Published:Updated:

மிஸ்டர் மியாவ்

எதிர்மறை விமர்சனங்கள் ஏற்படுத்திய பாதிப்பு போதாது என அடைமழையும் சேர்ந்துகொண்டு ‘அண்ணாத்த’ படத்துக்குச் சோதனையை உருவாக்கிவிட்டது.

பிரீமியம் ஸ்டோரி

அஜித்தின் ‘வலிமை’, ராஜமௌலியின் ‘RRR’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படங்கள் பொங்கல் ரிலீஸுக்குத் தயாராவதால், விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டார்கள். ஆனால், ‘கே.ஜி.எஃப் - 2’ ஏப்ரல் மாதம் ரிலீஸுக்கு ரெடியாவதால், ‘பீஸ்ட்’ டீம் ரொம்பவே குழப்பத்தில் இருக்கிறது. அஜித், விஜய் படங்களின் அளவுக்கு ‘கே.ஜி.எஃப்-2’ படத்துக்குத் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பிருப்பதால், மே மாத விடுமுறைக்கு ‘பீஸ்ட்’ தள்ளிப்போகலாம் என்கிறார்கள்.

‘மாநாடு’ படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் சிம்பு. “இந்தப் படத்தின் வெற்றிதான் சினிமாவில் என்னைத் திட்டமிட்டு வீழ்த்த நினைக்கும் சதிகாரர்களுக்கான பதிலடி” என நெருங்கியவர்களிடம் சொல்லிவருகிறார். படத்தின் ரிலீஸ் நெருங்கும் நேரத்திலும் போதிய விளம்பரங்கள் இல்லாததால், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் இது குறித்துப் பேசியிருக்கிறார் சிம்பு. ரிலீஸ் நேரத்தில் சமூக வலைதளங்களை மொத்தமாக வளைத்து புரொமோஷனைக் கலக்கத் திட்டமிட்டுவருகிறார்கள்.

சிங்கப்பூர் வாழ் தமிழர் நலனுக்காக, தனியார் நிறுவனம் ஒன்று இயக்குநர் சசிகுமாரை வைத்து தீபாவளி சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்தியது. இதற்காகச் சில லட்சங்களை அந்த நிறுவனம் சசிகுமாருக்குக் கொடுக்க, “தமிழ்நாட்டிலிருந்து போய் சிங்கப்பூரில் வேலை பார்க்கும் தமிழர் நலனுக்காகக் கொடுத்துவிடுங்கள்” எனச் சொல்லி, அவர்களுக்கே வழங்கிவிட்டாராம். “இதுவரை எங்கள் நிகழ்வில் பங்கெடுத்த எந்த நடிகரும் இப்படிச் செய்ததில்லை” என நெகிழ்ந்து பாராட்டியிருக்கிறது அந்த நிறுவனம்.

எதிர்மறை விமர்சனங்கள் ஏற்படுத்திய பாதிப்பு போதாது என அடைமழையும் சேர்ந்துகொண்டு ‘அண்ணாத்த’ படத்துக்குச் சோதனையை உருவாக்கிவிட்டது. ஆனாலும், அது குறித்துப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத சன் பிக்சர்ஸ் நிறுவனம், மீண்டும் ரஜினியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ரஜினிக்கு ஏற்கெனவே அட்வான்ஸ் கொடுத்திருக்கும் நிலையில், ‘யாரை இயக்குநராகத் தேர்ந்தெடுக்கலாம்?’ என அவரிடம் கேட்டிருக்கிறது சன். “சிவா வொர்க் பண்ற ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. என்னை கவனமா ஹேண்டில் பண்றார்” என்றாராம் ரஜினி. விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக சிவாவுடன் அடுத்த படம் செய்யவே ரஜினி விரும்புகிறாராம்.

மிஸ்டர் மியாவ்

ஜெய் பீம்’ ரிலீஸ் நேரத்தில், இருளர் நலனுக்காக ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார் சூர்யா. இதற்கிடையில், பொய் வழக்கால் பாதிக்கப்பட்ட ராஜாக்கண்ணுவின் குடும்பத்துக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக நடிகர் லாரன்ஸ் அறிவிக்க, அந்தக் குடும்பத்தை நோக்கி உதவிகள் நீள்கின்றன. ஒரு படம் எத்தகைய மாற்றத்தையெல்லாம் ஏற்படுத்தும் என்பதற்கு ‘ஜெய் பீம்’ ஆகச்சிறந்த உதாரணமாகியிருக்கிறது!

உஷ்…

விமான நிலையத்தில் ‘கூத்துப்பட்டறை’ நடிகர் தாக்கப்பட்ட சம்பவம், பெரிய அளவில் பரபரப்பாகாமல் அப்படியே அமுங்கிப்போனது. “ஒரு தமிழ் நடிகர் தாக்கப்பட்ட விவகாரத்துக்கு எந்த நடிகரும் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?” என்கிற கேள்வி பல தரப்பிலும் பெரிதானது. உண்மையில், இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிடச் சொன்னதே தாக்குதலுக்குள்ளான அந்த நடிகர்தானாம். முக்கிய ஊடகங்களுக்கும் அவரே போன் பண்ணி அமைதிகாக்கச் சொன்னாராம். #இதுவும் கடந்து போகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு