விஜய்யின் 66-வது படம் மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது. தெலுங்கில் பெரும் ஹிட் அடித்த ‘தோழா’, ‘மகரிஷி’, ‘எவடு’ படங்களை இயக்கிய வம்சி இந்தப் படத்தை இயக்குகிறார். ‘கடந்த 20 வருடங்களில் இப்படியொரு கதையை நான் கேட்டது கிடையாது’ என விஜய் சிலாகித்ததாகப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ சொல்ல, எதிர்பார்ப்பு இப்போதிருந்தே எகிறத் தொடங்கியிருக்கிறது. மிகப்பெரிய சமூக மாற்றத்தை விஜய் உருவாக்குவது மாதிரியான கதை என்கிறது முதற்கட்ட தகவல். ‘விஜய்யின் அரசியல் நுழைவுக்கு இந்தப் படம் அச்சாரமாக அமையும்’ என்கிறார்கள் கதை குறித்து அறிந்தவர்கள்!
“எவ்வளவு சறுக்கலை எதிர்கொண்டாலும், நிச்சயம் மீண்டும் படத் தயாரிப்புக்கு வருவேன்” எனச் சவால் விட்டவர் பிரமாண்டத் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். சொன்னபடியே அவர் தயாரிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜென்டில்மேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை 28 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிக்கிறார். ஐந்து மொழிகளில் தயாராகும் படத்துக்கு, இசையமைப் பாளராக கீரவாணியை நியமித்திருக்கும் குஞ்சுமோன், அடுத்தகட்ட விவரங்களை விரைவில் அறிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார். இந்தப் படமும் மிரளவைக்கும் பிரமாண்டப் படமாகவே இருக்கும் என்கிறார்கள்!
‘புஷ்பா’ படத்தில் ‘உ… சொல்றியா மாமா’ பாடலை மயக்கும் குரலில் பாடிக் கிறங்கடித்த ஆண்ட்ரியா, நுரை பொங்கும் பாத் டப்பில் குளிக்கிற படங்களை சமீபத்தில் வெளியிட்டு இன்னும் அவரது ரசிகர்களைச் சூடேற்றியிருக்கிறார். ‘பிசாசு - 2’, ‘மாளிகை’, ‘கா’, ‘வட்டம்’ எனப் பல படங்களை ரிலீஸுக்கு வரிசையாக வைத்திருக்கும் ஆண்ட்ரியா, காலத்துக்கும் பெயர் சொல்லத்தக்க தனித்துவமான கதாபாத்திரத்தை எதிர்பார்க்கிறாராம். ‘பிசாசு -2’ படத்தில் ஏற்று நடித்த பாத்திரம், ஆண்ட்ரியாவுக்கு மிகுந்த மனநிறைவைக் கொடுத்ததாம்!
தமிழில் பாலா இயக்கத்தில் நடிக்க மிகுந்த ஆர்வத்தோடு இருந்த நடிகர் ராணா, அந்தப் படம் கைவிடப்பட்டதால் மிகுந்த வருத்தமாகிவிட்டார். நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்க ராணா ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். கடந்த வாரம் சென்னை வந்த ராணா, சில இயக்குநர்களைப் பிரத்யேகமாகச் சந்தித்துக் கதை கேட்டிருக்கிறார். கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஆர்வம்கொண்ட ராணா, நடிப்புக்கு வருவதற்கு முன் கிராபிக்ஸ் வேலைகளில் சில காலம் பணியாற்றியிருக்கிறார். முழுநீள கிராபிக்ஸ் நுட்பத்தைக்கொண்ட கதைக்காகக் காத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறாராம்!
உஷ்...
ஸ்ட்ராங்கான படத்தின் ரிலீஸுக்கு முன்னரே அடுத்த படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்கச் சொல்லி உத்தரவு போட்டுவிட்டாராம் டாப் நடிகர். அதனால், அவசரகதியில் கதை விவாதத்தை நடத்திவருகிறார்கள். அடுத்த மாதமே ஷூட்டிங் ஆரம்பமாம். ஸ்ட்ராங்க் படத்தில் பெரும் முதலீட்டைப் போட்டுவிட்டுக் காத்திருக்கும் தயாரிப்பாளருக்கு உதவும் நோக்கத்தில்தான், ஷூட்டிங்கை இந்த அளவுக்கு வேகப்படுத்துகிறாராம் டாப் நடிகர்!