
முன்னணிக் கதாநாயகியாக வலம்வரும் நிலையிலும், ஒற்றைப் பாடலுக்கு நடனமாட சமந்தா சம்மதம் தெரிவித்திருப்பது திரையுலகையே வியக்கவைத்திருக்கிறது
தீபாவளிக்கு ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை ரிலீஸ் செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், தமிழகம் முழுக்க தியேட்டர்களை ஆக்கிரமித்து அட்டகாசம் செய்தது. இந்த நிலையில், பொங்கல் நேரத்தில் அஜித்தின் ‘வலிமை’ படமும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படமும் மோதுவதாக இருந்தது. தியேட்டர் லாபியில் சன் நிறுவனம் மீண்டும் விளையாடுமோ எனப் பலரும் நினைத்த நிலையில், திடீரென இந்த மோதலிலிருந்து சன் பின்வாங்கிவிட்டது. ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் ரிலீஸ் தேதியை பிப்ரவரி 4 என அறிவித்துவிட்டது. இதனால், ‘வலிமை’ படத்துக்கு எவ்விதப் பிரச்னையுமின்றி அதிக தியேட்டர்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது!
இயக்குநர், வசனகர்த்தா, நடிகர் எனப் பன்முக அடையாளம் கொண்ட ஆர்.என்.ஆர்.மனோகர் கொரோனா பாதிப்பால் மறைந்தது, தமிழ்த் திரையுலகை ரொம்பவே துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருந்தும், அவரை கொரோனா பலி கொண்டதுதான் துயரம். பல படங்களில் நடித்துவந்தாலும், அடுத்து ஒரு படத்தை இயக்க ரொம்பவே ஆர்வமாக இருந்தாராம் மனோகர். அதற்கான திரைக்கதையை எழுதிக்கொண்டிருந்த நிலையில்தான், கொரோனா அவரை வீழ்த்தியிருக்கிறது!

‘துப்பறிவாளன்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய படங்களில் துளியும் கவர்ச்சியின்றி பக்கா ஹோம்லியாக நடித்த அனு இம்மானுவேல், அப்படியே தெலுங்குப் பக்கம் தாவிவிட்டார். ஆனால், அங்கு பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. மீண்டும் தமிழ்ப் பக்கம் திரும்பிய அம்மணிக்கு, ‘கொஞ்சமாவது கவர்ச்சி காட்டினால்தான் வாய்ப்பு’ எனச் சொல்லப்பட, லேட்டஸ்ட்டாக செம ஹாட் புகைப்படங்களை அப்லோடு பண்ணி திகைக்கவைத்திருக்கிறார்!
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாகப் பிரதமர் அறிவித்தவுடன், முதல் ஆளாக ட்வீட் போட்டு வரவேற்றவர் நடிகர் கார்த்தி. உயிரைத் தியாகம் செய்து போராடிய விவசாயிகளின் அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்டிய கார்த்தி, ‘போராடியவர்களுக்கும் புரிந்துகொண்ட அரசுக்கும் நன்றி’ என முத்தாய்ப்பாக முடித்ததுதான் ஹைலைட். கார்த்தியின் ட்வீட்டுக்குப் பிறகுதான் சினிமாத்துறையினர் பலரும் தைரியமாகத் தங்கள் கருத்துகளைப் பகிரத் தொடங்கினார்கள்!
முன்னணிக் கதாநாயகியாக வலம்வரும் நிலையிலும், ஒற்றைப் பாடலுக்கு நடனமாட சமந்தா சம்மதம் தெரிவித்திருப்பது திரையுலகையே வியக்கவைத்திருக்கிறது. தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தில், ஒற்றைக் கவர்ச்சிப் பாடலுக்கு ஆடத் தயாராகிவிட்டார் சமந்தா. ‘பணத்துக்காக நான் இதற்குச் சம்மதிக்கவில்லை, நட்புக்காக…’ என சமந்தா சொன்னாலும்கூட, அவர் ஒரு படத்தில் நடிக்க வாங்கும் தொகையைச் சம்பளமாகக் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள்!
உஷ்...
தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம், ‘நான் சொல்ற ஹாலிவுட் படத்தைப் பாருங்க… அதை அப்படியே தமிழுக்கு மாற்றிக் கதை பண்ணுங்க. நான் நடிக்கிறேன்’ எனச் சொல்லி அனுப்புகிறாராம் டான்ஸ் நடிகர். அவருடைய அடுத்தடுத்த படங்கள் ஊற்றிக்கொள்ள அதுதான் காரணமாம். #களவாடிய பொழுதுகள்!