Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மாளவிகா மோகனன்
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா மோகனன்

சென்டிமென்ட் கதைகளுக்கு இனி இமான் - ரூபன் கூட்டணியைத் தமிழில் தவிர்க்கவே முடியாது என்கிறார்கள்

மிஸ்டர் மியாவ்

சென்டிமென்ட் கதைகளுக்கு இனி இமான் - ரூபன் கூட்டணியைத் தமிழில் தவிர்க்கவே முடியாது என்கிறார்கள்

Published:Updated:
மாளவிகா மோகனன்
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா மோகனன்

தனுஷுடன் மாளவிகா மோகனன் நடித்த ‘மாறன்’ படம் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறது. ``அடுத்து என்ன?’’ என்று கேட்டால், ``தென்னிந்திய மொழிகளில் பெரிய நாயகர்களின் படங்களில் மட்டும் நடிப்பது’’ என்ற முடிவில் மாளவிகா இருப்பதாக கோலிவுட் வட்டாரம் கிசுகிசுக்கிறது. ரன்பீர் கபூருடன் இவர் நடித்த விளம்பரப் படம் மூலம் மீண்டும் பாலிவுட் இயக்குநர்களின் கவனம் இவர்மீது திரும்பியிருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

ரஷ்யாவில் எடுக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சியையும் எடிட் செய்து முடித்து, அஜித்தின் ‘வலிமை’ படத்தை ரெடி செய்துவிட்டார்கள். தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய தியேட்டர்காரர்கள் பலரும் வற்புறுத்த, தயாரிப்பாளர் போனி கபூருக்கும் அதுவே சரியெனத் தோன்றியது. ஆனால், `தலைவி’, `லாபம்’ ஆகிய படங்களுக்கு தியேட்டர்களில் பெரிய கூட்டம் கூடாதது அஜித் தரப்பை ரொம்பவே யோசிக்கவைத்திருக்கிறது. ‘தியேட்டர்களை நோக்கி மக்கள் வருவது சகஜமான பிறகு ரிலீஸ் வைத்துக்கொள்ளலாம்’ என்றாராம் அஜித். ‘உங்க படம் வந்தாலே மக்கள் கூட்டம் தியேட்டரை திணறடிச்சுடும் சார்’ எனச் சொல்லி அஜித்தைச் சம்மதிக்கவைக்க முயற்சி நடக்கிறது. அவர் ஓகே சொன்னால், ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்துடன் `வலிமை’ நேருக்கு நேர் மோதுகிற படமாகிவிடும்.

தன் அண்ணன் மகள் திருமணத்தைக் கோலாகலமாக நடத்தி மதுரையையே இன்னொரு கோடம்பாக்கமாக மாற்றிவிட்டார் நடிகர் சூரி. திரையுலக நட்சத்திரங்கள் வரிசையாகக் குவிய, கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. கூட்டம் குறைந்ததும் திருமணத்துக்குச் செல்லலாம் எனத் திட்டமிட்ட சிவகார்த்திகேயன் மதியத்துக்குப் பிறகு செல்ல, திட்டமிட்டுப் பதுங்கி இருந்ததுபோல் ரசிகர்கள் கூட்டம் மண்டபத்தையே திணறடித்தது. போலீஸை வரவழைத்துத்தான் சிவகார்த்திகேயனைக் காப்பாற்ற முடிந்தது. ``கொரோனா நேரத்தில் ஏன் இந்த பிரமாண்டம்?” எனக் கேட்டதற்கு, ``எங்க குடும்பத்தின் தலைமகளோட கல்யாணம். அப்படியும் அழைப்பிதழ் குறைவாத்தான்வெச்சோம். தானா வந்த கூட்டத்தைத் தடுக்க முடியாதே சார்…’’ என்கிறார் சூரி.

‘டெடி’, ‘சார்பட்டா பரம்பரை’ ஆகிய இரு படங்களும் ஓடிடி தளத்தில் ஆர்யாவுக்கு மிகப்பெரிய மார்க்கெட்டைத் திறந்துவிட்டிருக்கின்றன. அதனால், அமீர் இயக்கத்தில் பாதியில் நிற்கும் ‘சந்தனத்தேவன்’ படத்தை மீண்டும் தொடங்க நினைக்கிறார் ஆர்யா. ஏற்கெனவே 10 கோடி ரூபாய் வரை செலவாகியிருக்கும் நிலையில், இன்னும் 15 கோடி தேவை என்கிறாராம் அமீர். தயாரிப்பாளர் இதற்குத் தயங்க, தன் முதலீட்டில் படத்தைத் தொடங்கும்படிச் சொல்கிறாராம் ஆர்யா. விரைவில் ‘சந்தனத்தேவன்’ படம் ரீ ஸ்டார்ட் ஆகிறது.

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ரஜினியின் ‘அண்ணாத்த’, சசிகுமார் - ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ என வரிசையாக அண்ணன் - தங்கை சென்டிமென்ட் படங்கள் தமிழில் வரிசைகட்டுகின்றன. இந்த மூன்று படங்களுக்குமே இசை இமான், எடிட்டிங் ரூபன் என்பதுதான் தனிச்சிறப்பு. சென்டிமென்ட் கதைகளுக்கு இனி இமான் - ரூபன் கூட்டணியைத் தமிழில் தவிர்க்கவே முடியாது என்கிறார்கள்.

உஷ்…

ரீ என்ட்ரி ஆகியிருக்கும் நகைச்சுவை நடிகர், பெரிய வெற்றியை அடைந்தே தீர வேண்டும் என்கிற வெறியில் இருக்கிறார். ஆனால், படத்தின் இயக்குநரோ தயக்கம் குறையாதவராக இருக்கிறாராம். நடிகரின் தலையீடுகளைத் தாண்டி எப்படிப் படத்தை முடிக்கப்போகிறோமோ என்கிற குழப்பம்தான் இயக்குநரை வதைக்கிறதாம். கதை விவாதத்திலேயே அவ்வளவு தலையீடாம்!