Published:Updated:

“ஒரேமாதிரி பாத்திரங்கள் வேண்டாம்!”

ஆண்டனி
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டனி

ஒருநாள் டைரக்டர் பிராங்க்ளின் பேசினாரு. `படத்துல ஒரு ரோல் இருக்கு, நடிக்கிறீங்களா’ன்னு கேட்டுட்டு, நேர்ல வரச் சொன்னாரு. ஹரியோட அண்ணனா நடிக்கத்தான் கூப்பிட்டாரு

“ஒரேமாதிரி பாத்திரங்கள் வேண்டாம்!”

ஒருநாள் டைரக்டர் பிராங்க்ளின் பேசினாரு. `படத்துல ஒரு ரோல் இருக்கு, நடிக்கிறீங்களா’ன்னு கேட்டுட்டு, நேர்ல வரச் சொன்னாரு. ஹரியோட அண்ணனா நடிக்கத்தான் கூப்பிட்டாரு

Published:Updated:
ஆண்டனி
பிரீமியம் ஸ்டோரி
ஆண்டனி

"சினிமாவுல முகம் தெரியறதைவிட, முகம் தெரிஞ்சப்புறம் ஒரு போராட்டம் இருக்கும் பிரதர். அதுவும் ரொம்ப கஷ்டமானதுதான். கொண்டாட்டமா இருக்கணும். அதேநேரம் உழைக்கணும்” தன்னம்பிக்கையாகப் புன்னகைக்கிறார் `மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி. பல வருடப் போராட்டத்துக்குப் பிறகு, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏழைத் தொழிலாளி ரங்கசாமியாகக் கவனம் ஈர்த்தவர். தற்போது `ரைட்டர்’ படத்தில் ‘பழைய திருடன்’ ராஜனாக முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். சிஸ்டத்தைப் பகடி செய்து இவர் பேசும் காட்சிகளுக்குத் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. அதே கலகலப்போடு நம்முடன் உரையாடினார்.

“ `மேற்குத் தொடர்ச்சி மலை’ நல்ல வரவேற்பு கிடைச்ச படம். உங்க கதாபாத்திரமும் நல்லா பேசப்பட்டது. அதன் பிறகு ஏன் இவ்வளவு நீண்ட இடைவெளி?”

“மேற்குத் தொடர்ச்சி மலை படத்துல என்னோட சாயல் வேற. பலருக்கும் இவன் ஒரு கேரக்டரை உள்வாங்கி நடிக்குற அளவுக்கான திறமை இருக்கிறவனா என்னும் சந்தேகம் இருந்திருக்கலாம். அதற்குப் பிறகு சிலர் நடிக்கக் கூப்பிட்டாங்க. ஆனா அந்த டீம் சரியான டீமா இல்ல, அல்லது சில டீமோட கதைகள் நல்ல கதையா அமையல. மேற்குத் தொடர்ச்சி மலை மாதிரியான படத்துல நடிச்சதால பொலிட்டிக்கலாகவே நிறைய மெச்சூர்டு ஆயிருந்தேன். இடையில கொரோனா வேற. நடிக்கணுமே அப்படிங்கிறதுக்காக ஏதாவது ஒரு கதாபாத்திரத்துல நடிக்க வேணாம்னு தோணுச்சு. காத்திருந்ததுக்கு இப்போ ரைட்டர் பட ராஜா கேரக்டர் கிடைச்சிருக்கு.”

“ஒரேமாதிரி பாத்திரங்கள் வேண்டாம்!”

“ ‘ரைட்டர்’ பட ராஜா கேரக்டர் எப்படிக் கிடைச்சது?”

“ஒருநாள் டைரக்டர் பிராங்க்ளின் பேசினாரு. `படத்துல ஒரு ரோல் இருக்கு, நடிக்கிறீங்களா’ன்னு கேட்டுட்டு, நேர்ல வரச் சொன்னாரு. ஹரியோட அண்ணனா நடிக்கத்தான் கூப்பிட்டாரு. அது சுப்ரமணியம் சிவா சார் நடிச்ச கேரக்டர். அதைப் பண்ணினா அது மேற்குத் தொடர்ச்சி மலை ரங்கசாமி கேரக்டர் சாயல்ல இருக்கும்னு தோணுச்சு. ஏற்கெனவே பலர் என்னைப் பாக்குறப்போ ஏதோ நிவாரணம் கொடுக்குற மாதிரியே பாக்குறாங்க. ஆனா, நான் சந்தோஷமாதான் இருக்கேன்கிறதை எல்லாருக்கும் சொல்லிக்கிட்டே இருக்கமுடியாது. பலர் வந்து சொன்ன கேரக்டரும் அதே சாயலில் அமைஞ்ச கேரக்டர்தான். அதிலிருந்து விலகி ஒரு கேரக்டர் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். ரைட்டர் படத்தோட கதையைப் படிச்சதும், ‘தலைவா, நான் அந்த ராஜா கேரக்டர் பண்றேன்’னு டைரக்டர்கிட்ட கேட்டேன். `அது கொஞ்ச நேரம் வர்ற கேரக்டர், ஹரியோட அண்ணன் கேரக்டர் படம் முழுக்க வரும்’னு சொன்னாரு. நான் பிடிவாதமா கேட்டதனால சரின்னு சொல்லிட்டாரு. சமுத்திரக்கனி அண்ணன் பல சிரமங்களைத் தாண்டி ஜெயிச்சவர். அவர்கூட நடிச்சது ரொம்ப நல்ல அனுபவம். சினிமாவில் எப்படியெல்லாம் இருக்கணும்னு சில விஷயங்களை அவர் அனுபவத்தின் மூலமா சொன்னார். ரைட்டர் படத்துல நடிச்சது ரொம்ப நிறைவா இருந்தது. இப்படி ஒரு கேரக்டரும் என்னால நல்லா பண்ண முடியுங்கிறத நான் நம்பினேன். இன்னைக்கு மக்களும் அதை ஏத்துக்கிட்டுப் பாராட்டுறது கூடுதல் சந்தோஷம்.”

