அலசல்
அரசியல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

கேட்டி ஷர்மா
பிரீமியம் ஸ்டோரி
News
கேட்டி ஷர்மா

அஜித்குமாரின் 61-வது படம் ஹெச்.வினோத் இயக்கத்தில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது.

விஜய்யின் ‘பீஸ்ட்’ பட முன்னோட்டம் வெளியான நிலையில், ‘ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி’ என ஆன்லைனில் வரிந்துகட்டி வாதம் செய்தார்கள். யோகி பாபு நடித்த ‘கூர்க்கா’ படத்தைப்போல இருப்பதாகச் சிலர் கிண்டலடித்த நிலையில், அதைப் பெரிதாக்கும்விதமாக, ‘கூர்க்கா படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?’ என ‘விஜய் டி.வி ஆட்கள்’ ட்விட்டர் தளத்தில் அலப்பறை செய்தார்கள். இதற்கிடையில், ‘காவியைக் கிழிக்கும் விஜய்’ என பா.ஜ.க-வுக்கு எதிரானவர்கள் டிரெண்ட் செய்ய, ‘முஸ்லிம்களுக்கு எதிரான கதை’ என இன்னொரு தரப்பு ரவுண்டுகட்ட, தமிழகம் முழுக்கவே ‘பீஸ்ட்’ ஃபீவரில் கிடக்கிறது!

ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் மதிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘செல்ஃபி’ படம், தனியார் கல்லூரிகளில் இடைத்தரகர்கள் மூலமாக நடக்கும் பண வேட்டையை அப்படியே அம்பலப்படுத்தியிருக்கிறது. தற்போது எம்.பி-யாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரின் மருத்துவக் கல்லூரியில் நடந்த பண மோசடிகளைப் படத்தின் கதையாக உருவாக்கி, இன்றைய டிரெண்டுக்கு ஏற்றவிதத்தில் சொல்லி மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கியிருக்கிறார் மதிமாறன். ‘பெரிய ஹீரோக்கள் செய்திருக்கவேண்டிய கதை’ எனக் காதைக் கடிக்கிறார்கள் கோடம்பாக்கப் புள்ளிகள்!

அஜித்குமாரின் 61-வது படம் ஹெச்.வினோத் இயக்கத்தில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. இப்போதே வெயில் பட்டையைக் கிளப்பும் நிலையில், மே மாதம் இன்னும் மோசமாக இருக்கும் என வினோத் தயங்க, ‘வெயிலைப் பொருட்படுத்த வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டாராம் அஜித். படத்துக்காக ஹைதராபாத்தில் பேங்க் ஒன்று அச்சு அசலாக செட் போடப்பட்டுவருகிறது. ‘சென்னை பரவாயில்லை’ என்கிற அளவுக்கு ஹைதராபாத்தில் வெயில் அனல் கிளப்புகிறதாம்!

கேட்டி ஷர்மா
கேட்டி ஷர்மா
கேட்டி ஷர்மா
கேட்டி ஷர்மா

விஷ்ணு விஷால் நடிப்பில் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தை இயக்கிய செல்லா அய்யாவு, அடுத்து ‘கட்டா குஸ்தி’ என்கிற படத்தை இயக்கத் தொடங்கியிருக்கிறார். காமெடி ப்ளஸ் சென்டிமென்ட் கதையாக உருவெடுக்கும் இந்தப் படத்தை, மிக நம்பிக்கையான கதையாகப் பலரிடமும் சொல்லிவருகிறார் விஷ்ணு விஷால். ‘எஃப்.ஐ.ஆர்’ படம் பிசினஸ் ரீீதியாக விஷ்ணு விஷாலை உயர்த்தியிருக்கும் நிலையில், ‘கட்டா குஸ்தி’ படத்தையும் பிரமாண்டமான முறையில் எடுக்கவிருக்கிறார்கள். கடந்த வாரம் படத்தின் முதல் காட்சிக்காக, நடிகர் கருணாஸை வைத்து தென்காசியில் ஷூட்டிங்கைத் தொடங்கியிருக்கிறார்கள். ஜூலை மாதம் ரிலீஸ் செய்யும் திட்டத்தில் ஷூட்டிங்கை வேகமாக நடத்திவருகிறார்களாம்!

உஷ்...

பெரிதும் சிறிதுமாகப் பல படங்களைத் தயாரித்துவரும் பிரமாண்ட படத்தயாரிப்பு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள், மிகுந்த குளறுபடியாக இருக்கின்றனவாம். அட்வான்ஸ் என்கிற பெயரில் பலருக்கும் வாரிக்கொடுத்த பெரும் தொகை கேட்பாரற்றுக் கிடக்கிறதாம். இதற்கிடையில் ‘அன்பளிப்பு கொடுத்தது’ எனப் பல ‘சி’களைக் கணக்கெழுதிக் காட்டுகிறார்களாம்!