Published:Updated:

``மைக் செட்' சேனல்ல ஒரு பிரச்னை... எல்லா வீடியோவையும் நானே டெலீட் பண்ணிட்டேன்!'' - ஶ்ரீராம்

ஸ்ரீராம்
ஸ்ரீராம்

`மைக் செட்' ஶ்ரீராம் என்றாலே சோதனைகள்தான். சில்ட்ரன்ஸ் முதல் அங்கிள்ஸ் வரை இவரின் கலாய் வீடியோக்களைக்காண பெரும் கூட்டமே காத்திருக்கிறது. ஒவ்வொரு வீடியோவும் பல மில்லியன் ஹிட்ஸ் அள்ளியவை. யூடி யூப் டு சினிமா ரூட் மேப்படி ஶ்ரீராமும் சினிமாவுக்கு வந்துவிட்டார். அவரிடம் பேசினேன்.

`மைக் செட்’ யூடியூப் சேனல் ஐடியா எப்படிப் பிடிச்சீங்க?

mic set sriram
mic set sriram

``எல்லோரையும்போல சின்ன வயசுல இருந்தே எனக்கும் சினிமால நடிக்கணும்னுதான் ஆசை. அந்த ஆசையை மட்டும் வெச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியாதே. நாமளும் ஏதாச்சும் பண்ணணும்னு தோணுச்சு. 25 வயசுல சினிமா வாய்ப்பு தேடி அலைஞ்சா, எப்ப அது கிடைக்கும்னு சரியா சொல்லவும் முடியாது. அந்தச் சமயத்தில்தான், `ஸ்மைல் சேட்டை’, `மெட்ராஸ் சென்ட்ரல்’, `எருமசாணி’னு பல யூடியூப் சேனல்கள் மூலம் பலர் ஃபேமஸ் ஆகிட்டு இருந்தாங்க. சரி, நாமளும் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சிடலாம்னு முடிவு பண்ணி, இந்த `மைக் செட்’ சேனலை ஆரம்பிச்சேன். ஆரம்பிச்சப்ப அதில் நடிக்கிறதுக்கு என் ஃபிரெண்ட்ஸ் சில பேரைக் கூப்பிட்டேன். ஆனா, டெக்னிக்கல் சம்பந்தமான வேலைகளுக்குத்தான் யாருமே கிடைக்கலை. அதனால, நானே யூடியூப் பார்த்து அதெல்லாம் கத்துக்கிட்டு பண்ணேன். எல்லாமே செட்டாகி நல்லா போயிட்டு இருக்கு. என் சின்ன வயசு ஆசையும் நிறைவேறி, இப்போ ரெண்டு படங்கள்ல நடிச்சிட்டு இருக்கேன்.’’

`ப்ளாக் ஷிப்’ தயாரிப்பில் ’புட் சட்னி’ ராஜ் மோகன் இயக்கும் படம் பற்றிச் சொல்லுங்க?

mic set sriram
mic set sriram
MELLOW_PHOTOGRAPHY_GURU

``2கே கிட்ஸோட ஸ்கூல் அனுபவம்தான் இந்தக் கதையோட கரு. இதுல நானும் `ப்ளாக் ஷிப்’ அயாஸும் முக்கிய கேரக்டர்ல நடிக்கிறோம். படத்தோட பூஜை போட்டு, ஒரு நாள் மட்டும் ஷூட்டிங் நடந்துச்சு. அப்புறம், இந்த லாக்டெளன்னால ஷூட்டிங்கை நிறுத்தி வெச்சிருக்காங்க. இந்தப் படத்தோட கதையைக் கேட்டபோதே, தமிழ் சினிமாவில் ரொம்ப நாளா நாம மிஸ் பண்ணிட்டு இருந்த படமா இது இருக்கும்னு தோணுச்சு. ஸ்கூல் வாழ்க்கையை அவ்வளவு அழகா கதையாக்கியிருக்காங்க. நிறைய சர்ப்ரைஸ் இந்தப் படத்துக்குள்ள இருக்கும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

லாக்டெளன் நாள்கள் எப்படி இருக்கு?

mic set sriram
mic set sriram

``எப்ப இந்த கேமராவைத் தூக்க ஆரம்பிச்சேனோ அப்போ இருந்து வீட்டுல இருக்குற நேரம் குறைஞ்சிடுச்சு. இந்த லாக்டெளன் அந்தக் குறையைப் போக்கி, இப்போ எங்க வீடு விக்ரமன் சார் படம் மாதிரி இருக்கு. முன்னாடியெல்லாம் வீடு கூட்றது, சமையல் பண்றது, பாத்திரம் கழுவுறது, துணி துவைக்கிறதுனு எல்லாத்தையும் பார்ட் டைம் வேலையா பண்ணிட்டு இருப்பேன். இப்போ அதையே ஃபுல் டைம் வேலையா பண்ணிட்டு இருக்கேன். முக்கியமா, நல்லா சமைக்க கத்துக்கிட்டேன். இனி நம்மளை தனிமரமா விட்டுட்டாலும், நாம இந்தப் பூமியில் வாழ்ந்துக்கலாம்கிற மன வலிமையை இந்த லாக்டெளன் கொடுத்திருக்கு.’’