“ஆசை, கனவு, வாய்ப்புன்னு அலையுறப்போ பொருளாதார ரீதியா தன்னிறைவு அடைய முடியாத சூழல் பலருக்கும் ஏற்படுதே?’’

“ஒரு படத்துல கதை நாயகனா நடிச்சதும் நம்மள வேற மாதிரி பார்ப்பாங்க. நிறைய பேர் ‘ஹீரோ வர்றாருடா’ன்னு சொல்லுவாங்க. ஆனா நாம ரொம்ப கவனமா, தெளிவா இருக்கணும். காய்கறிக் கடையில 50 ரூபாய்க்கு பேரம் பேசினாக்கூட, ‘என்ன சார், படத்துல நடிக்குறீங்க, நீங்கல்லாம் பேரம் பேசலாமா’ன்னு கேப்பாங்க. ஆனா நமக்குத் தெரியும்ல நம்ம சூழல். நீங்க படத்துல நடிச்சு வெளியில் தெரிய ஆரம்பிச்சுட்டா சில விஷயங்களில் கவனமா இருக்கணும். எப்பவும் போல இருக்கணும். இல்லாட்டி சிக்கல்தான். அதே சமயம் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுடவும் கூடாது. உடனே `வாழ்வைத் தொலைத்த கலைஞர்கள், பாவம் கஷ்டப்படுறாங்க, உதவுங்க’ன்னு யாராவது நம்மளைப் பத்திப் பதிவு பண்ணுவாங்க. இந்த சாயல்ல சிலர் நேர்காணலெல்லாம் எடுக்குறேன்னாங்க. `நான் நல்லாதாங்க இருக்கேன். என்னை ஏன் இப்படிக் கேக்குறீங்க’ன்னு சொல்லிட்டேன். நடிக்க வரும்போது அசைக்க முடியாத தன்னம்பிக்கையோடு வருவோம். மேற்குத் தொடர்ச்சி மலை மாதிரியான படம் நடிச்சதும் ஒரு கலைஞனா சினிமாவுக்காக ஏதாவது பண்ணணும்னு தோணும். ஆனால், அப்படிலாம் ஒண்ணு கிடையாது. சினிமாதான் நமக்கானதைக் கொடுக்கும். அதைச் சரியா பயன்படுத்திக் கணும். அதுக்காக பணம் மட்டுமே லட்சியம்னும் இருக்கமுடியாது. பணம் மட்டுமே சம்பாதிக்கணும்னா இங்க சம்பாதிக்கலாம். அதற்கான வாய்ப்பும் வந்துச்சு. பணமும் தொழில் நேர்த்தியும் சரியா அமையுற புள்ளியைக் கண்டடையணும். அதுதான் நிலைக்கும்.”

“அடுத்து என்ன படம் பண்ணிட்டிருக்கிங்க?”

“ ஒரு பெரிய இயக்குநரோட தயாரிப்புல வெப் சீரிஸ்ல கதை நாயகனா நடிக்கிறேன். நல்ல இயக்குநர். பெரிய டீம். என்னோட கரியர்ல ரொம்ப முக்கியமான பங்களிப்பா இருக்கும். இன்னும் சில முக்கிய நடிகர்களோட படத்திலும் நல்ல கதாபாத்திரத்துல நடிக்க பேச்சுவார்த்தைகள் போயிட்டு இருக்கு. நிச்சயமா இந்த வருஷம் எனக்கு ரொம்ப நல்ல தொடக்கமா இருக்கும். நானே நம்ப முடியாத பல ஆச்சர்யங்கள் நடக்கறதுக்கான அறிகுறிகள் தெளிவா இருக்கு.”