Published:Updated:

நானும் நீயுமா - 3: எம்.ஜி.ஆர் vs சிவாஜி... வெற்றியும், தோல்வியும் எதனால், எப்படி வந்தது?!

எம்.ஜி.ஆர், சிவாஜி

இது சினிமா வம்புகளை தொகுத்துத் தரும் தொடரல்ல. போலவே எந்தவொரு நடிகரையும் வானாளவப் புகழ்ந்து கீரிடம் சூட்டும் தொடரும் அல்ல. நடிகர்களை கடவுள்களாக உயர்த்திப் பார்க்காமல் மனிதர்களாகப் பார்க்கும் அணுகுமுறைகளை இந்தத் தொடரில் நீங்கள் கவனிக்க முடியும்!

நானும் நீயுமா - 3: எம்.ஜி.ஆர் vs சிவாஜி... வெற்றியும், தோல்வியும் எதனால், எப்படி வந்தது?!

இது சினிமா வம்புகளை தொகுத்துத் தரும் தொடரல்ல. போலவே எந்தவொரு நடிகரையும் வானாளவப் புகழ்ந்து கீரிடம் சூட்டும் தொடரும் அல்ல. நடிகர்களை கடவுள்களாக உயர்த்திப் பார்க்காமல் மனிதர்களாகப் பார்க்கும் அணுகுமுறைகளை இந்தத் தொடரில் நீங்கள் கவனிக்க முடியும்!

Published:Updated:
எம்.ஜி.ஆர், சிவாஜி
கடந்த இரு வாரங்களில் தியாகராஜ பாகவதர் மற்றும் பி.யூ.சின்னப்பா எனும் இரு பெரும் ஆளுமைகளைப் பார்த்தோம். இந்த வாரம் அதை விடவும் மிக முக்கியமான காலக்கட்டத்திற்குள் நுழையவிருக்கிறோம்.

ஆம்... அது எம்.ஜி.ஆர் x சிவாஜி என்னும் இருபெரும் நடிகர்கள் சினிமாத்துறையில் ஒருவருக்கொருவர் சளைப்பில்லாமல் தொடர்ந்து இயங்கிய காலக்கட்டம். இருவருமே நிகரற்ற ஆளுமைகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நம் தொடரின் பார்வையின் படி ஒருவர் முன்னே நிற்க, அடுத்தவர் ஒரு படி பின்னால் நிற்பது இந்தக் காலகட்டத்திலும் தொடர்வதைப் பார்க்க முடிகிறது.

நானும் நீயுமா?
நானும் நீயுமா?

சினிமா, அரசியல் ஆகிய இரண்டு துறைகளிலும் அசாதாரணமான வெற்றிகளைத் தொடர்ந்து குவித்தார் எம்.ஜி.ஆர். ஆனால் சிவாஜியால் தனது நடிப்புத்திறனின் மூலம் சினிமாவில் ஏராளமான பாராட்டுகளைப் பெற முடிந்ததே தவிர அரசியல் வானத்தில் அத்தனை பிரகாசிக்க முடியவில்லை. இந்த வரலாற்று மர்மங்களுக்கு என்ன காரணம்?

இதில் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை என்பது கூடுதல் ஸ்பெஷல். "என் வாழ்க்கையோட ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா" என்று அஜித் ஒரு படத்தில் பன்ச் டயலாக் சொல்வார் அல்லவா? அது யாருக்குப் பொருந்துமோ, இல்லையோ... எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாகப் பொருந்தும். அந்த அளவிற்கு சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் தன்னுடைய வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக அவரே திட்டமிட்டுக் கொண்டார். இந்த வகையில் இன்றைய 'மார்க்கெட்டிங் குரு'க்களுக்கு எல்லாம் எம்.ஜி.ஆர்தான் முன்னோடி.

