அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரம்யா பாண்டியன்
பிரீமியம் ஸ்டோரி
News
ரம்யா பாண்டியன்

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலுவின் நெருங்கிய நண்பராக சினிமா விமர்சகர் பிரஷாந்த் நடிக்கிறார்.

திடீரென மும்பைக்குக் கிளம்பிப்போய், இயக்குநர் அனுராக் காஷ்யப்பைச் சந்தித்தார் நம்மூர் சசிகுமார். இருவருமே அதற்கான காரணம் குறித்துச் சொல்லவில்லை. சீக்கிரமே டைரக்‌ஷன் பக்கம் திரும்பவிருக்கும் சசிகுமார், அதற்காகத்தான் அனுராக்கைச் சந்தித்தாராம். கதை குறித்து சசிகுமார் சொல்ல முற்பட, “நீங்க என்ன கதை பண்ணினாலும் நான் நடிப்பேன். உங்களோட ‘சுப்ரமணியபுரம்’ படத்துக்கு நான் வாழ்நாள் அடிமை. டைரக்‌ஷனை விட்டுட்டு நீங்க நடிக்கப்போனதில் எனக்குப் பெரிய வருத்தம்…” எனச் சொல்லிச் சிலிர்க்கவைத்தாராம் அனுராக். இருவரும் இணைகிற படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்கிறார்கள்!

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலுவின் நெருங்கிய நண்பராக சினிமா விமர்சகர் பிரஷாந்த் நடிக்கிறார். ஷூட்டிங் நேரத்தில் பல விஷயங்களை பிரஷாந்த் பகிர்ந்துகொள்ள, வடிவேலுவுக்கு அவரை ரொம்பவே பிடித்துப்போய்விட்டதாம். அதனால், இயக்குநர் சுராஜ் எழுதிய காட்சிகள் மட்டுமல்லாமல், கூடுதல் காட்சிகளிலும் பிரஷாந்த் தன்னுடன் நடிக்கும்படி பார்த்துக் கொள்கிறார் வடிவேலு. பல படங்களில் பிரஷாந்த் நடித்திருந்தாலும், இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுத்தரும் படமாக இருக்கும் என்கிறார்கள் யூனிட்டில்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

‘மாநாடு’ வெற்றிக்குப் பிறகு, தன் சம்பளத்தை 15 கோடியிலிருந்து 25 கோடியாக உயர்த்தினார் சிம்பு. ‘சார்பட்டா’ வெற்றிக்குப் பிறகு தன் சம்பளத்தை 15 கோடியாக உயர்த்தினார் ஆர்யா. அந்த வகையில் ‘டாக்டர்’ வெற்றிக்குப் பிறகு தன்னுடைய சம்பளத்தை 35 கோடிக்கு உயர்த்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ‘35 கோடி கொடுத்தாலும் சிவகார்த்திகேயனின் தேதி கிடைக்குமா எனத் தெரியலையே…’ எனத் தவிக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள். ‘டாக்டர்’ ஹிட்டுக்குப் பிறகு அந்த அளவுக்கு பிஸியாக நிரம்பி வழிகிறது சிவகார்த்திகேயனின் கால்ஷீட்!

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, நடிகர் கார்த்தியுடன் ‘விருமன்’ படத்தில் அறிமுகமாகிறார். அடுத்து சிம்புவுடன் ‘கொரோனா குமார்’ படத்தில் ஜோடி போடுகிறார். அடுத்தபடியாக ஷங்கரின் மகனும் சினிமாவில் களமிறங்குகிறார். கதை கேட்பது, தேர்ந்தெடுப்பது உட்பட எப்படி மகள் விஷயத்தில் எந்தத் தலையீடும் செய்யாமல் ஷங்கர் ஒதுங்கியிருந்தாரோ, அதே பாணியில் மகன் அர்ஜூத்துக்கும் முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறாராம். இப்போதைக்கு அர்ஜூத் நடிக்கப்போவது அட்லி இயக்கத்தில் என்கிற தகவல் மட்டும் கசிந்திருக்கிறது.

உஷ்...

மொத்தக் கடனையும் அடைக்க ஒரே வழியாக, கைவிடப்பட்ட வரலாற்றுப் படத்தை மீண்டும் தூசு தட்டலாமா என நினைக்கிறாராம் வேர்ல்டு நடிகர். பல்க் தொகையை ஓடிடி நிறுவனங்கள் கொடுத்தால், ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்துக்கொடுப்பதாகச் சொல்கிறாராம். நெருங்குவதா, ஓடுவதா என இருதலைக்கொள்ளி எறும்பாக முழிக்கின்றன ஓடிடி நிறுவனங்கள். #முப்புரம் எரிச்ச செவனே... இங்கே எப்புறம் போனாலும் எரிவது என்னே..!