Published:Updated:

விஜய்யின் எஸ்.எம்.எஸ்; 300 மிஸ்டு கால்; ஷவுட்-அவுட்! - தேசிய விருதுக்கு கீர்த்தி சுரேஷின் ரியாக்‌ஷன்

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

கீர்த்திக்கு வாழ்த்து எஸ்.எம்.எஸ் அனுப்பிய விஜய்... 300 மிஸ்டு கால்!

சாவித்ரியாகவே நம் கண்முன் தோன்றி அசத்திய கீர்த்தி சுரேஷ், `மகாநடி (நடிகையர் திலகம்)' படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார். குவிந்த பாராட்டுகளில் மகுடமாக, சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கீர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

இந்த விருது செய்தி அறிவிக்கப்பட்டதுமே, சமூக வலைதளங்களில் மட்டுமல்ல, நேரிலும் தொலைபேசி அழைப்புகளிலும் குவிந்த வாழ்த்து மழையால், திக்குமுக்காடிப்போனார் கீர்த்தி. அடுத்தநாள் நெகிழ்ச்சியுடன் படப்பிடிப்புக்குச் சென்றிருக்கிறார். அந்தச் சந்தோஷ தருணங்களைப் பகிர்கிறார், கீர்த்தி சுரேஷின் அம்மாவும் நடிகையுமான மேனகா சுரேஷ்.

"கீர்த்தி இப்போ பல மொழிகளிலும் பிஸியா நடிக்கிறா. அதனால, எங்க வீட்டுக்கே எப்பயாச்சும்தான் வருவா. ஸ்பெயின்ல இருந்து, மூணு நாள் ஓய்வுக்காகக் கேரளாவிலுள்ள எங்க வீட்டுக்கு கடந்த 7-ம் தேதி இரவு வந்தா. சொந்தக்காரங்க, நண்பர்களையெல்லாம் சந்திச்சா. எங்களோடு மனம் விட்டுப் பேசினா. என் கணவரும் நானும் சினிமா துறையில பல வருஷமா இருக்கிறோம். ஒவ்வொரு வருஷமும் தேசிய விருது அறிவிக்கப்படும்போது யாருக்கெல்லாம் விருது கிடைக்குதுனு ஆவலாகப் பார்ப்போம். 

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

கடந்த 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை தேசிய விருது அறிவிக்கப்படுதுனு அன்னிக்கு காலையிலேயே எங்களுக்குத் தகவல் கிடைச்சுடுச்சு. நானும் என் கணவரும் வெளிநிகழ்ச்சிகளை முடிச்சுட்டு, அவசரமாக மதியம் 3 மணிக்கு வீட்டுக்கு வந்திட்டோம். நான், என் கணவர், கீர்த்தி, என் அம்மானு நால்வரும் ஒண்ணா உட்கார்ந்து தேசிய விருது அறிவிக்கிப்படுவதைச் செய்தியில பார்த்துட்டிருந்தோம். என் பெரிய பொண்ணு ரேவதி, பெங்களூரில் இருந்தபடியே வீடியோ காலில் எங்க ரியாக்‌ஷனை பார்த்துகிட்டிருந்தா.

ஒவ்வொரு மொழி சினிமாவுக்கும் எத்தனை விருது கிடைக்குதுனு ஆவலா பார்த்துக்கிட்டு இருந்தோம். சிறந்தத் தெலுங்கு மொழிப் படமாகத் தேர்வான `மகாநடி'க்கு, ஆடை வடிவமைப்பாளருக்கான விருதும் கிடைச்சுது. `சிறந்த நடிகை யார்?'னு நாங்க நால்வரும் ஆவலோடு பார்த்துகிட்டே இருந்தோம். கீர்த்தி சிறந்த நடிகையா அறிவிக்கப்பட்டதும், கீர்த்தி உட்பட நாங்க எல்லோரும் பயங்கரமா சத்தம்போட்டோம். கீர்த்தியைக் கட்டிப்பிடிச்சு வாழ்த்தினோம்.

குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ்
குடும்பத்தினருடன் கீர்த்தி சுரேஷ்

`இந்த வயசுல இவ்வளவு நேர்த்தியா நடிச்சிருக்கார்'னு விருதை அறிவிச்ச விருது கமிட்டி தலைவர் சொல்லிட்டிருந்தார். அதைக் கூர்ந்து கவனிச்சுகிட்டிருக்கும்போதே, நிறைய பிரபலங்கள்கிட்ட இருந்து போன் வர ஆரம்பிச்சது. நிறைய பத்திரிகையாளர்கள் எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க. அதனால, உடனடியா பால் பாயசம் செய்து வந்திருந்த எல்லா பத்திரிகையாளர்களுக்கும் கொடுத்தோம். அரசியல்வாதிகள், அதிகாரிகள், முக்கிய பிரபலங்கள்னு பலரும் நேர்ல வந்து கீர்த்தியை வாழ்த்தினாங்க.

விடியற்காலை 3.30 மணி வரை, எங்க மூவருக்கும் மாறி மாறி பலரும் போன் பண்ணிட்டே இருந்தாங்க. கீர்த்தியின் சார்பில், நானும் என் கணவரும் எங்க போன்ல பேசினோம். தவிர, பலரும் கீர்த்திகிட்ட வாழ்த்துச் சொல்ல ஆசைப்பட, அவகிட்ட போன் கொடுத்துட்டே இருந்தோம். இப்படி மூணு பேருடைய போனிலும் கீர்த்தி இடைவிடாம பேசிட்டே இருந்தாள்" - விடியற்காலை வரையும் கீர்த்திக்கு வாழ்த்துகள் வந்துகொண்டே இருந்துள்ளன.

`நீ கவலைப்படாதே மா. நான் சினிமாவில் நடிச்சு, தேசிய விருது வாங்கி உனக்கு டெடிகேட் பண்றேன்.'
கீர்த்தி சுரேஷ்

"வித்யா பாலன், விக்ரம், கார்த்திக், சிரஞ்சீவி, மோகன்லால், விஜய சாமுண்டீஸ்வரி, திலீப், நானி, சுரேஷ் கோபி, சாரதா, சரோஜா தேவி, சேது மாதவன், `மகாநடி' டீம்னு எக்கச்சக்க பிரபலங்கள் போன்ல வாழ்த்தினாங்க. நடிகர் விஜய் வாழ்த்துச் சொல்லி, எஸ்.எம்.எஸ் அனுப்பியதா கீர்த்தி சொன்னா. வீடு முழுக்க பொக்கே, ஸ்வீட் பாக்ஸ் குவியலா இருந்துச்சு. இனி சமைச்சு சாப்பிடுறது சிரமம்னு, இரவில் நாங்க ஹோட்டலுக்குப் போனோம். சாப்பிடக்கூட முடியாத அளவுக்கு போன் அழைப்புகள் வந்துட்டே இருந்ததால, உடனே வீட்டுக்கு வந்திட்டோம்.

காலையில 4 மணிக்கு தூங்கப்போகும் முன்பு, `300 மிஸ்டு கால் இருக்குமா. தூங்கி எழுந்துதான் எல்லோர்கிட்டயும் பேசணும்'னு கீர்த்தி சொன்னா. என் பொண்ணுங்க எப்போ வீட்டுக்கு வந்துட்டுப் போனாலும் அவங்களுக்குத் திருஷ்டி சுத்திப்போடுவேன். அடுத்தநாள் சனிக்கிழமை சென்னை போயிட்டு, ஹைதராபாத் கிளம்பத் தயாரானாள் கீர்த்தி. அவளுக்குச் சுத்திப்போட்டு வழியனுப்பி வெச்சேன். 

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

நான் ஹீரோயினா நடிச்சிட்டிருந்தப்போ, `ஓப்போல்'ங்கிற மலையாளப் படத்துக்கு எனக்குத் தேசிய விருது கிடைக்கப்போகுதுனு தகவல் வெளியாச்சு. ஆனா, கடைசி நேரத்துல வேற ஒரு நடிகைக்கு அந்த விருது அறிவிக்கப்பட்டுச்சு. அதனால எனக்குக் கிடைச்ச ஏமாற்றத்தைப் பத்தி, அவ்வப்போது வீட்டில் சொல்லுவேன். `நீ கவலைப்படாதே மா. நான் சினிமாவில் நடிச்சு, தேசிய விருது வாங்கி உனக்கு டெடிகேட் பண்றேன்'னு கீர்த்தி அடிக்கடி சொல்லுவா. எனக்கு நடந்த ஏமாற்றம்போல, என் பொண்ணுக்கும் நடந்திடக் கூடாதுனு வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டிருக்கிற மாதிரி ஃபீல் பண்ணினேன்.

நல்ல வேளை, என் குழந்தைக்கு விருது கிடைச்சிடுச்சு. விருது அறிவிப்பு வெளியானதும், `உனக்கு இந்த விருதை டெடிகேட் பண்றேன் மா'னு கீர்த்தி சொன்னா. நெகிழ்ந்துபோயிட்டேன். இப்போ, அம்மாவா நான் அடையும் சந்தோஷத்துக்கு அளவேயில்லை.  

அம்மாவுடன் கீர்த்தி சுரேஷ்
அம்மாவுடன் கீர்த்தி சுரேஷ்

கீர்த்திக்குக் கிடைக்கப்போகும் தேசிய விருதை, சாவித்திரி அம்மாவுக்கு எங்க குடும்பத்தின் சார்பில் சமர்ப்பணம் செய்கிறோம். எங்க குடும்பம் உள்ள வரையில், சாவித்ரி அம்மாவின் நினைவுகளுடன் நன்றிக் கடன் பட்டிருப்போம்" என்கிறார் மேனகா, நெகிழ்ச்சியாக.

அடுத்த கட்டுரைக்கு