சமீபத்தில் `மைக்செட்’ சேனலில் இருந்த எல்லா வீடியோவும் காணாமல் போயிடுச்சே ஏன்?

mic set sriram
mic set sriram

``எங்களோட வீடியோஸ்ல ரெண்டு வீடியோவுக்கு காப்பிரைட்ஸ் பிரச்னை வந்திடுச்சு. இன்னும் ஒரு வீடியோவுக்கு காப்பிரைட்ஸ் பிரச்னை வந்தா யூடியூப்ல இருந்து சேனலையே தூக்கிடுவாங்க. அப்படித் தூக்கிட்டா நாலு மில்லியன் சப்ஸ்கிரிப்ஷனும் போயிடும். அதுனால, இன்னொரு வீடியோவுக்கு காப்பிரைட்ஸ் பிரச்னை வரதுக்குள்ள, நாமளே எல்லா வீடியோவையும் தூக்கிடலாம்னு எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டோம். இப்போ அந்தப் பழைய வீடியோக்களை எல்லாம் காப்பிரைட்ஸ் பிரச்னை வராத மாதிரி ரீ-எடிட் பண்ணிட்டு இருக்கேன். அதெல்லாம் இனிமேல் ஒவ்வொரு வீடியோவா வரும்.’’

யூடியூப் சேனல்களில் யார் உங்களுக்கு ரோல்மாடல்?

Mic Set Sriram Live Performance
Mic Set Sriram Live Performance

`` `ப்ளாக் ஷிப்’ விக்னேஷ் காந்த் அண்ணாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ஏன்னா, அவர் யூடியூப் சேனலையே ஒரு சாட்டிலைட் சேனல் மாதிரி ரன் பண்ணிட்டு இருக்கார். அவர் ஆபிஸ்ல 100 பேருக்கு மேல வேலைக்கு வெச்சிருக்கார். அதெல்லாம் பார்க்கும்போது, என்னை மாதிரி சின்ன ஸ்கேல்ல யூடியூப் சேனல் நடத்துற எல்லாருக்கும் பிரமிப்பா இருக்கும். இதைவிட, என்னை இன்னும் பிரமிப்பாக்குற விஷயம் என்னன்னா, அவங்க ஒரு படம் தயாரிக்கும்போது அவங்க சேனல்ல நடிக்கிறவங்களையே ஹீரோவா வெச்சு படம் எடுக்கலாம். ஆனால், இன்னொரு சேனலில் இருக்கிற என்னையும் அந்தப் படத்தில் ஹீரோவா நடிக்க வைக்கிறார். அதுதான், அவர் மேல இருக்கிற மரியாதையை அதிகப்படுத்துச்சு. நான் அவர் படத்துல நடிக்கிறதுனால இதைச் சொல்லலை. நான் யூடியூப் சேனல் ஆரம்பித்ததில் இருந்தே, அவர் எனக்கு இன்ஸ்பிரேஷன்தான்.’’

நீங்க சினிமாவில் பிஸியாகிட்டாலும் சேனலில் வீடியோக்கள் வருமா?

mic set sriram
mic set sriram

`` `மைக் செட்’ சேனல் எப்போதுமே இயங்கிட்டுதான் இருக்கும். அதில் நானும் நடிச்சிட்டுத்தான் இருப்பேன். ஏன்னா, எனக்கு சினிமா வாய்ப்புகளை வாங்கிக்கொடுத்ததே அந்தச் சேனல்தான். அதனால, ஒருபோதும் இந்தச் சேனலை நிறுத்த மாட்டேன். ஒரு வேளை நான் பிஸியா இருந்தா, நான் நடிக்கிற வீடியோஸ் குறையுமே தவிர, சேனலோட வீடியோஸ் எப்போதுமே வந்துட்டுத்தான் இருக்கும். அதுக்கு ஏற்றமாதிரிதான் எல்லாத்தையும் செட் பண்ணி வைப்பேன்.’’

அடுத்த கட்டுரைக்கு