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவரின் வாழ்க்கையிலுமே பல பகுதிகள் ஆச்சர்ய ஒற்றுமையுடன் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. இருவருமே நாடகத் துறையிலிருந்து மிகவும் சிரமப்பட்டு சினிமா என்னும் அடுத்த தளத்திற்கு நகர்ந்தார்கள். சினிமாவின் ஆரம்பக் காலக்கட்டம் என்பது இருவருக்குமே அத்தனை எளிதாக அமையவில்லை. சிறிய வேடங்களில் நடித்துக் காணாமல் போய் விடுவோமோ என்கிற அச்சம் எம்.ஜி.ஆருக்குள் இருந்தது. அவரின் இந்தத் துயரத்தை, மணிரத்னம் இயக்கிய 'இருவர்' திரைப்படத்தில் புனைவு வடிவில் காணலாம்.

எம்.ஜி.ஆர். - சிவாஜி கணேசன்
எம்.ஜி.ஆர். - சிவாஜி கணேசன்

ஒருவருக்கு முதல் படமே பம்பர் லாட்டரியாக அமைவது பெரும் அதிர்ஷ்டம். எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவில் இரண்டு நடிகர்களுக்குத்தான் அப்படி அமைந்தது. 'பராசக்தி'யில் சிவாஜிக்கு அமைந்தது. இன்னொருவர் கார்த்தி. 'பருத்தி வீரன்' எனும் முதல் படத்திலேயே வெற்றிக் கொடியை நாட்டினார். கார்த்தி-காவது பிரபல நடிகரின் வாரிசு என்கிற பின்புலம் இருந்தது. ஆனால் சிவாஜிக்கு அதுவும் இல்லை. அவரது அசாதாரணமான நடிப்புத் திறமைதான் அவரது பலமான விசிட்டிங் கார்டாக இருந்தது.

'பராசக்தி' திரைப்படத்தில், ஒரு பிரதான பாத்திரத்தில் சிவாஜி இடம் பெற்று விட்டாலும் அந்த இடம் அவருக்கு நிலையில்லாமல் ஆடிக் கொண்டேயிருந்தது. சிவாஜி கணேசனின் தோற்றம் ஒல்லியானதாக இருந்ததால் 'இது சரிப்பட்டு வருமா?' என்கிற சந்தேகம் படத்தயாரிப்பாளரான ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு ஏற்பட்டது. கே.ஆர்.ராமசாமி என்ற இன்னொரு பிரபலமான நடிகரை ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்பது அவரது எண்ணம். ஆனால் சிவாஜியை இந்தப் பாத்திரத்திற்காக தேர்வு செய்த பெருமாள் முதலியார் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. சிவாஜிக்காக பலமாக வாதாடி நடிக்க வைத்தார். பின்னர் நிகழ்ந்தது வரலாறு. 'பராசக்தி'யில் சிவாஜியின் அற்புதமான நடிப்பு தனியாகக் கவனிக்கப்பட்டு அவருக்குப் பலமான அஸ்திவாரத்தை இட்டுத்தந்தது. தனக்காக வாதாடிய பெருமாள் முதலியாரின் மீதான நன்றியை சிவாஜி கடைசி வரைக்கும் மறக்காமல் நினைவுகூர்ந்தார்.

கருணாநிதி - எம்.ஜி.ஆர்
கருணாநிதி - எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் நடிக்கும் கதை, கால்ஷீட், சம்பளம் உள்ளிட்ட விவகாரங்களை அவரது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்ரபாணிதான் பார்த்துக் கொண்டார். இதைப் போலவே சிவாஜிக்கு அவரது தம்பி சண்முகம்தான் பக்க பலமாக இருந்தார். பெரும்பாலான பொறுப்புகளை தம்பியிடம் விட்டுவிட்டு தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் முழுமையாக கவனம் செலுத்தினார் சிவாஜி.

