அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் மியாவ் - பொன்னியின் செல்வன் ஸ்பெஷல்

த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
த்ரிஷா

படத்தில் நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள் என்று கதாபாத்திரங்கள் அணிந்திருக்கும் நகைகள், வைரங்கள் உட்பட எல்லாமே ஒரிஜினல் நகைகள்

`பொன்னியின் செல்வன்’ படத்தின் விளம்பரத்துக்காக இயக்குநர் மணி ரத்னம் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா முழுவதும் சுற்றிவருகிறார். அவருடனேயே வலம் வரும் படத்தின் முக்கிய நடிகர், நடிகையர் அவரது வேகத்தையும் சுறுசுறுப்பையும் பார்த்து மலைக்கிறார்களாம். `பொன்னியின் செல்வன்’ படத்தை ‘பான் இந்தியா’ படமாக்கத்தான் இந்த மெனக்கெடலா என்று யாரோ கேட்க, “அப்படியெல்லாம் இல்லை. தமிழ் இலக்கியத்தில் இப்படி ஒரு காவியம் இருப்பதை இந்தியாவிலுள்ள அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்” என்று சொல்கிறாராம் மணி.

`பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் முக்கியமான எல்லா கேரக்டர்களும் டீசர், ட்ரெய்லர், ஆடியோ லாஞ்ச் என்று அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டாலும், ரசிகர்களுக்கு மேலும் சில ஆச்சர்யங்கள் இருக்கலாம் என்று சொல்கிறது பட வட்டாரம். கல்கியின் `பொன்னியின் செல்வன்’ நூலில் வரும் சிறு சிறு கதாபாத்திரங்கள்கூட வாசகர்களை நெகிழ, சிரிக்க, லயிக்கவைக்கும். அதே மாஜிக் திரையிலும் இருக்கவேண்டி சில கதாபாத்திரங்களுக்கு முக்கியமான குணச்சித்திர நடிகர்களைப் போட்டிருக்கிறாராம் இயக்குநர்.

மிஸ்டர் மியாவ் - பொன்னியின் செல்வன் ஸ்பெஷல்
மிஸ்டர் மியாவ் - பொன்னியின் செல்வன் ஸ்பெஷல்

படத்தில் நடிகர், நடிகைகள், துணை நடிகர்கள் என்று கதாபாத்திரங்கள் அணிந்திருக்கும் நகைகள், வைரங்கள் உட்பட எல்லாமே ஒரிஜினல் நகைகள்! ஸ்பான்சர்ஷிப் வாங்கி, இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் மணி ரத்னம். காட்சி ஆரம்பிக்கும்போது நகைகளைக் கொடுத்து, காட்சி முடிந்ததும் வாங்கிவைத்துவிடுவார்களாம். இதற்காகவே செட்டில் ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு நபர், பெரிய பெட்டியுடன் நியமிக்கப்பட்டிருந்திருக்கிறார்கள்!

ஆர்ட்டிஸ்ட் யாருமே `பொன்னியின் செல்வன்’ படிக்கக் கூடாது என்பதுதான் மணி ரத்னம் ஆரம்பத்திலேயே இட்ட கட்டளை. ஸ்கிரிப்ட் மட்டும் படித்து அதில் இருப்பதைச் செய்தால் போதும் என்று சொல்லியிருக்கிறார். மொத்தமாக `பொன்னியின் செல்வன்’ நில அமைப்பு, கதாபாத்திரங்கள் அடங்கிய பெரிய மேப் ஒன்றை வைத்துக்கொண்டு ஒவ்வொருவருக்கும் அதை மட்டும் காட்டிச் சொல்லி, “இதில் நீங்கள் இன்னார். அவ்வளவுதான்” என்று சொல்லிவிட்டார். வந்தியத்தேவன், ஆதித்த கரிகாலன், குந்தவை, நந்தினி உள்ளிட்ட முக்கியமான சில கதாபாத்திரங்களுக்கு மட்டும் அவர்களின் பாத்திரம் என்ன, யாராருடன் அவர்களுக்குக் காட்சிகள் என்பதை விளக்கும் வகையில் படக்குழு தயாரித்த ஒரு புத்தகம் வழங்கப்பட்டிருக்கிறது. அதை மட்டும் படிக்கச் சொல்லியிருக்கிறார் மணி. ஒரிஜினல் `பொன்னியின் செல்வனை’ப் படித்துவிட்டால் அவர்களாக ஒரு முக பாவம் காட்டி நடித்து, தான் நினைத்த மாதிரி வராது என்பதால் இந்த கண்டிஷனாம்.

மிஸ்டர் மியாவ் - பொன்னியின் செல்வன் ஸ்பெஷல்
மிஸ்டர் மியாவ் - பொன்னியின் செல்வன் ஸ்பெஷல்

கலை இயக்குநர் தோட்டா தரணி, 28 வருடங்களுக்குப் பிறகு கைகோத்தாலும் மணியின் ரசனைக்கேற்ப பணிபுரிந்து செட்டிலுள்ள எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். `லதா மண்டபம்’ என்ற மண்டபத்தைத்தான் முதலில் செட் போட்டிருக்கிறார் தோட்டா தரணி. உண்மையாகவே அந்தக் காலத்தில் பனையோலை, தோல்... என எதில் எழுதினார்கள், தூண்களின் அமைப்பு எப்படி இருந்தது என்பதையெல்லாம் ஆராய்ந்து உருவாக்கப்பட்டிருக்கிறது அந்த செட். படத்தில் கலை இயக்கம் பெரிதும் பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர்.

மிஸ்டர் மியாவ் - பொன்னியின் செல்வன் ஸ்பெஷல்
மிஸ்டர் மியாவ் - பொன்னியின் செல்வன் ஸ்பெஷல்

ஜெயம் ரவி, கார்த்தி உட்பட எல்லாருமே குதிரையேற்றத்தில் கைதேர்ந்தவர்கள்தாம். சென்னையில் ஷூட்டிங்கில் குதிரைமீது வரும் காட்சிகள் முடிக்கப்பட்டு, வேறு ஒரு ஷெட்யூலுக்காக தாய்லாந்துக்குச் சென்றிருக்கிறது படக்குழு. அங்கேயும் குதிரையில் பயணப்படும் காட்சிகள் இருந்திருக்கிறது. ஆனால், சென்னையில் பழக்கப்பட்ட குதிரைகள் வரவழைக்கப்படவில்லை. தாய்லாந்தின் குதிரைகளைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். விஷயம் என்னவென்றால் தாய்லாந்தின் குதிரைகளைச் செலுத்தும் முறையே வேறாம். வெஸ்டர்ன் ரைட், இங்கிலீஷ் ரைட் என்றெல்லாம் இருக்கும் வகைகளில் தாய்லாந்து குதிரைகளை கௌபாய் ரைடு மூலம்தான் செலுத்த முடியுமாம். கார்த்தி, ஜெயம் ரவி உட்பட நடிகர்கள் அதையும் துரித வேகத்தில் கற்று, நடித்து முடித்து மணி ரத்னத்திடம் `சபாஷ்’ வாங்கியிருக்கிறார்கள்!