
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ்
‘குற்றம் 23’ படத்துக்குப் பிறகு, ஹீரோயின் சென்ட்ரிக் கதையில் நயன்தாராவை நடிக்கவைக்கக் காத்திருந்தார் இயக்குநர் அறிவழகன். அது நடைபெற தாமதமானதால் அடுத்த கதையை எழுதி அதற்கான பணிகளையும் தொடங்கிவிட்டார். இதில் அருண் விஜய் நாயகனாக நடிக்க, ரெஜினா கஸாண்ட்ரா நாயகியாக நடிக்கிறார்.

விஜய் இயக்கத்தில் தயாராகிவரும் ‘தலைவி’ என்ற ஜெயலலிதாவின் பயோபிக்கில், சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணியை அணுகியுள்ளதாம் படக்குழு.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாகவும், மலையாள நடிகை ரஜிஷா விஜயன் ஹீரோயினாகவும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, இந்த மாதம் 15-ம் தேதி திருநெல்வேலியில் தொடங்கவிருக் கிறது.

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக லொகேஷன் பார்க்கும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் இவர்களுடன் மலையாள நடிகர் லாலும் த்ரிஷாவும் லேட்டஸ்டாக இணைந்துள்ளனர்.
தெலுங்கு பட ஹீரோ நானியின் 25-வது படமான ‘வி’ இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. உடனே அடுத்த படத்தையும் கமிட் செய்துவிட்டார். ஷிவா நிர்வானா இயக்கும் இந்தப் படத்தில் நானிக்கு ஜோடி ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ். படத்துக்கு ‘டக் ஜெகதீஷ்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

‘கிடாரி’ பட இயக்குநர் பிரசாத் முருகேசன், அடுத்து ஆதித்யா பாஸ்கரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். அதில் நாயகியாக ‘96’ படத்தின் குட்டி ஜானுவான கெளரி கிஷனை நடிக்கவைக்க முயல்கிறாராம்!
ம்யூட்
சமீபத்தில் அசுர வெற்றி கொடுத்த இயக்குநரின் கையில் காமெடி நடிகர் நாயகனாக நடிக்கும் படமும், வெளிச்ச நடிகரின் படமும் இருக்கின்றன. அதனால், பெரிய சம்பளம் கொடுத்து அந்த இயக்குநரை தன்வசம் இழுக்கப்பார்க்கிறாராம் தளபதி நடிகர்.
எடுத்து முடித்த தன் படம் வெளிவராததால் அப்செட்டில் இருந்த தேனி இயக்குநர், பெரிய கம்பேக் கொடுக்க நினைத்து தன் படங்களில் நடித்து பெயர் வாங்கிய ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். அவர்களோ, வெவ்வேறு படங்களில் பிஸியாக இருக்கிறார்கள். அதனால், ‘எனக்கு என் கதைதான் ஹீரோ. புதுமுகங்களை வைத்தே ஹிட் கொடுக்கிறேன் பாருங்கள்’ என்று கதையை அதிதீவிரமாக எழுதிவருகிறாராம்.