கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

எம்ஜிஆர் மகன் - சினிமா விமர்சனம்

எம்ஜிஆர் மகன் படத்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
எம்ஜிஆர் மகன் படத்தில்

சசிகுமாருக்கும் சமுத்திரக்கனிக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி எப்போதும்போல நன்றாகவே இருக்கிறது

வழக்கமாக சீரியஸ் ரூட்டில் பயணிக்கும் சசிகுமார் - சமுத்திரக்கனி இணை காமெடி செய்ய முயன்றால் அதுதான் ‘எம்ஜிஆர் மகன்.’

கிராமத்து வைத்தியர் சத்யராஜுக்கு அருகிலிருக்கும் மலையின் மூலிகைகள்தான் முதலீடு. அதைப் பழ.கருப்பையா குவாரியாக்கி உடைக்க முயற்சிசெய்ய, வழக்கு போட்டுத் தடுக்கிறார் சத்யராஜ். இதற்கிடையே வெட்டியாய் ஊர் சுற்றும் மகன் சசிகுமாருக்கும் அவருக்கும் முட்டிக்கொள்கிறது. சசிகுமார் சாதித்தபின்தான் நான் வேட்டி கட்டுவேன் என மாப்பிள்ளைக்குப் பரிந்து பேசுகிறார் தாய்மாமா சமுத்திரக்கனி. இவர்களுக்கு நடுவே கதை காணாமல்போக, ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்குப் பண்ணும் ‘சம்பவங்களின்’ தொகுப்புதான் இந்த ‘எம்ஜிஆர் மகன்.’

எம்ஜிஆர் மகன் - சினிமா விமர்சனம்

சசிகுமாருக்கும் சமுத்திரக்கனிக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி எப்போதும்போல நன்றாகவே இருக்கிறது. ஆனால் முழு நீள காமெடிப் படத்தில் இருவரில் சமுத்திரக்கனி மட்டுமே ஓரளவு தேறுகிறார். எள்ளலும் லொள்ளுமாய்ப் பின்னியெடுக்கும் சத்யராஜுமே இந்தப் படத்தில் சோபிக்கவில்லை. காரணம், இயக்குநர் பொன்ராம் மட்டுமே.

‘கிராமத்துப் படம், ஊதாரியாய்ச் சுற்றும் ஹீரோ’ என்றால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தையும் சொல்லிவிடும் அம்மா ரோலில் சரண்யாதான் நடித்திருப்பார் என. அவரிடமும் வழக்கமான நடிப்புதான். மிருணாளினி வெகுசில இடங்களில் குட்டிக் குட்டி ரியாக்‌ஷன்களால் ரசிக்க வைக்கிறார்.

அந்தோணி தாசனின் இசையும் பாடல்களும் கேட்ட ரகம். பசுமையான தேனி வட்டாரத்தை இன்னும் பசுமையாகக் காட்டுகிறது வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு.

எம்ஜிஆர் மகன் - சினிமா விமர்சனம்

கதைக்குப் பெரிதாய் மெனக்கெடாமல், நாம் பார்த்து வளர்ந்த கிராமத்து மைந்தர்களையும் அவர்களின் குசும்பையும் வைத்துத் திரைக்கதை பின்னுவது பொன்ராமின் ஸ்டைல். ஆனால் இந்தப் படத்தில் அது மொத்தமாகவே மிஸ்ஸாகிப்போனதுதான் சோகம். அதிலும் பெண் பார்க்கும் படலத்தில் உருவகேலி நகைச்சுவைகள் எல்லாம் முகம் சுளிக்க வைக்கின்றன.

அப்பாவிற்கும் பிள்ளைக்கும் சண்டை என சரண்யா மட்டுமே எல்லாரிடமும் பில்டப் ஏற்றுகிறார். அதற்கான காரணங்களாகச் சொல்லப்படும் எதுவும் நம்மிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இறுதிக் காட்சியில் சரண்யா பேசும் நெடிய வசனத்தில் நாடக நெடி. இப்படி காமெடியையும் கோட்டைவிட்டு எமோஷனலான காட்சிகளும் எடுபடாமல் ஏகத்துக்கும் சறுக்கியிருக்கிறார் பொன்ராம்.

நடுவே பென்னி குக்கும் முல்லைப் பெரியாறு அணையும், மலையை வளர்ச்சியின் பெயரால் அழித்தல் என்பதைப் பற்றியெல்லாம் பேசுவார் போல என நினைத்தால் அங்கும் ஏமாற்றமே!

எம்ஜிஆர் மகன் - சினிமா விமர்சனம்

காமெடி என்கிற பெயரில் தமிழ் சினிமாவில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கும்போதெல்லாம் கவலையே மேலிடுகிறது. அதற்கு எம்ஜிஆர் மகனும் விதிவிலக்கில்லை.