இதைப் போலவே அரசியல் விவகாரங்களிலும் சில ஒற்றுமைகளைப் பார்க்க முடிகிறது. ஆரம்பத்தில் தேசிய காங்கிரஸின் மீது எம்.ஜி.ஆருக்கு ஆர்வம் இருந்தாலும் தமிழகத்தில் தி.மு.க-வின் அபாரமான வளர்ச்சி காரணமாக அதில் தன்னைப் பிணைத்துக் கொண்டார். ஆனால் எம்.ஜி.ஆரின் செல்வாக்கும் புகழும் மக்கள் வரவேற்பும் கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது. எனவே ஒரு காலக்கட்டத்தில் அங்கிருந்து வெளியேறி ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரின் அரசியல் பாதையில் சில இறக்கங்கள் இருந்தாலும் பெரும்பாலும் ஏற்றம்தான். தனது திட்டமிட்ட அரசியல் அசைவுகளின் மூலம் தொடர்ந்து முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொண்டார். அரசியல் சாணக்கியரான கருணாநிதி, எம்.ஜி.ஆருக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி ஒரு சிறந்த போட்டியாளராக எதிரே இருந்தாலும் மக்கள் செல்வாக்கு என்னும் காற்று எம்.ஜி.ஆரின் பக்கம் அதிகமிருந்ததால் அவரது வெற்றிக் காற்றாடி தொடர்ந்து உயரத்தில் பறந்தது.

சிவாஜியின் கதையும் ஏறத்தாழ இதுவேதான். ஆனால் கிளைமாக்ஸ்தான் 'ஆன்ட்டி கிளைமாக்ஸ்' ஆக மாறி விட்டது. எம்.ஜி.ஆருக்கு முன்பே தி.மு.க-வில் இருந்தவர் சிவாஜி. அண்ணாவின் தலைமையை ஏற்றுக் கொண்டவர். ஆனால் கட்சி நிதி வசூல் உள்ளிட்ட பல விவகாரங்களில் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்ட ஆரவாரமான வரவேற்பு அவருக்கு இல்லை. இது சார்ந்த மனத்தாங்கலில் அவர் இருந்தபோது இயக்குநர் பீம்சிங் தந்த யோசனையின்படி ஆறுதலுக்காக திருப்பதி சென்றார். நாத்திகவாத பிரசாரம் உச்சத்தில் இருந்த அந்தச் சமயத்தில் சிவாஜி திருப்பதி சென்ற விஷயம் அவருக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. 'திருப்பதி கணேசா... திரும்பிப் போ' என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சிவாஜி
சிவாஜி

இதனால் மனம் கசந்த சிவாஜி, காங்கிரஸில் இணைந்தார். காமராஜரின் மீதான மதிப்பு காரணமாக காங்கிரஸ் கட்சிக்காக தீவிரமாக பாடுபட்டார். ஆனால் காமராஜர், இந்திரா காந்தி போன்ற தலைவர்களின் மறைவிற்குப் பின்னால் அரசியல் மேகங்கள் மாறின. எனவே அங்கும் நீடிக்க முடியாமல் 'தமிழக முன்னேற்ற முன்னணி' எனும் அரசியல் கட்சியைத் துவங்கி பெரும் தோல்வியைச் சந்தித்தார். ஆரம்பிக்கப்பட்ட ஒரே ஆண்டில் கட்சியைக் கலைத்தார்.

ஆக... சினிமா என்னும் துறையில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நெடுங்காலத்திற்கு கடும் போட்டியாளர்களாக இருந்தார்கள். ஆனால் அரசியல் துறையில் சிவாஜியால் சாதிக்க முடியவில்லை.

இருவருமே சினிமாத்துறையில் ஏறத்தாழ நிகரான அந்தஸ்தைப் பெற்றிருந்தவர்கள்தான். ஆனால் ஒருவரை மக்கள் தொடர்ந்து ஆதரிக்கிறார்கள். இன்னொருவரை கைவிட்டு விடுகிறார்கள்.

இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? அடுத்த வாரத்தில் விடை தேட முயலலாம்.

- போட்டிப் போடுவார்கள்!