
பாலா - சூர்யா இணையும் புதுப்படத்தின் படப்பிடிப்பு, இந்த மாதம் தொடங்கவிருக்கிறது. சூர்யாவுக்குத் தங்கையாக இந்துஜா நடிக்கிறார்.
விஜய்யின் ‘பீஸ்ட்’ பட ‘அரபிக் குத்து’ பாடலுக்கு ரெஸ்பான்ஸ் அள்ளியிருக்கிறது. எவருக்கும் புரியவே கூடாது எனத் திட்டமிட்டு சிவகார்த்திகேயன் எழுதியிருந்தாலும், அத்தனை பேரும் ஹம் பண்ணுகிற பாடலாகியிருக்கிறது. விஜய்யின் துள்ளல் ஆட்டமும், ஈர்ப்பான தோற்றமும் ரசிகர்களை ரொம்பவே எனர்ஜியாக்கியிருக்கிறது. பாடலைப் பெரிதாகக் கொண்டுபோய்ச் சேர்க்க இயக்குநர் நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் மூவரும் சேர்ந்து செய்த புரொமோ ஐடியா கலாநிதி மாறனுக்கு மிகவும் பிடித்துப்போனதாம். படத்தின் அத்தனை பாடல்களுக்கும் இதே பாணியைப் பின்பற்றச் சொல்லியிருக்கிறாராம்!
வேளாண் வாழ்வை அப்படியே நெஞ்சில் நிறுத்தியது ‘கடைசி விவசாயி’ படம். ஆனாலும், படத்தை வெளியிடுவதற்குள் இயக்குநர் மணிகண்டனுக்கு நாக்குத்தள்ளிவிட்டதாம். கடைசி நேரத்தில் படத்தை வெளியிட 8 கோடி ரூபாய் தேவைப்பட, விஜய் சேதுபதிதான் உதவியிருக்கிறார். தியேட்டர் வசூல் சுமாராக இருந்தாலும், விமர்சனரீதியாகப் படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு, சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸுக்கான டிமாண்டைப் பெரிதாக்கியிருக்கிறது. டிஜிட்டல் உரிமையை அநேகமாக சோனி லிவ் கைப்பற்றக்கூடும் என்கிறார்கள்!



இசையமைப்பாளர் தர்புகா சிவா இயக்கத்தில், ஓடிடி தளத்தில் வெளியான ‘முதலும் நீ முடிவும் நீ’ படம் போதிய கவனம் பெறாவிட்டாலும், விமர்சகர்களால் நல்ல படமாகப் பாராட்டப்பட்டது. அதனால், அடுத்த படத்துக்கான வாய்ப்பு தர்புகா சிவாவுக்குப் பல திசைகளிலிருந்தும் வரத் தொடங்கியிருக்கிறது. அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிற ஆசையில் இருக்கிறாராம் தர்புகா சிவா!
பாலா - சூர்யா இணையும் புதுப்படத்தின் படப்பிடிப்பு, இந்த மாதம் தொடங்கவிருக்கிறது. சூர்யாவுக்குத் தங்கையாக இந்துஜா நடிக்கிறார். அண்ணன் - தங்கை பாசம்தான் படத்தின் மையக் கதையாம். சூர்யாவுக்கு இணையான பாத்திரம் என்பதால், இந்தப் படத்தை மிகவும் நம்புகிறார் இந்துஜா. கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தப் படப்பிடிப்பும் நடக்கவிருக்கிறது!
ரஜினி - நெல்சன் இணையும் படத்தில், ஐஸ்வர்யா ராயை நடிக்கவைக்கலாமா என ஆலோசனை நடக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கலாநிதி இதற்கு ஓகே சொல்ல, ரஜினியிடம் ஆலோசித்திருக்கிறார் நெல்சன். ‘எனக்குச் சம்மதம். அவங்களுக்கு ஓகேயான்னு கேட்டுக்கங்க’ என ரஜினியும் கிரீன் சிக்னல் கொடுக்க, ஐஸ்வர்யாவிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார்கள்!
உஷ்...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் இயக்க வந்திருக்கும் தாடிக்காரர், தயாரிப்பாளரின் ரத்த உறவையே ஹீரோவாக மாற்றப்போகிறாராம். அதற்காகவே தாடிக்காரருக்குப் பேசப்பட்டிருக்கும் சம்பளம் 5 கோடியாம். #இயக்குநர் மிகப் பெரியவர்!