொம்பவே ஜாலியா இருந்தது. என்னோட நிறம் சினிமாவுல பெரிய பாதுகாப்பின்மையைக் கொடுத்திருக்கு. அதை உடைச்சு நிறைய நம்பிக்கை கொடுத்தது இந்தப்படம்” என நெகிழ்ந்த நிவேதிதாவை இடைமறித்த இயக்குநர் ஹலிதா ஷமீம், “நான் இவங்களைச் சந்திச்சுப் பேசும்போது இந்த ஆந்தாலஜில வேற ஒரு கதைதான் இருந்தது. ஆனா, அவங்க அதுக்கு செட்டாகமாட்டாங்கன்னு தெரிஞ்சிடுச்சு. இருந்தாலும் நிவேதிதாவை விட்டுடக்கூடாதுன்னு அவங்களுக்காக எழுதின கதைதான் ‘காக்கா கடி’ ” என்றார். குரலில் பொங்கும் பெருமையோடு உரையாடலுக்குள் மீண்டும் வந்தார் சமுத்திரக்கனி.

“என் அசிஸ்டென்டா இருக்கும்போது பார்த்த ஹலிதாவுக்கும் இப்போ பாக்குற ஹலிதாவுக்கும் பயங்கர வித்தியாசம் இருக்கு. நானும் சுனைனாவும் பேசுற சீனை ரெண்டரை நிமிஷம் சிங்கிள் ஷாட்ல எடுத்தாங்க. ‘சிங்கிள் ஷாட்ல சூப்பரா இருக்கு’ன்னு கேமராமேன் சொன்னதும் ‘எனக்கு சிங்கிள் ஷாட் பெருமையெல்லாம் வேண்டாம். நான் சொல்லணும்னு நினைக்கிற விஷயம் பதிவாகணும். அது டீட்டெய்லா வேணும்’னு ஹலிதா சொன்னதைக் கேட்டு எனக்கு ‘நம்ம பிள்ளை வளர்ந்திடுச்சு’ன்னு பெருமையா இருந்தது. சில இயக்கு நர்கள் இயக்கத்துல நடிக்கும்போது `என்ன பண்ணணும்’னு கேட்டா, ‘ஏதாவது பண்ணுங்க சார்’னு சொல்லுவாங்க. ஆனா, இந்த மாதிரி இயக்குநர்கிட்ட நடிக்கும்போது அவங்க நம்மளைப் பாத்துக்கு வாங்கன்னு நம்பிக்கையும் தைரியமும் வந்திடுது” என்றார்.

“ஹலிதா சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனா, மூணு குழந்தைகளுக்கு அம்மாவா நடிக்கணும்னு சொன்னவுடன் ஷாக்! காரணம், இதுக்கு முன்னாடி நான் இந்த மாதிரி ரோல் பண்ணுனதில்லை. ரெண்டு நாள் கழிச்சுதான் ஓகே சொன்னேன். நான் நடிச்ச அமுதினி கேரக்டர் பத்தி எல்லோரும் நல்லாப் பேசுறாங்க. அதுக்குக் காரணம் ஹலிதாதான். அவங்க சொன்னதை அப்படியே பண்ணினேன். ஆர்ட்டிஸ்ட்கிட்ட அவங்களுக்குத் தகுந்த மாதிரி ரொம்ப அழகா தெளிவாச் சொல்லிப் புரியவெச்சு அவங்களுக்கு வேணுங்கிறதை எடுத்துக்குவாங்க. அவங்களோட வசனங்களும் படத்துக்குப் பெரிய பலம்” என உற்சாகமாக சுனைனா சொல்ல, அதை ஆமோதித்தபடி பேச ஆரம்பித்தார் மணிகண்டன்.

‘சில்லுக்கருப்பட்டி’ சந்திப்பு...  தித்திப்பு!

