அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

சஞ்சிதா ஷெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
சஞ்சிதா ஷெட்டி

இரண்டாவது இன்னிங்ஸை அட்டகாசமாகத் தொடங்கிவிட்டார் நடிகை சினேகா.

பிரபுதேவாவுடன் `பகீரா’ உட்பட நான்கைந்து படங்கள் சஞ்சிதா ஷெட்டி நடித்து வெளிவரவிருக்கின்றன. அவற்றில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ‘பார்ட்டி’யில் தனக்குப் பெயர் சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் என்பதால், அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறார். `பார்ட்டி’ வெளியானால் தமிழ் சினிமா உலகம் இன்னும் முக்கியக் கதாபாத்திரங்களைத் தனக்குத் தரும் என்ற நம்பிக்கைதான் அந்த எதிர்பார்ப்புக்குக் காரணம்.

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

இரண்டாவது இன்னிங்ஸை அட்டகாசமாகத் தொடங்கிவிட்டார் நடிகை சினேகா. ``அம்மா, அக்கா மாதிரியான பாத்திரங்களில் நடிக்க மாட்டேன்’’ என உறுதியாக இருந்தவர் ‘வேலைக்காரன்’ படத்தில் மகனை இழந்து வாடும் தாயின் பாத்திரத்துக்காகச் சம்மதித்தார். ஆனால், படத்தில் தன் நடிப்பு சரிவரக் காட்டப்படாமல்போக, சிறிது இடைவெளிவிட்டிருந்தார் சினேகா. இப்போது ‘சாட் பூட் த்ரீ’ என்கிற குழந்தைகள் படத்தில் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் சினேகா, அடுத்து ஓர் அட்டகாசமான கதையை டிக் செய்துவைத்திருக்கிறாராம். ‘சொல்லிவைத்து அவார்டு அடிக்கும் கதை’ என நெருக்கமானவர்களிடம் சொல்லும் சினேகா, இயக்குநர், ஹீரோ உள்ளிட்ட விஷயங்களைச் சொல்லாமல் ரகசியம் காக்கிறார்.

‘வலிமை’ படத்தின் மொத்த வேலைகளும் முடிந்திருக்கும் நிலையில், தீபாவளி அன்று ரிலீஸ் செய்தால் சிறப்பாக இருக்கும் எனத் தயாரிப்பாளர் போனி கபூரை நச்சரிக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். ரஜினியின் ‘அண்ணாத்த’ படமும் அன்றுதான் ரிலீஸாகிறது. ஏற்கெனவே ரஜினியின் ‘பேட்ட’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஒரே நாளில் ரிலீஸாகி வசூல் பாதியாகப் பிரிந்தது. அந்தச் சூழல் மறுபடி உருவாகாமல் தடுக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குநர் சிவாவைக் களமிறக்கியது. அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சிவா தன்னுடைய ‘அண்ணாத்த’ படத்துடன் ‘வலிமை’ மோத வேண்டாம் என அஜித்திடம் நேரில் பேசினாராம். இப்போது, ‘கிறிஸ்துமஸ் நாளில் `வலிமை’ ரிலீஸ் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம்.

உண்மையாகவும் இல்லாமல், கற்பனையாகவும் இல்லாமல் ‘தலைவி’ படம் பிசுபிசுத்துப் போனதால், தியேட்டருக்குப் பெரிய அளவில் கூட்டம் கூடவில்லை. தியேட்டர் வசூல் சுமார்தான் என்றாலும், சாட்டிலைட், ஓடிடி என கணிசமான லாபம் பார்த்துவிட்டது ‘தலைவி’ டீம். ஜெயலலிதா அரசியலில் வென்றது முதல் அப்போலோவில் அட்மிட்டானது வரையிலான கதையை ‘தலைவி’யின் இரண்டாம் பாகமாக எடுக்கத் தயாராகிவிட்டாராம் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘இரண்டாம் பாகத்திலாவது கற்பனையைக் குறைங்க சார்’ என விஜய்க்குக் கோரிக்கை வைக்கிறார்கள் அரசியல் புள்ளிகள்.

நாட்டாமை’, ‘சூர்ய வம்சம்’ இரண்டு படங்களின் கதைகளும் முதலில் சத்யராஜைத்தான் தேடிவந்தன. கதையில் பெரிய திருப்தி இல்லாமல் சத்யராஜ் திருப்பி அனுப்ப, அந்த இரண்டு படங்களும் சரத்குமாரை உச்சாணிக் கொம்புக்கு உயர்த்தின. இதனால் கதை கேட்கும் விஷயத்தில் மிக கவனமாக இருப்பார் சத்யராஜ். எழுத்தாளர் வேல ராமமூர்த்தியின் `குற்றப்பரம்பரை’ கதையும் இப்போது சத்யராஜுக்கு சொல்லப்பட்டு, அடுத்து சரத்குமாரை நோக்கி நகர்ந்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தக் கதையை வெப் சீரீஸாக இயக்கப்போகிறவர் நடிகர் சசிகுமார். தயாரிப்பு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். கதாநாயகன் சத்யராஜா, சரத்குமாரா என்பது மட்டும் இழுபறியாக நீடிக்கிறது.

உஷ்…

‘மாவு’ இயக்குநர் தற்போது இயக்கும் மிருகப்படம் அப்படியே ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பியாம். ஷூட்டிங்கில் பங்கேற்ற காமெடி நடிகர், தனக்கான காட்சிகளைக் கேட்டு, “இது ஒரு ஹாலிவுட் படத்துடைய சீனாச்சே… இதெல்லாம் ஹீரோவுக்குத் தெரிஞ்சா என்னவாகும்?” என்றாராம். “இந்தப் படத்தை ரெஃபரன்ஸுக்குக் கொடுத்ததே ஹீரோதான்” என இயக்குநர் சொல்ல, காமெடி நடிகர் கப்சிப். #காப்பியடிக்கும்போது கம்முன்னும்... ஷூட் பண்ணும்போது ஜம்முன்னும்... பிரச்னை வந்தா உம்முன்னும் இருக்கணும்!