Published:Updated:

மிஸ்டர் மியாவ்

தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும்விதமாக ‘கூழாங்கல்’ படம் ஆஸ்கர் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வாகியிருக்கிறது

பிரீமியம் ஸ்டோரி

தீபாவளி ரேஸில் அனைத்துப் படங்களையும் பின்னுக்குத் தள்ளி, ‘அண்ணாத்த’ மட்டுமே அதகளமாக ரிலீஸ் ஆகிறது. கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வெளியிட… பிறகென்ன, திரையரங்குகளில் நூறு சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது தமிழக அரசு. “இதுவரையிலான ரஜினி படங்களிலேயே அதிக வசூலைக் குவிக்கப்போகிற படமாக ‘அண்ணாத்த’தான் இருக்கும்” என்கிறார்கள் வழக்கம்போல. பார்ப்போம்!

“ ‘மாநாடு’ படத்துக்கு டப்பிங் பேச மறுக்கிறார்” என சிம்பு மீது மீண்டும் பஞ்சாயத்து பாய்ந்திருக்கிறது. ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்புவுக்கு மிக நெருக்கமானவர். சிம்புவை நம்பிப் பலரும் பணம் போடத் தயங்கிய காலத்திலேயே, ‘மாநாடு’ படத்துக்காகக் கோடிகளை அள்ளி இறைத்தவர். ஆனாலும், கடைசிக்கட்ட நெருக்கடி நேரத்திலும், ‘சம்பள பாக்கியை முழுவதுமாகக் கொடுத்தால் தான் டப்பிங்கை முடித்துக்கொடுப்பேன்’ என அடம்பிடிக்கிறாராம் சிம்பு. சமரசப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடக்கிறது.

தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தலில் 632 வாக்குகளில் 533 வாக்குகளைப் பெற்று பொதுச்செயலாளராக வெற்றிபெற்றிருக்கிறார் இளவரசு. இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தேர்தல் நேரத்தில் பரப்புரை செய்யக்கூட அவகாசம் இல்லாமல், உக்ரைன் நாட்டில் படப்பிடிப்பில் இருந்தாராம். ஆனாலும், கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வேல்ராஜை வெல்ல வைத்திருக்கிறார்கள் சங்கத்தினர். விரைவில் சங்கத்தின் சார்பில் பிரமாண்ட விழா நடத்தவிருக்கிறார்களாம்.

ரிது வர்மா
ரிது வர்மா

‘டாக்டர்’ படத்தில் நடித்தபோதே சிவகார்த்திகேயனின் ‘டான்’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படங்களில் கமிட்டாகி கோடம்பாக்கத்தையே திகைக்கவைத்தவர் பிரியங்கா மோகன். ‘டாக்டர்’ படம் ஹிட் அடித்தாலும், படத்தில் பிரியங்காவுக்குச் சொல்லிக்கொள்ளும்படி நடிப்பு வாய்ப்பு இல்லை. அவருடைய முழு நடிப்புத் திறமையை வெளிக்காட்டும்விதமாக ‘டான்’, ‘எதற்கும் துணிந்தவன்’ இரண்டு படங்களும் இருக்கும் என்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும்விதமாக ‘கூழாங்கல்’ படம் ஆஸ்கர் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வாகியிருக்கிறது. கடுமையாக நடந்த போட்டியில், ‘கூழாங்கல்’ படத்துக்காக டெல்லியில் மிகவும் போராடியவர் ஏவிஎம் வாரிசுகளில் ஒருவரான சண்முகம். “கிராமத்தையும் பாசத்தையும் ஒருசேரப் பிரதிபலிக்கிற ‘கூழாங்கல்’ படம், நிச்சயம் ஆஸ்கர் அடிக்கும்” என இறுதிவரை உறுதியாக நின்று முழங்கினாராம் சண்முகம். ஆஸ்கரோடு வரட்டும் கூழாங்கல்!

உஷ்…

நீதிமன்ற விவகாரத்தில் இறுதிவரை உறுதியாக நின்று போராட முடிவெடுத்துவிட்டாராம் மாஸ்டர் நடிகர். ‘சட்ட மோதல் வேண்டாம்’ என அட்வைஸ் கொடுத்தவர்களிடம், ‘மோதிப் பார்ப்போம்’ எனத் துணிந்து சொன்னாராம். எதிர்கால அரசியல் என்ட்ரிக்கு இந்த விவகாரம்தான் அச்சாரமாக அமையப்போகிறது என்றும் சொல்கிறாராம். #ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா... என் பேச்ச நானே கேக்க மாட்டேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு