Published:Updated:

``கமல்ஹாசனின் ஃபேவரைட் உஷாராணி... 40 வருஷம் கடந்தும் அவ அதை மறக்கல!''-எஸ்.என்.பார்வதி

உஷாராணி
உஷாராணி

கமல்ஹாசன் வில்லனாக நடித்த 'குமாஸ்தாவின் மகள்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் உஷாராணி. கமல்ஹாசனின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவர் உஷாராணி.

நடிகையும், பிரபல மலையாள இயக்குநர் என்.சங்கரன் நாயரின் மனைவியுமான உஷாராணி சென்னையில் சில நாள்களுக்கு முன் காலமானார். 62 வயதான உஷாராணி மலையாளத்தில் 200 படங்களுக்கு மேல் நடித்தவர். தமிழிலும் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் படங்கள் உட்பட சுமார் இருபது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். கமல்ஹாசன் வில்லனாக நடித்த 'குமாஸ்தாவின் மகள்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் உஷாராணி. கமல்ஹாசனின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவர் உஷாராணி.

உஷாராணி
உஷாராணி

‘திருமலை தென்குமரி’ படத்தில் உஷாராணியுடன் நடித்தவரும், அவரது நண்பருமான நடிகை எஸ்.என்.பார்வதியிடம் பேசினேன்.

‘’அந்தப் பட அனுபவம் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். ஷூட்டிங்கையே ஒரு டூர் மாதிரி கோயில், குளமா நடத்திட்டுப் போனாங்க. முப்பது நாள் நடந்துச்சுனு நினைக்கேன். திருப்பதி, திருத்தணி, சாமுண்டீஸ்வரி கோயில், கன்னியாகுமரின்னு வரிசையா ஷூட்டிங் நடந்துச்சு. நான் திருப்பதி போனது அதுதான் முதல் முறை.

நாகராஜண்ணன் டைரக்டர் (ஏ.பி.நாகராஜன்). சிவக்குமார் அண்ணன், மனோரமா ஆச்சி, சுருளியண்ணன், எனக்கு ஜோடியா வீராச்சாமி அண்ணன். மத்தவங்க பேர்லாம் எனக்கு ஞாபகத்துல வரமாட்டேங்குது. ஐம்பது வருஷம் ஆயிடுச்சு இல்லையா’’ என்றவர் உஷாராணி பற்றிப் பேசினார்.

''அங்கதான் எனக்கு உஷா அறிமுகம். வாய் நிறைய என்னை அக்கான்னு கூப்பிட்டா. சிரிச்ச முகம். எனக்கு அந்த முப்பது நாள் பழக்கம்தான். ஷூட்டிங் முடிஞ்சு போனப்ப அப்படிக் கட்டிப்புடிச்சு அழுதுகிட்டோம். அதுக்குப் பிறகு சேர்ந்து நடிக்கவும் இல்ல, நாங்க ரெண்டு பேரும் சந்திக்கவும் இல்லை.

எஸ்.என்.பார்வதி
எஸ்.என்.பார்வதி

கேரளாவுல பெரிய டைரக்டரைக் கல்யாணம் செய்துகிட்டதா கேள்விப்பட்டேன். எங்களுக்குள் சுத்தமா தொடர்பே இல்லாமப் போயிடுச்சு.

வருஷங்கள் ஓடுச்சு. சினிமா ரிட்டயர்மென்ட் கொடுத்துட, கணவரும் இறந்துட, பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, ஒரே மகனோட சென்னையில் வந்து செட்டிலானது அந்தக் குடும்பம். அங்கதான் விதி எங்களை மறுபடி சேர்த்து வச்சது.

நான் இப்ப நடிச்சிட்டிருக்கிற சீரியலின் ஷூட்டிங் அவங்க வீடு இருக்கற ஏரியாவுல நடந்திட்டு இருந்தது. ஒரு கோயில்ல வச்சு ஒரு சீன். அந்தக் கோயிலுக்குப் பையனோடு சாமி கும்பிட வந்திருந்தா உஷா. சினிமா ஓய்வு தந்துட்டாலும், ஒரு ஷூட்டிங் நடக்குதுன்னா, ஒரு முன்னாள் நடிகை ஒரு எட்டு அதைப் பார்க்காம எப்படிக் கிளம்புவா?

விஜய் - வெற்றிமாறன் கூட்டணி எப்போது? விகடன் வாசகர்களின் கேள்விக்கு பதில்!  #VijayWithVetrimaaran

அப்படித்தான் அந்த ஸ்பாட்டுக்கு வந்தா. கிட்டத்தட்ட 40 வருஷம் கழிச்சுப் பார்த்ததால எனக்குத்தான் அவளைச் சரியா அடையாளம் தெரியலை. ஆனா அவ ‘பார்வதியக்கா’ன்னு அதே சிரிச்ச முகத்தோட வந்துட்டா. ரெண்டு நிமிஷம் கழிச்சேதான் எனக்கு அவளைக் கண்டுபிடிக்க முடிஞ்சது.

பிரேக் டைம்ல அடுத்த தெருவுல இருந்த அவளோட வீட்டுக்கும் போயிட்டு வந்தேன். வெறும் முப்பது நாள் பழக்கத்தை 40 வருஷம் கழிச்சும் மறக்காம இருந்தா. அடுத்த சில மாசங்கள்ல அவளோட மகனுக்குக் கல்யாணம் நடந்தது.

மகன் மருமகளுடன் உஷாராணி
மகன் மருமகளுடன் உஷாராணி

’என் கல்யாணத்துக்குத்தான் கூப்பிட முடியலை; பையன் கல்யாணத்துக்குக் கூப்பிடுறேன்’னு கூப்பிட்டா. போயிட்டு வந்தேன்.

நல்லாதான் இருந்தா. இப்படி இந்தக் கொரோனா காலத்துல திடீர்னு போயிடுவானு எதிர்பார்க்கலை. கடைசியில என்னால அவ முகத்தைக் கூடப் பார்க்க முடியல’’ என்றார் பார்வதி.

உஷாராணியின் மகன் விஷ்ணுவிடம் பேசிய போது, ''கமல் சார், மோகன்லால் சார்லாம் போன் பண்ணி விசாரிச்சாங்க. தென்னிந்திய நடிகர் சங்கத்துல இருந்தும் கேரளத்துல ’அம்மா’வுல இருந்தும் பேசினதுடன், எந்த உதவின்னாலும் கேளுங்கன்னு ஆறுதல் சொன்னாங்க’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு