Published:Updated:

``விஜய்-யின் மனம் எனக்குத் தெரியும்... `மாஸ்டர்' நிச்சயம் OTT-யில் ரிலீஸ் ஆகாது!'' - `மெர்சல்' முரளி

விஜய்
விஜய்

'' 'மெர்சல்' ஒரு தோல்விப் படம் கிடையாது. அப்போது, எனக்கு சூழ்நிலைகள் சரியாக இல்லை, அவ்வளவுதான்.''

தமிழ் சினிமா உலகில் நீண்ட பாரம்பர்யம் கொண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தேனான்டாள் பிக்சர்ஸ். இந்நிறுவனத்தைத் தொடங்கி பல படங்கள் தயாரித்து, விநியோகித்து புகழ்பெற்றவர் ராமநாராயணன். இவரது மகன்தான் முரளி. விஜய்-யின் 'மெர்சல்' படத் தயாரிப்பாளர்.

ஓ.டி.டி சர்ச்சை, 'மெர்சல்' பஞ்சாயத்து, அடுத்த விஜய் படம் எனப் பல விஷயங்கள் பற்றி அவரிடம் பேசினோம்.

அமேசானில் நேரடி ரிலீஸ்... பஞ்சாயத்தாகும் `பொன்மகள் வந்தாள்'... கோலிவுட்டில் நடப்பது என்ன?

''தயாரிப்பாளர்கள் வெர்சஸ் தியேட்டர் பிரச்னையை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

vijay
vijay

''இது சுமுகமாகப் பேசி முடிக்கவேண்டிய பிரச்னை. ஓ.டி.டி ரிலீஸைப் பொறுத்தவரை என்னுடைய கருத்து, ஒரு பெரிய படம் விற்கும்போது சிறிய படங்கள் ஐந்தையும் சேர்த்து ஓ.டி.டி நிறுவனங்கள் வாங்க வேண்டும் என ஒப்பந்தம் போடவேண்டும். அப்போதுதான் சிறிய படங்கள் விற்கும். இல்லையென்றால் சிறிய படங்களை ஓ.டி.டி நிறுவனங்கள் வாங்காது. அவர்களின் டார்கெட் எல்லாம் பெரிய ஹீரோ படங்கள்தான். அதனால் ஓ.டி.டி-யின் வருகை சின்னப் படங்களை வாழவைத்துவிடும் என்பது உண்மையல்ல. கிட்டத்தட்ட 300 சின்ன பட்ஜெட் படங்கள் விற்காமலேயே முடங்கி இருக்கின்றன. இந்த நேரத்தைப் பயன்படுத்தி, அவற்றுக்கெல்லாம் ஒரு வழி செய்து ரிலீஸ் செய்ய வேண்டும்.''

'' 'ராமநாராயணன், சின்ன பட்ஜெட் படங்கள் எடுத்தவர். ஆனால் அவர் மகன், தேவையில்லாமல் பெரிய பட்ஜெட் படம் எடுத்து மாட்டிக்கொண்டார்' என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

'' முதலில் இங்கே நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, 'மெர்சல்' ஒரு தோல்விப் படம் கிடையாது. அப்போது எனக்கு சூழ்நிலைகள் சரியாக இல்லை, அவ்வளவுதான். அப்பாவுடன் ஒப்பிட்டுப்பேசினால், காலத்துக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்யவேண்டியது கட்டாயம். அப்போது எப்படி இருந்தோமோ இப்போதும் அப்படியே இருக்க முடியாது. அப்படிப்பட்ட படங்களையே பண்ண முடியாது. காலத்துக்கு ஏற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான்.''

Murali, Vijay
Murali, Vijay

'' 'மெர்சல்' படம் ஒரு தயாரிப்பாளராக உங்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தது?''

''நிறையவே கற்றுக்கொடுத்தது. ஒரு தயாரிப்பாளர் எவ்வளவு கன்ட்ரோலாக இருக்க வேண்டும், அவர் எவ்வளவு கன்ட்ரோல் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக்கொடுத்தது. தயாரிப்பாளரின் கன்ட்ரோலை மீறிப்போனால் என்ன ஆகும் என்பதைப் புரியவைத்தது. ஒரு படத்தில் இதைச் செய்யலாம், இதை செய்யக்கூடாது என நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். என் வாழ்க்கையில் 'மெர்சல்' அனுபவம் எப்போதுமே மறக்காது.''

