அரசியல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ரித்திகா சிங்
பிரீமியம் ஸ்டோரி
News
ரித்திகா சிங்

‘மாநாடு’ படம் எப்படி சிம்புவுக்கு நிகராக எஸ்.ஜே.சூர்யாவுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்ததோ, அதேபோல் ‘பீஸ்ட்’ படம் விஜய் அளவுக்கு செல்வராகவனுக்குச் சிறப்பான பெயரைப் பெற்றுத்தரும் என்கிறார்கள்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மையப்படுத்தி திரைக்கு வந்திருக்கும், ‘எதற்கும் துணிந்தவன்’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் செல்லப்பிள்ளையாக விளங்கும் பாண்டிராஜ் அடுத்து ரஜினி, விஜய் என வியூகம் வகுத்துக் கதைகள் சொன்னார். ஆனால், அவர்கள் இருவரும் வேறு இயக்குநர்களின் படங்களில் கமிட்டாகிவிட்டதால், அடுத்து சிவகார்த்திகேயன், லாரன்ஸ் என முக்கிய நடிகர்களைச் சந்தித்துவருகிறார். யார் ஹீரோவாக இருந்தாலும் பாண்டிராஜின் அடுத்த படத்தைத் தயாரிக்க, சன் பிக்சர்ஸ் ரெடியாக இருக்கிறது. இதற்கிடையில் லைகா நிறுவனமும் பாண்டிராஜை வைத்துப் படம் எடுக்க அட்வான்ஸ் கொடுத்திருக்கிறது!

‘விலங்கு’ வெப் சீரீஸ், நடிகர் விமலுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல கவனத்தைக் கொடுத்திருக்கிறது. இதில், ‘கிச்சா’ என்கிற பாத்திரத்தில் நடித்த புதுமுக நடிகர் ரவி, பெரிதாக ஸ்கோர் செய்திருந்தார். அப்பாவியான முகமும், அசால்டாக எதையும் செய்யும் தைரியமுமாக நடித்திருந்த ‘கிச்சா’ ரவிக்கு அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் கதவைத் தட்டுகின்றன. ‘விலங்கு’ வெப் சீரீஸின் இயக்குநரான பிரசாந்த்தின் அக்கா கணவர்தான் இந்த ‘கிச்சா’ ரவி!

‘மாநாடு’ படம் எப்படி சிம்புவுக்கு நிகராக எஸ்.ஜே.சூர்யாவுக்கு நல்ல பெயர் வாங்கித் தந்ததோ, அதேபோல் ‘பீஸ்ட்’ படம் விஜய் அளவுக்கு செல்வராகவனுக்குச் சிறப்பான பெயரைப் பெற்றுத்தரும் என்கிறார்கள். இந்தப் படத்துக்காக இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருக்கும் செல்வராகவன், வித்தியாசமான வில்லன் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். விஜய்யும் செல்வராகவனும் நேருக்கு நேராகச் சந்திக்கும் காட்சிகள் தியேட்டரையே ரகளை கிளப்பவைக்கும் என்கிறார்கள்!

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்துக்கு ‘மாமன்னன்’ எனத் தலைப்பு வைத்ததுதான் தாமதம்… தஞ்சையை ஆண்ட ராஜராஜன் குறித்த கதை என்றெல்லாம் பரபரப்பு கிளம்பிவிட்டது. ராஜராஜன் என்ன சாதி என்கிற சர்ச்சை பெரிய கோயில் விழா கொண்டாடப்படும்போதெல்லாம் பெரிதாக வெடிக்கும். இயக்கம் மாரி செல்வராஜ் என்பதால், சர்ச்சைகளுக்கும் குறைவிருக்காது. இதற்கிடையில், ‘பெரிய கோயில் சம்பந்தப்பட்ட கதையைச் செய்தால், உதயநிதி பொறுப்புக்கு வருவது சிக்கலாகும்’ எனச் சிலர் இப்போதே உடுக்கை அடிக்கத் தொடங்கியிருப்பதுதான் ஹைலைட் காமெடி. படக்குழுவிடம் கேட்டால், ‘பக்கா கிராமத்துக் கதை… நீங்க நினைக்கிற பாலிடிக்ஸெல்லாம் இதில் கிடையாது சாமி…’ என்கிறார்கள்.

உஷ்...

தங்கள் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக `அசுர’ நடிகரை நியமிக்க நினைத்ததாம் பிரபல ‘நட்சத்திர’ ஓடிடி நிறுவனம். பத்து கோடி ரூபாய் வரை சம்பளம் பேசியும், ஒல்லி நடிகர் அசைந்து கொடுக்கவில்லையாம். இத்தனைக்கும் பணரீதியான சிரமம் அவரைப் படுத்தி எடுத்துவருகிறது. #என்ன கணக்கோ?!