“நான் ஹலிதாவுடைய ‘பூவரசம் பீப்பீ’ படம் பார்த்துட்டு, ஃபேஸ்புக்ல இவங்களைக் கண்டுபிடிச்சு மெசேஜ் அனுப்பினேன். அடுத்த படத்துல ஏதாவது சின்ன கேரக்டர் இருந்தாலும் சொல்லுங்கன்னு சொன்னேன். அப்படித்தான் நாங்க பழக்கமானோம். இந்த ஸ்க்ரிப்ட்ல என் கேரக்டருக்கு நிறைய எமோஷன்ஸ் இருக்கும். அது அப்படியே திரைல வெளிப்பட்டதுக்கு இயக்குநர்தான் காரணம். அவங்க நினைக்கிறதை அப்படியே கொண்டுவர்றதுதான் எனக்கான சவாலா இருந்தது” என இவரும் இயக்குநர் புகழ்பாட, ‘‘படத்துல இவர் பங்கும் நிறைய இருக்குங்க’’ என இடைமறித்தார் ஹலிதா. ‘‘எப்பவுமே படம் பத்திதான் யோசிச்சுக்கிட்டு இருப்பார். திடீர்னு ‘அந்த சீன்ல இப்படிப் பண்ணட்டுமா?’ ‘இப்படிப் பண்ணுனா சரியா இருக்குமா?’ன்னு கேட்டு நடிச்சுக்காட்டுவார். அந்த அளவுக்கு டெடிகேஷன்” என மணிக்கு க்ரெடிட் கொடுத்தார்.

“எல்லாரும் செம ஸ்வீட்டா பேசுறாங்கல்ல. இப்போ என் கதையைக் கேளுங்க’’ என உள்ளே வந்தார் `டர்ட்டிள்ஸ் வாக்’ நாயகன் ஸ்ரீராம். ‘‘போலீஸ், காலேஜ் பசங்க, பொண்ணுங்களுக்குத் தற்காப்புக் கலை சொல்லிக்கொடுத்துட்டிருக்கேன். என்னை ஃபேஸ்புக்ல பார்த்துட்டு ஹலிதா கூப்பிட்டாங்க. இந்த அளவுக்குப் பெரிய கேரக்டர் கொடுப்பாங்கன்னு நினைக்கலை. நான் படத்துல ஒரு லவ் போர்ஷன்ல நடிச்சிருக்கேன்னு தெரிஞ்சதும் வீட்ல பெரிய பிரச்னை ஆகிடுச்சு. ‘முத்தமெல்லாம் கொடுக்கிறீங்களா? இந்த வயசுல இப்படி ஆட்டம்போடுறது எல்லாம் நல்லா இல்லை’ன்னு சொல்லிட்டாங்க என் மனைவி. நிழலுக்கு முத்தம் கொடுத்ததுக்கே இந்த நிலைமை. படத்தையும் பார்க்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க. என் பொண்ணும் அவ பங்குக்கு அவ அம்மாவை ஏத்திவிடுறா. வீட்ல செம ரகளையா இருக்கு. இப்பக்கூட பாருங்க. எல்லாரும் ஜோடியா வந்திருக்காங்க. என் ஜோடி மட்டும்தான் மிஸ்ஸிங்’’ என்றதும், “ஏன் உங்க வீட்ல உங்களைத் திட்டுறாங்கன்னு இப்ப தெரியுது சார்” என சமுத்திரக்கனி கலாய்க்க, சிரிப்பலை.

அடுத்ததாகப் பேச ஆரம்பித்தனர், ‘பிங்க் பேக்’ கதையில் நடித்த ராகுலும் வெங்கடேஷும். “நாங்க ரெண்டு பெரும் அண்ணன் தம்பி. ஏரியா ஃபுட்பால் விளையாடிட்டு இருந்தபோதுதான் எங்க கோச் சொல்லி ஆடிஷனுக்குப் போனோம். செலக்ட்டாகி, படத்துல நடிச்சும் முடிச்சுட்டோம். ஆனா, படம் ரிலீஸாக லேட்டாச்சு. எங்க ஏரியா பசங்க எல்லாம் ‘என்னடா, நீ நடிச்ச படம் இன்னும் வரலை. அப்போ உன் படம் அவ்ளோதான்’னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாகிடுச்சு. அப்புறம், படம் வரப்போகுதுன்னு தெரிஞ்சவுடன் எல்லோரும் என்கிட்ட வந்து பேசுனாங்க, டிக்கெட் கேட்டாங்க. ஆனா, நான் போனே எடுக்கலையே! அப்புறம் என் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸுக்கு மட்டும் டிக்கெட் வாங்கிக்கொடுத்தேன். அப்போ செம கெத்தா இருந்தது” என காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டார் ராகுல். “நான் பேசப் பேச தியேட்டர்ல கைதட்டுனாங்க. அப்போ அவ்வளவு சந்தோஷமா இருந்தது’’ என வெங்கடேஷும் சொல்ல, இருவரிடமும் அவர்களின் வைரல் வசனத்தை நடித்துக்காட்டச் சொன்னோம். “எவ்ளோ பெரிய கையா இருந்தாலும் அதுக்கு அக்குள் இருக்கும்ல” என்ற அந்த வசனத்தை நடித்துக்காட்டி அப்ளாஸ் அள்ளினர் இந்தப் புளியந்தோப்புப் புள்ளிங்கோஸ்!