''மீண்டும் விஜய் உங்களுக்கு இன்னொரு படம் தயாரிக்கும் வாய்ப்பைத் தருகிறார் என செய்திகள் வந்ததே?''

''விஜய் சார் என்கூட டச்லதான் இருக்கார். தொடர்ந்து பேசுகின்றார். 10 நாளுக்கு முன்புகூட பேசினார். அடுத்து படம் பண்ணுவோம் என சொல்லியிருக்கிறார். சன் பிக்சர்ஸுடன் செய்யும் படம் முடிந்ததும் பேசுவோம்.''

vijay
vijay

''நீங்களும் விஜய்-யும் இணையப்போகும் படத்துக்கு யார் இயக்குநராக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?''

''சார், இன்னும் புராஜெக்ட்டே ஆரம்பிக்கல. அதுக்குள்ள கேட்டீங்கன்னா நான் என்ன சொல்லுவேன். அது நிச்சயம் விஜய் சாரும், நாங்களும் சேர்ந்து எடுக்கும் முடிவாகத்தான் இருக்கும்.''

''உங்கள் அப்பா தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தவர். இப்போது நீங்களும் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் தலைவருக்குப் போட்டியிடுகிறீர்கள். உங்கள் அப்பா போல் உங்களால் துணிச்சலாகச் செயல்பட முடியுமா?''

Murali
Murali

''தயவு செய்து என்னை என் அப்பாவோட ஒப்பிடாதீங்க. என் அப்பா இருந்த காலம் வேற. நான் இப்ப இருக்கிற காலம் வேற. அப்பா ஒரு படத்தை மூணு மாசம், ஆறு மாசத்துல முடிச்சிட்டு வெளிய வந்துடுவாங்க. இப்போ சினிமா அப்படியில்லையே. அப்பா, கலைஞரோட நெருக்கமா இருந்தாங்க. அவரோட சேர்ந்து நிறைய நல்ல விஷயங்கள் பண்ணாங்க. அப்பக்கூட எதுவும் மிஸ்யூஸ் பண்ணல. இப்போ, தமிழ் சினிமா சூழல் தயாரிப்பாளர்களுக்கு நல்லதா இல்லை. கமாண்ட்ல இருக்கவேண்டியவங்க டிப்பென்டன்ட்டா இருக்காங்க. தயாரிப்பாளர்கள் தலைமைலதான் ஒரு சினிமா நடக்கணும். இப்போ அப்படியில்ல. அதனால சினிமா எடுக்குற முறையையே மாத்தணும். தெலுங்கு சினிமா, தயாரிப்பாளர்கள் கன்ட்ரோல்ல இருக்கு. அதனாலதான் அவங்க பாலிவுட்டுக்கு அடுத்த இடத்தைப் பிடிச்சிட்டாங்க. ஆனா, தமிழ் சினிமால பணம் போடுற தயாரிப்பாளர் எல்லா முடிவுகளையும் எடுக்க முடியாது. இதை மாற்றினால்தான் தமிழ் சினிமா மீண்டும் பழையபடி நல்ல நிலைமைக்கு வரும். தமிழ் சினிமாவுக்கான மார்க்கெட் மிகவும் பெரியது. 'மெர்சல்' படத்தப்போ இதைக் கண்கூடா பார்த்தோம். பாலிவுட்டை சேலஞ்ச் பண்ணக்கூடிய இன்டஸ்ட்ரி இது. ஆனால், ஒற்றுமையில்லாததால் பின்னாடி போயிட்டோம்.''

''ஓகே... 10 நாளுக்கு முன்னாடிகூட விஜய்கிட்ட பேசியிருக்கீங்க. 'மாஸ்டர்' ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆகுமா... அவர் என்ன ஃபீல் பண்றார்?''

''நாங்க ஓ.டி.டி விஷயம் பற்றி பேசல. அதனால, விஜய் சார் என்ன நினைக்கிறார்னு சத்தியமா எனக்குத் தெரியாது. அவருடனான என்னுடைய அனுபவத்தில் சொல்லணும்னு கேட்டீங்கன்னா 'மாஸ்டர்' ஓ.டி.டி-ல ரிலீஸ் ஆகாது. நிச்சயம் தியேட்டர் ரிலீஸ்தான். ஓ.டி.டி விற்பனையால 'மாஸ்டர்' பட பட்ஜெட்டை ரெக்கவர் பன்ண முடியாது. விஜய் சார் தியேட்டர் ரிலீஸைத்தான் விரும்புவார்.''

அடுத்த கட்டுரைக்கு