Published:Updated:

கமல் 60

கமல்
பிரீமியம் ஸ்டோரி
News
கமல்

எனக்குக் கிடைத்த நண்பர்களும், ரசிகர்களும் என்னை இவ்வளவு தூரம் நடத்திக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

60 ஆண்டுகளுக்கு முன், தமிழ்த் திரையுலகில் தன் பாதம் பதித்து, பின் தனக்கெனத் தனிப் பாதை அமைத்து, பழைய பாதைகளில் வழிப்போக்கனாய், புதிய பாதை களில் வழிகாட்டியாய், கலையும் கலை சார்ந்த பகுதியின் கலங்கரை விளக்கமுமாய் இன்றும் ஒளிவீசி வரவேற்றுக்கொண்டி ருக்கும் கமல்ஹாசனின் அறுபது ஆண்டுக்காலத் திரையுலகப் பயணத்தைக் கோலாகல விழா வாகக் கொண்டாடியது `உங்கள் நான்.’

  • ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு என மூன்று தலைமுறை நடிகர்களும், எஸ்.பி.முத்துராமன், மணிரத்னம், ரமேஷ் சிப்பி, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், அமீர், பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் என மூன்று தலைமுறை இயக்குநர்களும், ராதா, அம்பிகா, ஸ்ரீப்ரியா, மனிஷா கொய்ராலா, தமன்னா, ஆண்ட்ரியா என மூன்று தலைமுறை நடிகைகளும், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், ரஹ்மான், வடிவேலு, நாசர் எனத் தமிழின் பெருமைமிகு திரைக்கலைஞர்களும் ஹாசன் குடும்பத்தினரும் ரசிகர்களும் தொண்டர்களும் இணைந்து `உங்களால் நான்’ நிகழ்வை மனநிறைவுடன் கொண்டாடி, கமலுக்குச் சமர்ப்பணம் செய்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
  • கலைஞானியின் விழாவை இசையோடு தொடங்கிவைத்தார் இசைஞானி. “ஜனனி ஜனனி ஜெகம் நீ, அகம் நீ...” எனும் இறைவாழ்த்துப் பாடலை இளையராஜாவின் குரல் பாடத்தொடங்கியதும் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த மனங்கள் அமைதியாகின. பாடலைப் பாதி சரணத்தில் முடித்துவிட்டு, ‘கதை கேளு கதை கேளு...’ என `மைக்கேல் மதன காமராஜன்’ பாடலை எடுத்து விட்டபோது, அமைதி கலைந்து மீண்டும் ஆர்ப்பரிப்பு. ‘கதை கேளு கதை கேளு கமலோட கதை கேளு’ எனப் பாடலின் நிஜ வரிகளை மாற்றி, கமலின் நிஜக் கதையைப் புகுத்தியிருந்தார். கமலின் சஷ்டியப்த பூர்த்திக்காக, இளையராஜா எழுதிய பிரத்யேக வரிகள்.

கமல், ரஜினிகாந்த், ரஹ்மான், இளையராஜா, வடிவேலு
கமல், ரஜினிகாந்த், ரஹ்மான், இளையராஜா, வடிவேலு
  • விழாவின் நாயகன் கமல் மேடைக்கு வந்தார், `அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...’ பாடலைப் பாடி, மீண்டும் ஒருமுறை இன்னிங்ஸைத் தொடங்கினார். அதன்பிறகு, இளையராஜாவின் இசையில் அவர் முதல்முறையாகப் பாடிய `பன்னீர் புஷ்பங்களே’ பாடலைப் பாடினார். அதன் ரெக்கார்டிங்கின்போது நடந்த சில சுவாரஸ்யங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர். `கண்மணி அன்போடு காதலன்...’ பாடலின் போதுதான் கச்சேரியே களைகட்டியது. பாடலின் இடையில் குணா சிரிப்பதும், பேசுவதுமாக வரும் இடங்களை அப்படியே கமல் மீண்டும் மேடையில் நிகழ்த்திக்காட்ட, சினிமா நட்சத்திரங்களே நாஸ்டால ஜியில் திளைத்துப்போனார்கள். `மனிதர் உணர்ந்துகொள்ள... இது மனிதக் காதல் அல்ல, அதையும் தாண்டிப் புனிதமானது” எனக் கமல் சொல்லிமுடித்த கணம், ‘புனித மானது... புனிதமானது...’ என அரங்கமே எக்கோ எஃபெக்டில் பாடி மகிழ்ந்தது. அதேசமயம் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து கமலுக்கு சால்வை போட்டுவிட்டு இறங்கிச் சென்றார் இசைப்புயல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  • இசைக்கச்சேரி நிறைவடைந்ததும், சக திரையுலகக் கலைஞர்களின் வாழ்த்துரைகள் தொடங்கின. அதில் பெரும்பாலான வாழ்த்துரைகள் கமலுக்கான நன்றியுரைகளாக மாறியதில் நிற்கிறது அறுபதாண்டுக்கால வரலாறு. `ஆளவந்தான்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில் தொடங்கி, கமல்மீதுள்ள ஈர்ப்பினால் அவரைப் போலவே பரதநாட்டியம் கற்றுக்கொண்டது வரை பல கதைகளைப் பகிர்ந்துகொண்டார் ஜெயம் ரவி. “வனிதாமணி...” பாடலில் வரும் “கண்ணே... தொட்டுக்கவா...” வரிகளைப் பாடிக்காட்டினார் கார்த்தி.

கமல், விஜய் சேதுபதி
கமல், விஜய் சேதுபதி
  • “அறுபது ஆண்டுகளாக ஒருவர் சினிமாவில் நிற்கிறார் என யோசிக்கும்போதே பிரமிப்பாக இருக்கிறது, கமல் சாருடன் ஒரு படம் நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரு சான்ஸ் கொடுங்கள் சார், ப்ளீஸ்” என்ற விஜய்சேதுபதி, தொடர்ந்து, “சினிமாவைப் பொறுத்தமட்டில் அவர் தன் ரசிகனை ஒருதுளிகூட ஏமாற்றமாட்டார். அரசியலிலும் அதேபோல் ஏமாற்றமாட்டாரென நம்புகிறேன்” என்றதும் ம.நீ.ம கொடிகளை அசைத்துத் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

  • கமலின் திரை வில்லன்கள் சத்யராஜ், நாசர் மற்றும் பசுபதி மூவரும் ஒன்றாக மேடையேறினர். கமலோடு தாங்கள் சினிமாவில் பயணித்ததை ரசனையாக விவரித்தார்கள். “ரஜினி, கமல் இருவரும் சேர்ந்தால், தமிழகத்திற்கு நல்லது, தமிழர்களுக்கு நல்லது. ஆண்டவர்கள் புதிதாக வருபவர்களுக்கு வழிவிட வேண்டும். நீங்கள் வந்து ஒரு நல்லாட்சியைத் தந்து, ஊழலற்ற, லஞ்சமில்லாத, அடக்குமுறை இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு, நீங்கள் போதுமென்று நினைக்கும் பொழுது, உங்கள் தம்பிமார்களுக்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்” என சினிமா மேடையை அரசியல் மேடையாக மாற்றினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

  • “கால் பதிக்குற இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கிற திரையுலகத்துல, எப்படி அறுபது வருஷம் டிராவல் பண்ணுனாருன்னே தெரியலை. எனக்கே கன்னிவெடி வைக்கும்போது இவருக்கெல்லாம் எத்தனை ஏவுகணையை விட்ருப்பாய்ங்க, எத்தனை பாம் போட்ருப்பாய்ங்க!” என டிரேட் மார்க் ஸ்டைலில் ஆரம்பித்தார் வடிவேலு. அவர் சொன்ன `சிங்காரவேலன்’ மற்றும் `தேவர்மகன்’ அனுபவங்களைக் கேட்டு, வந்திருந்தோர் அனைவருக்கும் வயிற்று வலி! சிரிப்பால் வந்த வயிற்று வலி..!

  • இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், கமல் மற்றும் ரஜினி இருவருடன் மேடையில் நின்று அவர்களுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ‘கமல் ஏன் இந்திய சினிமாவின் முன்னோடி’ எனத் தமிழ் சினிமாவுலகில் கமல் புகுத்திய தொழில்நுட்பப் புதுமைகள் குறித்துப் பேசினார் கே.எஸ்.ரவிக்குமார். “பெல்பாட்டம் ஃபேன்ட் முதல் கூலர்ஸ் வரை நாங்கள் அணிந்த ஒவ்வொரு விஷயத்துக்கும் கமல் சார்தான் காரணம். நான் முதலில் கமலின் ரசிகன்” என்றார் பிரமாண்டங்களின் இயக்குநர் ஷங்கர்.

கமல்
கமல்
  • “பத்து வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தைப் பார்த்து பிரமித்துப்போனேன். அன்று எப்படி கமலைப் பார்த்து பிரமித்தேனோ, இன்றும் அப்படியே பிரமித்து நிற்கிறேன். கமல் என் கலையுலக அண்ணா” எனத் தொடங்கினார் ரஜினி. “திரையில் வந்த அந்தக் குழந்தையும், அதைப் பார்த்த இந்தக் குழந்தையும் ஒன்றாகப் படம் நடித்து, பல வருடங்கள் பயணித்ததெல்லாம் அற்புதம், அதிசயம். இப்படி ஓர் அதிசயம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நிகழும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சர் ஆவார் எனக் கனவில்கூட நினைத்திருக்கமாட்டார். அவருடைய ஆட்சி, விரைவில் கவிழ்ந்துவிடும் எனச் சொல்லாத ஆள் இல்லை. அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. நேற்றும் அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம் அற்புதம் நடந்தது. நாளைக்கும் நடக்கும்” எனச் சிரிக்க, ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது. “கமலுக்கும் எனக்குமான நட்பு என்றைக்கும் மாறாது. எங்கள் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் அன்பாக இருங்கள். கமல் பேசுவது புரியவில்லை என்கிறார்கள் சிலர். தூங்குபவர்களை எழுப்பிவிடலாம், தூங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ரஜினிக்கே புரிகிறது. உங்களுக்குப் புரியாதா?” எனத் தன் ஸ்டைலிலேயே முடித்தார்.

  • “எனக்குக் கிடைத்த நண்பர்களும், ரசிகர்களும் என்னை இவ்வளவு தூரம் நடத்திக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 50வது ஆண்டு நிகழ்வில் என் பணிவையும், நன்றியையும் தந்தேன். இம்முறை என்னையே உங்களுக்காகத் தருகிறேன். நான், ‘உங்கள் நான்’ எனச் சொல்வதன் முழு அர்த்தம் உங்களுக்கு இன்று புரிந்திருக்கும். இங்கு நன்றி சொல்வது கலையுலகத்துக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கேதான். இனி நான் நடிக்கும் படங்கள், நான் செல்லும் பயணங்களுக்கு ஊன்றுகோலாக இருக்குமென நம்புகிறேன். அந்தப் பணிகளை விரைவில் முடித்து உங்களுடன் கலக்க ஆவலாய் இருக்கிறேன்” என நன்றி நவின்றார் கமல்.