அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

`லாக்டெளனில் நேரடி ரிலீஸாக ஓ.டி.டி தளங்களில் வெளியான எந்தப் படமும் லாபம் தரவில்லை’ என்ற புலம்பல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

* ஓ.டி.டி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாகிறார் நடிகை தமன்னா. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்குச் சொந்தமான ‘ஆஹா’ (Aha) ஓ.டி.டி தளத்துக்கு ‘நீயா நானா?’ போன்ற ஒரு டாக்‌ ஷோ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவிருக்கிறார். ஒரு எபிசோடுக்கு சம்பளம் மட்டும் 7 லட்சம் ரூபாய் என்கிறார்கள்!

* ‘ஆகஸ்ட் மாதம் தடுப்பு மருந்து வந்துவிடும்; தீபாவளிக்குத் தியேட்டர்களைத் திறந்துவிடலாம்’ போன்ற உற்சாகக் குரல்கள் கோலிவுட்டில் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. கடந்த வாரம் இலங்கையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு ‘அசுரகுரு’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்கள் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கின்றன. தவிர பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் தியேட்டர்களைத் திறந்திருக்கிறார்கள். எனவே, விரைவில் இந்தியாவிலும் தியேட்டர்கள் திறக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

* கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்த கேப்டன் கபில் தேவ்-ன் பயோகிராபி படம் ‘83.’ இந்தி, தமிழ் எனப் பல்வேறு மொழிகளில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் கபில் தேவ்-ஆக ரன்வீர் சிங்கும், கபிலின் மனைவியாக ரன்வீர் சிங்கின் ரியல் மனைவி தீபிகா படுகோனும் நடித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஏப்ரலில் ரிலீஸுக்கு ரெடியாக இருந்த இந்த ‘83’, கொரோனாவால் அப்படியே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் டிசம்பரில் உலகம் இயல்புநிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதால் 2020 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ‘83’-ஐ ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.

தமன்னா - ரித்திகா சிங்
தமன்னா - ரித்திகா சிங்

* `லாக்டெளனில் நேரடி ரிலீஸாக ஓ.டி.டி தளங்களில் வெளியான எந்தப் படமும் லாபம் தரவில்லை’ என்ற புலம்பல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. இந்தியில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா இணைந்து நடித்த ‘குலாபோ சித்தாபோ’ படத்தை சுமார் 65 கோடி ரூபாய்க்கு வாங்கி வெளியிட்டது அமேஸான். படத்தின் தயாரிப்புச் செலவுகளைவிட 20 கோடி ரூபாய்க்கு அதிகமாக வாங்கிய அமேஸானுக்கு இந்தப் படம் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமேஸான் எதிர்பார்த்த அளவுக்குப் புதிதாக சப்ஸ்கிரைபர்கள் கூடவில்லை என்பதுடன், சப்ஸ்கிரைப் செய்திருந்த பலருமே இந்தப் படத்தைப் பார்க்கவில்லை என்ற புள்ளிவிவரத்தைப் பார்த்து அதிர்ந்துபோயிருக்கிறது அமேஸான். அதனால் பெரிய பட்ஜெட் படங்களை இப்போதைக்கு வாங்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறதாம் அந்த நிறுவனம்.

* அருண் விஜய் - ரித்திகா சிங் நடிக்கவிருக்கும் படம் ‘பாக்ஸர்.’ இந்தப் படத்தில் வில்லனாக சிம்பு நடிக்கிறார் என்று சொல்லித்தான் அருண் விஜய்யிடம் தயாரிப்பாளர் மதியழகன் கால்ஷீட் வாங்கினாராம். திடீரென இப்போது, ‘‘நீங்கள் நடிக்க வேண்டும் என்று என்னை நீண்டகாலமாக வற்புறுத்தி வந்தார் சிம்பு. அதனால், அவருக்கு பதிலாக இந்தப் படத்தில் நானே வில்லனாக நடிக்கப்போகிறேன்’’ என்று மதியழகன் சொல்ல... செம அப்செட்டில் இருக்கிறாராம் அருண் விஜய். `பெரும்தொகையை அட்வான்ஸாகக் கொடுத்து அருண் விஜய்யைச் சிக்கவைத்துவிட்டார்கள்’ என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.