அலசல்
சமூகம்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் மியாவ்

அருண் விஜய்யை ஹீரோவாகவைத்து போலீஸ் படம் எடுக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

* இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய சினிமா துறைகள் நேரடியாக அமேஸான் உள்ளிட்ட ஓ.டி.டி ரிலீஸுக்கு `ஓகே’ சொல்லிவிட, அங்கெல்லாம் தியேட்டர்கள் தரப்பில் சர்ச்சை கிளப்புகிறார்கள். ஆனால், தெலுங்கு சினிமாதுறையில் நிலைமையே வேறு. அங்கே பெரும்பலத்துடன் இருக்கும் தயாரிப்பாளர்களே ஓ.டி.டி தளங்களை வைத்திருக்கிறார்கள். சிரஞ்சீவியின் உறவினரும் நடிகருமான அல்லு அர்ஜுன், `ஆஹா’ (Aha) என்ற பெயரில் ஓ.டி.டி தளத்தை நடத்துகிறார். இந்தத் தளத்துக்கான படங்கள், வெப்சீரிஸ்களை வாங்கத்தான் அதிக அளவில் பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றனவாம்.

* அருண் விஜய்யை ஹீரோவாகவைத்து போலீஸ் படம் எடுக்கிறார் இயக்குநர் மிஷ்கின். இதற்கிடையே, சிம்புவைவைத்து அடுத்து இயக்கும் படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளும் நடக்கின்றன. இந்தப் படத்தில் சிம்புவுக்கு வில்லனாக வடிவேலுவை நடிக்கவைக்கப் பேசியிருக்கிறார்கள். இதுதவிர, முக்கியமான கேரக்டரில் நடிக்க இந்தி நடிகர் நவாஸுதின் சித்திக்கிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

* கொரோனாவில் சினிமா உலகமே முடங்கியிருந்தாலும் அடுத்தடுத்த படங்களுக்கான பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் தொடர்கின்றன. தனுஷ் ‘கர்ணன்’ பட ஷூட்டிங்கை முடித்துவிட்ட நிலையில், அடுத்து கார்த்திக் நரேன் மற்றும் செல்வராகவனுடன் படம், இந்தியில் ஒரு படம் எனத் தயாராக இருக்கிறார். தவிர, புதிதாக மித்ரன் ஜவஹர் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களை இயக்கியவர்தான் இந்த மித்ரன் ஜவஹர்.

* `அடுத்த நயன்தாரா’ எனக் கொண்டாடப்படும் ராஷ்மிகா மந்தனா, இப்போதுவரை தமிழில் அறிமுகமாகவில்லை. கார்த்தியுடன் ராஷ்மிகா நடித்திருக்கும் ‘சுல்தான்’ படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார். ‘ஹீரோயினாக முதன்முதலில் கன்னடத்தில் அறிமுகமாகியிருந்தாலும், குழந்தையாக இருக்கும்போதே என்னை அட்டைப்படத்தில் வைத்து அழகுபார்த்தது தமிழ் பத்திரிகைதான்’ என இன்ஸ்டாவில் அப்டேட் தட்டியிருக்கிறார் ராஷ்மிகா.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா

* ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’ படத்தின் ஓ.டி.டி உரிமை அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் என இரண்டு தளங்களுக்குமே விற்கப்பட்டிருக்கிறது. விஜய் இயக்கத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்திருக்கும் இந்தப் படம் தமிழ், இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராகியிருப்பதால் 55 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியிருக்கிறது என்கிறார்கள். ஆனால், நேரடி ஓ.டி.டி ரிலீஸ் இல்லை. தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகுதான் ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆகுமாம்.