அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

ராஷி கண்ணா
பிரீமியம் ஸ்டோரி
News
ராஷி கண்ணா

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை முடித்த பிறகு, தீவிரமாகத் திரைப்பக்கம் வரவிருக்கிறார் கமல்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யும் சூர்யாவும் ஒன்றாகச் சந்தித்ததைவைத்து ஏகப்பட்ட பரபரப்பு. ஏற்கெனவே ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருப்பதால், மீண்டும் இணைந்து நடிப்பது குறித்துப் பேசியதாகப் பிரளயமே கிளம்பியது. ஆனால், உண்மையில் இருவருமே சினிமா குறித்து எதுவுமே பேசவில்லையாம். இருவரும் மனம்விட்டுப் பேசியதில், குடும்பத்துக்கு அப்பாற்பட்டுப் பேசிய விஷயம் என்றால், மன்றத்தினர் பலரும் உள்ளாட்சித் தேர்தலில் வென்றது குறித்து விஜய் சொன்னதுதானாம். சூர்யாவும், ‘நல்ல விஷயம்’ என இன்முகத்தோடு பாராட்டினாராம்!

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை முடித்த பிறகு, தீவிரமாகத் திரைப்பக்கம் வரவிருக்கிறார் கமல். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’, ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ இரண்டு படங்களையும் சீக்கிரமே முடிக்கவிருக்கும் கமல், அடுத்து மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன், பா.இரஞ்சித், மறுபடியும் லோகேஷ் கனகராஜ் எனப் பெரிய திட்டத்தோடு ரெடியாகிறார். இதற்கிடையில் பக்கா காமெடிக் கதை ஒன்றையும் எழுதிவரும் கமல், அதை அவரே இயக்கும் ஐடியாவில் இருக்கிறார்.

‘பருத்திவீரன்’ வெற்றிக்குப் பிறகு, விஜய்க்காக இயக்குநர் அமீர் ‘கண்ணபிரான்’ என்கிற தலைப்பில் கதை எழுதினார். ஆனால், விஜய் உடனான சந்திப்பு சரிவர அமையாததால், அந்தக் கதையை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். இந்நிலையில் மீண்டும் ‘கண்ணபிரான்’ கதையைக் கையில் எடுத்திருக்கும் அமீர், விஜய்யின் ஹீரோயிசம் இப்போது பெரிதாகிவிட்டதால், அவருக்கு மாற்றாக சிவகார்த்திகேயனை அணுகத் திட்டமிட்டுவருகிறார். விரைவில் அமீர் - சிவகார்த்திகேயன் சந்திப்பு அமையலாம் என்கிறார்கள்.

சமீபத்தில் நாகார்ஜுனாவின் படத்திலிருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்ட நிலையில், கமலின் ‘இந்தியன் 2’ படத்திலும் அவருக்கு மாற்றாக வேறு ஹீரோயினைத் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதால், ஏற்கெனவே எடுத்த காட்சிகளுடன் மேட்ச் பண்ண முடியாத நிலையாம். விஷயத்தைப் படக்குழு சொல்ல, “உங்களுக்கு எது வசதியோ அதைச் செய்யுங்கள். நான் துளியும் கவலைப்பட மாட்டேன். தாயாகி நிற்கிற தருணத்தை நான் முழுவதுமாக அனுபவிக்க விரும்புகிறேன்” என்றாராம் காஜல்.

மிஸ்டர் மியாவ்


‘ஜெய் பீம்’ படத்தில் கொடூரமான சப் இன்ஸ்பெக்டராக நடித்த தமிழ், காவல்துறையில் பணியாற்றிவிட்டு திரைத்துறைக்கு வந்தவர். வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சூரிக்கு போலீஸ் மேனரிசங்களைச் சொல்லிக் கொடுப்பவரும் இவர்தான். இதற்கிடையில் விக்ரம் பிரபுவை வைத்து ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கி முடித்திருக்கும் தமிழ், படத்தைத் திரையில் பார்க்க ஆவலாக இருந்தார். ஆனால், படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. போலீஸ் பயிற்சியிலும், தேர்வுமுறையிலும் நடக்கும் உள்ளடி வேலைகளை அம்பலப்படுத்துகிற படமாக ‘டாணாக்காரன்’ இருக்கும் என்கிறார்கள்.

உஷ்…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும், மறுபடியும் கம்ப்ளீட் செக்கப் செய்துகொள்ள நினைக்கிறாராம் சூப்பர் நடிகர். அதனால், வெளிநாட்டுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட, ‘அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுவிட்டு அதன் பிறகு கிளம்புகிறேன்’ என்றாராம். விரைவில் அறிவிப்பு… விரைவில் பயணம். #உள்ளார எப்போதும் உல்லாலா... உல்லாலா!