`நடிகை வரலட்சுமிக்கு விரைவில் திருமணம்’ என்பதுதான் சமீபத்திய வைரல் செய்தி. ஆனால், ‘எனக்கு இப்போதைக்கு திருமணம் இல்லை’ என மறுக்கிறார் வரலட்சுமி. கைவசம் இருக்கும் படங்களை வரலட்சுமி நடித்து முடிக்கவே இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்பதால், இப்போதைக்கு திருமணம் இல்லை என்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், இயக்குநர் ஷங்கரின் பட்டறையில் பயிற்சிபெற்ற அருண் பிரசாத் இயக்கிய படம் ‘4ஜி.’ படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், ஓ.டி.டி ரிலீஸுக்குப் பேசப்பட்டுவந்தது. இதற்கிடையே கடந்த வாரம் கோவை அருகே சாலைவிபத்தில் பலியானார் அருண் பிரசாத். ‘‘ஓ.டி.டி ரிலீஸுக்காகப் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், தியேட்டர் ரிலீஸுக்குத்தான் அருண் ஆசைப்பட்டார். அவரின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றிவிடுவேன். ‘4ஜி’, தியேட்டர்களில்தான் ரிலீஸாகும்’’ என்கிறார் படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘தேவர் மகன்’ படத்தின் இரண்டாம் பாகம்தான் ‘தலைவன் இருக்கின்றான்.’ இந்தப் படத்தில் அரசியல் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்தப் படத்தில் ‘தேவர் மகன்’ சிவாஜி போலவே கமலுக்கு ஒரு கெட்டப் உண்டாம். ‘தேவர் மகன்’ படத்தில் சாதி மையமாக இருந்ததுபோல் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் அரசியல் மையமாக இருக்குமாம். வடிவேலுவுடன் கமல் அரசியல் பகடி செய்வதுபோல் பல காட்சிகள் எழுதப்பட்டிருக்கின்றனவாம்.

ஜூன் முதல் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைக்கலாம் எனக் கசிந்திருக்கும் செய்தியால், கொஞ்சம் உற்சாகமாகியிருக்கிறது திரைத் துறை. பல பெரிய நடிகர்களின் அடுத்த படங்கள் கிராமத்துக் கதைகள் என்பதால், தென் மாவட்டங்களில் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்கிறார்கள். இதனால், நடிகர்களை இறுதிசெய்யும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. நடிகர்கள் பலரும் முன்பு வாங்கிய சம்பளத்திலிருந்து சில சதவிகிதத்தை தாங்களாகவே முன்வந்து குறைத்திருக்கிறார்களாம்.
இந்தியில் அமிதாப் பச்சன் படம் முதல் தமிழ், மலையாளம் என பல்வேறு மொழிப்படங்களும் ஓ.டி.டி நேரடி ரிலீஸுக்கு வந்துவிட்ட நிலையில், தெலுங்குப் பட உலகம் எந்தப் படத்தையும் விற்கவில்லை. மற்ற மொழிகளில் நேரடியாக ஓ.டி.டி-யில் ரிலீஸாகும் படங்களுக்கு என்ன மாதிரியான வரவேற்பு இருக்கிறது என்பதைப் பொறுத்தே தெலுங்கு திரையுலகம் முடிவெடுக்குமாம்.