அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ் - DON ரகசியங்கள்

சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன்

தனக்கு மிக நெருக்கமான நண்பர்களைக் கதை கேட்க வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர்களும் ‘ஐயோ... இந்தக் கதை வேண்டவே வேண்டாம்’ என்றார்களாம்

சிவகார்த்திகேயனின் நடிப்பில் ரிலீஸாகி, வசூலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது ‘டான்.’

படம் குறித்து இதுவரை வெளிவராத சுவாரஸ்யமான ரகசியங்கள் இங்கே…

‘டான்’ கதையை உருவாக்கிய இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, முதலில் சிவகார்த்திகேயனை அணுகினார். சிவாவுக்குப் பிடித்திருந்தாலும், லைகா நிறுவனத்துக்குக் கதை கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. அதனால், ‘வேறு இயக்குநரைப் பார்க்கலாம்’ எனத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

மிஸ்டர் மியாவ் - DON ரகசியங்கள்
மிஸ்டர் மியாவ் - DON ரகசியங்கள்

அடுத்து, சிபி சக்கரவர்த்தி போய் நின்ற இடம் ஹிப்ஹாப் ஆதி இல்லம். ஆதிக்கும் கதை பிடிக்கவில்லை. அடுத்து அதர்வாவைச் சந்தித்துக் கதை சொன்னார் சிபி. ‘இந்தக் கதையெல்லாம் வொர்க்அவுட்டே ஆகாது’ எனச் சொல்லித் தவிர்த்துவிட்டார் அதர்வா.

மீண்டும் சிவகார்த்திகேயனிடமே வந்து பல ஹீரோக்களை அணுகி, படாதபாடு பட்ட கதையைச் சொல்லியிருக்கிறார் சிபி. சிவகார்த்திகேயனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. லைகாவின் புது டீமிடம் மறுபடி கதை சொல்ல அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். அந்த டீமும் கதை கேட்டு உதட்டைப் பிதுக்கிவிட்டது.

தனக்கு மிக நெருக்கமான நண்பர்களைக் கதை கேட்க வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர்களும் ‘ஐயோ... இந்தக் கதை வேண்டவே வேண்டாம்’ என்றார்களாம். ‘இத்தனை பேர் வேணாம்னு சொல்றதாலேயே இந்தக் கதை எனக்கு வேணும்னு தோணுது. நாம அவசியம் செய்வோம்…’ எனச் சொல்லி சிபிக்கு அட்வான்ஸ் கொடுக்கச் சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மிஸ்டர் மியாவ் - DON ரகசியங்கள்
மிஸ்டர் மியாவ் - DON ரகசியங்கள்

ஒருவழியாக ஷூட்டிங் தொடங்கியது. கூடவே பிரச்னையும்! ஒவ்வொரு சீனிலும் ஏராளமான ஷாட்டுகளை எடுக்கத் தொடங்கினார் இயக்குநர் சிபி. எஸ்.ஜே.சூர்யா தொடங்கி படத்தில் நடித்த பலரும், ‘இத்தனை ஷாட்டுகள் ஏன் எடுக்கிறார்கள்’ எனத் திணறிப்போனார்களாம். ‘இன்னிக்கு வர்ற பசங்க என்ன பண்றாங்கன்னே புரியலை…’ என யூனிட் முழுக்க விமர்சனங்கள்.

“ஒரு படம் நல்லா வரத்தானே இயக்குநர் போராடுறார். அதிக ஷாட்ஸ் எடுக்க அவருக்கு என்ன ஆசையா?” என அப்போதும் முழு ஆதரவாக நின்ற ஒரே ஆள் சிவகார்த்திகேயன் மட்டுமே.

கதை தொடங்கி ஷூட்டிங் வரை நீடித்த சிக்கலால், லைகா தரப்புக்கு நிம்மதியில்லை. படம் ரெடியாகி, பிரிவியூ போடப்பட்டிருக்கிறது. லைகா சுபாஷ்கரன் லண்டனிலிருந்து வந்து படம் பார்த்துவிட்டு, மொத்தக் குழுவையும் திட்டித் தீர்த்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ் - DON ரகசியங்கள்
மிஸ்டர் மியாவ் - DON ரகசியங்கள்

தமிழ்நாடு விநியோக உரிமையை ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனத்துக்குத் தள்ளிவிட முடிவெடுத்தது லைகா. தன் நெருங்கிய நண்பர்களோடு படம் பார்க்க வந்திருக்கிறார் உதயநிதி. அவருக்குப் படம் கொஞ்சம்கூட திருப்தியைக் கொடுக்கவில்லையாம். அதை மறைக்காமல் சொன்ன உதயநிதி, “படத்தில் 20 நிமிஷத்தை வெட்டிருங்க…” என்றாராம். உதயநிதியின் நண்பர்களும் தலையில் அடித்துக்கொண்டுதான் கிளம்பியிருக்கிறார்கள்.

சுபாஷ்கரன், உதயநிதி உள்ளிட்ட பலரும் படத்தின் நீளத்தைக் குறைக்கச் சொன்னதால், இயக்குநர் சிபி சக்கரவர்த்தியிடம் அது குறித்துப் பேசியிருக்கிறார்கள். ‘ஒரு நிமிடம்கூடப் படத்தைக் குறைக்க மாட்டேன்’ என அவர் சொல்ல, சிவகார்த்திகேயனும் அந்த உறுதியை மதித்திருக்கிறார். ஹீரோ பேச்சை லைகாவால் மீற முடியவில்லை. அதனால், ‘போட்ட காசு கிடைச்சாலே போதும்’ என்கிற மனநிலையில் படத்தை ரிலீஸ் செய்தது லைகா.

மிஸ்டர் மியாவ் - DON ரகசியங்கள்
மிஸ்டர் மியாவ் - DON ரகசியங்கள்

எல்லோரின் கணிப்பையும் மீறி, வசூலில் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது ‘டான்’ படம். ரஜினி, விஜய் வரிசையில் சிவகார்த்திகேயன் இடம்பிடித்துவிட்டதாகக் கொண்டாடுகிறார்கள் தியேட்டர்காரர்கள். “இந்தக் கதையை நாங்க பண்ண வேணாம்னு சொன்னது உண்மைதான். எல்லாருடைய கருத்துகளையும் கடந்து, சிவகார்த்திகேயன் வைத்த நம்பிக்கைக்குக் கிடைத்த பரிசுதான் இந்த மெகா வெற்றி…” என்கிறார்கள் சிவாவின் நண்பர்கள்.

‘சினிமாவை யாராலும் எப்போதும் கணிக்கவே முடியாது’ என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணமாகியிருக்கிறது ‘டான்!’