
நாலு மணி வால்!
* ரஜினி, கமல் ஆகியோரைவைத்து பல ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, சில காலம் டி.வி சீரியல்களில் பிஸியாக இருந்தார். தற்போது, ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவாவைவைத்து ஹியூமர் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். ஹீரோயினாக நடிக்க அஞ்சலியிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். எட்டு வருடங்கள் கழித்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் இது.

* பெரும்பாலும் விளம்பரப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவந்த நயன்தாரா, ஒரு சில நகைக்கடை விளம்பரங்களில் மட்டுமே நடித்துவந்தார். ஆனால், தற்போது நிறைய விளம்பரப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறாராம். ஒரு விளம்பரத்துக்கு ஒரு கோடி ரூபாய் என்கிறார்கள்.
* துல்கர் சல்மான் தயாரிப்பில் ‘மணியாரயிலே அசோகன்’ என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார், அனுபமா பரமேஸ்வரன். இந்தப் படம், வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தில் அனுபமா உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ‘ஆடை’ திரைப்படம், நடிகை அமலா பாலுக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. இந்தநிலையில், இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்களாம். அதில் ஷ்ரத்தா கபூர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
* தினமும் மாலை 4 மணியானால் ஷிவானி நாராயணனின் இன்ஸ்டாகிராம் வாலில் வந்து விழுகிறது ஒரு சூடான புகைப்படம். அத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் ஆன்லைன் இளைஞர்கள் அங்கே ஷார்ப்பாக ஆஜராகிவிடுகிறார்கள். `பிக் பாஸ் 4’-ல் இவர் கலந்துகொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.