‘விக்ரம் வேதா’ படத்தை இந்தியிலும் இயக்கிக் கொண்டிருக்கும் புஷ்கர் - காயத்ரி தம்பதியர், தற்போது தமிழில் வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரிக்கவிருக்கிறார்கள். கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் ஆகியோர் நடிக்கும் இந்த வெப் சீரிஸ், பத்து எபிசோடுகள் கொண்டது. அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரிஸுக்கு ‘சுழல்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, கதைகள் கேட்டுவந்த லாஸ்லியா, தற்போது இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ‘ஃப்ரெண்ட்ஷிப்’ படத்திலும், நடிகர் ஆரிக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

ரஜினியை வைத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, தங்கையாக கீர்த்தி சுரேஷ், நெகட்டிவ் ரோலில் குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் சமீபத்தில் நயன்தாராவும் இணைந்திருக்கிறார். நயனுக்கு வழக்கறிஞர் கேரக்டராம்.

‘தசாவதாரம்’ படத்தின்மூலம் தமிழுக்கு அறிமுகமான பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். பிறகு, ‘ஒஸ்தி’ படத்தில் சிம்புவுடன் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். நீண்ட நாள்களுக்குப் பிறகு தற்போது ‘பாம்பாட்டம்’ என்கிற ஹாரர் த்ரில்லர் படத்தில் நடிப்பதன்மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு நிறைய ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றனவாம்.

விஜய் இயக்கிவரும் ‘தலைவி’ படத்தில் பிஸியாக இருக்கிறார் கங்கனா ரனாவத். இந்தப் படம் முடிந்த பிறகு, கண்ணகி கதையைப் படமாக எடுக்கவிருப்பதாகவும், அதில் நடிக்க கங்கனாவிடமே இயக்குநர் விஜய் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கான ‘நாரப்பா’ படத்தில் வெங்கடேஷ், பிரியாமணி நடிக்கின்றனர். படப்பிடிப்பு, கோவில்பட்டியில் நடந்துவருகிறது. ‘அசுரன்’ படத்தில் அம்மு அபிராமி நடித்த கேரக்டரில் நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ம்யூட்
‘மாஸ்’ நடிகர் நடிக்கும் வலுவான படத்தை வடக்கத்தி தயாரிப்பாளரும் பெரிய மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர். தயாரிப்பாளருக்கு கொஞ்சம் பணச்சிக்கல். அதனால் சில ஃபைனான்ஷியர்களை அணுகியிருக்கிறார். இதை முன்வைத்து, பெரிய மீடியா நிறுவனம் படத்திலிருந்து விலகிவிட்டது என்று தகவல்கள் பரவின. அது உண்மையில்லையாம்!