
தயாரிப்பாளர் அன்புச் செழியனின் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்துகொடுக்க, கையெழுத்திட்டிருக்கிறார் தனுஷ்
மலைக்கவைக்கும் வசூலைக் கண்டு திகைத்துப்போயிருக்கிறார் கமல்ஹாசன். மாற்று விமர்சனங்களையும் கடந்து ‘விக்ரம்’ வசூலிலும் வரவேற்பிலும் வெளுத்து வாங்கியதற்குக் காரணம், தயாரிப்பில் தனக்கு உற்ற துணையாக விளங்கும் மகேந்திரன்தான் எனப் பலரிடமும் சிலாகிக்கிறாராம் கமல். ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் முன்னணி ஹீரோக்களைவைத்து வரிசையாகப் படம் செய்யவும் மகேந்திரனிடம் அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார் கமல். ஏற்கெனவே சிவகார்த்திகேயனை மகேந்திரன் மடக்கிப்போட்டு அட்வான்ஸ் கொடுத்திருக்கும் நிலையில், அடுத்து சூர்யாவைக் குறிவைக்கிறார்கள். ரஜினி, விஜய்யிடமும் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது!
ஓய்வுபெற்ற நீதியரசர் நாகமுத்து விசாரித்த ஒரு வழக்கை வைத்து ‘அர்த்தநாரி’ என்கிற கதையை எழுதினார் கவிப்பேரரசு வைரமுத்து. அதேபோல் நீதியரசர் நாகமுத்து தீர்ப்பளித்த ஒரு வழக்கை மையமாக வைத்து, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மாணிக்கவாசகம் ‘எது குற்றம்?’ என்ற தலைப்பில் நாவல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். உண்மைச் சம்பவங்கள் படமாகிவரும் இன்றைய காலகட்டத்தில், ‘எது குற்றம்?’ நாவலைப் படமாக்கவும் இயக்குநர்கள் பலரும் மாணிக்கவாசகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்!



தயாரிப்பாளர் அன்புச் செழியனின் நிறுவனத்துக்கு ஒரு படம் செய்துகொடுக்க, கையெழுத்திட்டிருக்கிறார் தனுஷ். இதற்காகத் தொடர்ந்து பல இயக்குநர்களிடமும் கதைவேட்டை நடத்திவருகிறார் அன்புச்செழியன். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் தனுஷுக்கு செட்டாகவில்லையாம். ‘புதுமுக இயக்குநர்கள் வேண்டாம்’ என ஆரம்பத்தில் கறார் காட்டிய தனுஷ், இப்போது ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ் தொடங்கி சக்தி சௌந்தர்ராஜன் வரையிலான பத்து முன்னணி இயக்குநர்களின் பட்டியலைக் கொடுத்து, இவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறாராம். தடாலடிப் புள்ளியான அன்புச்செழியனையே தனுஷ் ஆட்டிவைத்துக் கூத்துக் காட்டுவதுதான் கோடம்பாக்கத்தின் இப்போதைய ஹாட் டாபிக்!
கௌதம் வாசுதேவ் மேனன் - சிம்பு கூட்டணியில் ரெடியாகியிருக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் பிசினஸ், தயாரிப்பாளர் ஐசரி கணேஷுக்குப் பெரிய நம்பிக்கை அளித்திருக்கிறதாம். படத்தின் ரிலீஸுக்குப் பிறகான டிஜிட்டல் ரைட்ஸை அமேசான் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. அதற்கான விலை மட்டும் 15 கோடி ரூபாயாம். அடுத்து சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்ற போட்டி நடக்கிறது. ‘மாநாடு’ படத்துக்குப் பிறகு, சிம்பு படங்களுக்கான பிசினஸ் பெரிதாக எகிறத் தொடங்கியிருப்பதால், அவருடைய சம்பளமும் ‘25 சி’-யாக உயர்ந்துவிட்டதாம்!
உஷ்...
திலக நடிகை பல இடங்களில் நிலம் வாங்கிப்போடுகிறார். ‘பணத்தை நிலத்தில் போடுவது இப்போதைக்கு லாபகரமானது இல்லையே…’ எனச் சிலர் அறிவுறுத்த, ‘நான் ரியல் எஸ்டேட் பண்ணவில்லை. பெரிய பண்ணைகளை உருவாக்கப்போகிறேன்…’ என பதில் சொல்கிறாராம்!