அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

பிரியா பவானி சங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியா பவானி சங்கர்

லைக்கா தயாரிப்பில் ராஜ்கிரண், அதர்வா கூட்டணியில் புதிய படத்தை இயக்குகிறார் சற்குணம்.

‘சந்திரமுகி பார்ட் 2’ எடுக்கப்போகும் திட்டத்தை இயக்குநர் பி.வாசு சொன்னபோதே, படத்தில் தான் நடிக்கச் சாத்தியமில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார் ரஜினிகாந்த். ரஜினிக்கு மாற்றாக அவருடைய தீவிர ரசிகரான லாரன்ஸைக் களமிறக்க முடிவெடுத்த வாசு, அவருக்கு ஜோடியாக ஜோதிகாவை அணுகினார். நான்கைந்து படங்களைக் கையில்வைத்திருக்கும் நிலையில் ஜோதிகாவால் தேதி ஒதுக்க முடியாத நிலை. ஆனாலும், கொரோனா நெருக்கடிகள் குறைந்தவுடன் ஷூட்டிங்கைத் தொடங்குவதில் உறுதியாக இருக்கிறார் பி.வாசு.

லைக்கா தயாரிப்பில் ராஜ்கிரண், அதர்வா கூட்டணியில் புதிய படத்தை இயக்குகிறார் சற்குணம். இதற்கிடையில் விமல் நடிப்பில் ‘எங்க பாட்டன் சொத்து’ படத்தை முடித்து ரிலீஸுக்கு ரெடியாகியிருப்பவர், விதார்த் நடிப்பில் அடுத்த படத்தையும் சைலன்ட்டாகவே முடித்திருக்கிறாராம். சொன்ன நாள்களுக்குள் படத்தை முடிக்கும் வேகத்துக்காக அடுத்த படத்தை லைக்கா நிறுவனம் சற்குணத்துக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

இன்றைய தேதியில், மார்க்கெட்டில் பரபரவென்றிருக்கும் நடிகை என்றால், பிரியா பவானி சங்கர்தான். கைவசம் இரட்டை எண்ணிக்கையில் படங்கள் இருப்பது மட்டுமல்ல, சோஷியல் மீடியாவிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில், வெப்சீரிஸ் வாய்ப்புகள் வேறு வந்து குவிந்தவண்ணம் இருக்கின்றனவாம்!

‘ஃபர்ஸ்ட் அப்டேட் கொடுக்கவே இரண்டு வருஷம் ஆச்சே… படத்தை எப்போ ரிலீஸ் பண்ணுவாங்களோ?’ எனச் சோர்ந்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, தீபாவளிக்கே விருந்து கொடுக்க ரெடியாகிவருகிறது ‘வலிமை’ டீம். ஒரு ஃபைட் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், எடுத்த வரையிலான காட்சிகளுக்கு டப்பிங் உள்ளிட்ட பணிகளைத் தெளிவாக முடித்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். யுவன் ஷங்கர் ராஜாவும் பின்னணி இசையைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டாராம். அதனால் ‘வலிமை’யை தீபாவளிக்கே திரையிடுகிற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும் தீபாவளி அன்றே ரிலீஸ் ஆவதால், ரஜினியா, அஜித்தா என்கிற அட்டகாசப் போட்டிக்கும் வாய்ப்பிருக்கிறது.

‘சார்பட்டா’ படத்தின் கதையை, இயக்குநர் பா.இரஞ்சித் முதலில் ரெடி செய்தது நடிகர் சூர்யாவுக்குத்தானாம். இரண்டு முறை கதை சொல்லி சூர்யாவும் ஓ.கே செய்த நிலையில், என்ன காரணத்தாலோ அந்த முயற்சி ஈடேறாமல் போய்விட்டது. இந்தநிலையில் படத்தின் புரொமோஷன் உள்ளிட்ட விஷயங்களுக்கு சூர்யா உதவ, அடுத்து அவரை இயக்கும் முடிவிலிருக்கிறார் பா.இரஞ்சித். இடைப்பட்ட காலத்தில் ‘அட்டகத்தி’ பாணியில் ஓர் எளிய காதல் கதையைப் படமாக்கும் திட்டமும் பா.இரஞ்சித்துக்கு இருக்கிறது.

உஷ்…

எதையும் வித்தியாசமாகச் செய்யும் நடிகர், தன் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்குச் சாப்பாடு உள்ளிட்ட செலவுகளை இறுக்கிப் பிடிக்கிறாராம். அதேநேரம், அடுத்த நிறுவனங்களின் பட ஷூட்டிங்குக்குச் செல்லும்போது ‘அந்த ஹோட்டலில் வாங்கினால்தான் சாப்பிடுவேன்’ எனக் குறிப்பிட்ட உணவகங்களைச் சொல்லி பில்லை எகிறவைக்கிறாராம். #குண்டக்க மண்டக்க இருக்கிறாரே!மிஸ்டர் மியாவ்