டெக்னீஷியன்கள் பற்றிப் பேச ஆரம்பித்தார் இயக்குநர் ஹலிதா. “இந்தப் பட வெற்றிக்கு முக்கியக் காரணம் இதுல வேலை பார்த்த டெக்னீஷியன்ஸ். ‘டர்ட்டில்ஸ் வாக்’ போர்ஷனுக்கான ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா பண்ணினார். அவர்கூட ஏற்கெனவே வொர்க் பண்ணினதனால அவர் வொர்க் எப்படின்னு எனக்கும் என் வொர்க் எப்படின்னு அவருக்கும் தெரியும். ‘பிங்க் பேக்’ கதையை ரொம்ப ரசிச்சுப் பண்ணினார் அபிநந்தன்.

சுனைனா, சமுத்திரக்கனி
சுனைனா, சமுத்திரக்கனி

‘காக்கா கடி’யில மணிகண்டனையும் நிவேதிதாவையும் ரசிச்சு ரசிச்சு ஃப்ரேம் வெச்சார், விஜய் கார்த்திக் கண்ணன். யாமினி ரொம்ப ஸ்வீட். செம ஃபாஸ்டா ‘ஹே அம்மு’வை முடிச்சுக்கொடுத்துட்டாங்க. இசையைப் பொறுத்தவரை, பிரதீப் மட்டுமல்ல, அவர் மனைவி கல்யாணியும் சேர்ந்துதான் இந்தப் படத்துல வொர்க் பண்ணியிருக்காங்க. அவர் பொண்ணுங்கதான் `பிங்க் பேக்’ல ஹம் பண்ணியிருக்காங்க. அவங்க குடும்பமே மியூசிக்கல் குடும்பம்தான்” எனச் சிலாகித்தார்.

ரிலீஸுக்கு முன்னாடி படம் பார்த்தவங்க எல்லோரும் ‘படம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, மக்கள் ஏத்துப்பாங்களான்னு தெரியலை’ன்னு சொன்னாங்க.

‘‘படத்தோட வசனங்கள் பெரிய அளவுல பாராட்டப்படுதே! அந்த வெற்றியின் ரகசியம் என்ன?’’ என்று ஹலிதாவிடம் கேட்டோம்.

“ஒரு சூழலை யோசிச்சா எனக்கு எடுத்தவுடனே வசனமாதான் வரும். அதுதான் என் பலம்னு நினைக்கிறேன். இது ரெண்டு ரெண்டு கேரக்டர்களுக்குள்ள நடக்குற கதைங்கிறதனால வசனங்கள் தனியாத் தெரியுது. ஆனா, அப்படித் தனியாத் தெரியக் கூடாதுன்னு நினைப்பேன். வசனம் கதையோடு ஒட்டிதான் இருக்கணும். ‘பூ’ சசி சார் போன் பண்ணி, `படம் பார்த்தவுடனே என் மனைவி, குழந்தைகள் எல்லோரையும் ரெஸ்டாரன்ட்டுக்குக் கூட்டுட்டு வந்துட்டேன்மா’ன்னு சொல்லி நெகிழ்ச்சியா பேசினார். பாலாஜி சக்திவேல் சார், `என் வைஃப் ரொம்ப ஸ்வீட்மா. எனக்கு இப்போ அவ மேல லவ் அதிகமாகிடுச்சுமா’ன்னு சொன்னார். ரிலீஸுக்கு முன்னாடி படம் பார்த்தவங்க எல்லோரும் ‘படம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, மக்கள் ஏத்துப்பாங்களான்னு தெரியலை’ன்னு சொன்னாங்க. இப்போ படத்துடைய ரிசல்ட்டைப் பார்க்கும்போது செம சர்ப்ரைஸா இருக்கு; சந்தோஷமா இருக்கு” என முகத்தில் சந்தோஷம் மின்ன முடிக்கிறார் ஹலிதா.

வாழ்த்துகள் ‘சில்லுக் கருப்பட்டி’ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism